முன்வைத்த காலை பின்னால் எடுக்கேன்! – அமைச்சர் சஜித் பிடிவாதம்

“குறுக்கு வழியில் ஒருபோதும் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள மாட்டேன். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ள தீர்மானத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்கவும் மாட்டேன். ஐக்கிய தேசியக் கட்சிக்காக சேவைகள் செய்துள்ள என்னை ஆதரிப்பதில் தலைமைத்துவம் தயக்கம் கொள்ளும் பின்னணி அறியப்படவில்லை.”

– இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டும் என்று தற்போது அடிமட்டத்தில் இருந்து ஆதரவுக் குரல் எழும்பியுள்ளது. ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கும் அனைத்துத் தகுதிகளும் எனக்கு உண்டு. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இதர கட்சிகளின் தீர்மானங்கள் அவர்களின் தனிப்பட்ட தீர்மானமாகும். ஆனால், அரசியல் களத்தில் நாட்டு மக்களுக்கு உண்மை நிலவரங்கள் எடுத்துரைக்கப்பட வேண்டும்.

அரசியல் மற்றும் மக்கள் சேவைகளில் இருந்து மிக தொலைவில் உள்ளவர்களே இன்று மக்களாணையைப் பெற முயற்சிக்கின்றார்கள். ஆனால், நான் அவ்வாறு அல்ல. எனது தந்தையாரான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச கட்சிக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் சேவையாற்றி உயிர்த் தியாகம் செய்தார். அவர் வழியிலே நானும் அரசியல் பணியைத் தொடர்ந்துள்ளேன். பல்லாயிரக்கணக்கான மக்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆகியோரின் அரசியல் தீர்மானங்கள் ஒருமித்துக் காணப்படும்போது கட்சித் தலைமைத்துவம் மக்களின் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்களின் அரசியல் அபிப்பிராயங்களைச் செயற்படுத்துவதில் தயக்கம் காட்டும் பின்னணியை அறியமுடியவில்லை.

மக்களின் அரசியல் தீர்மானமே நெறிப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காகவே நாடு தழுவிய ரீதியில் தொடர் மக்கள் சந்திப்புக்கள் இடம்பெறுகின்றன. ஐக்கிய தேசியக் கட்சியைப் பலவீனப்படுத்தி அதிகாரத்துக்கு வரும் நோக்கம் ஒருபோதும் கிடையாது. இன்று பலருக்கு யதார்த்த அரசியல் நிலமையும், கடந்து வந்த அரசியல் பாதைகளும் மறக்கப்பட்டுள்ளன.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அரசமைப்புக்கு முரணாக ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டமை யாவரும் அறிந்ததே. நெருக்கடி வேளையில் பலமுறை பிரதமர் பதவியைப் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வற்புறுத்தியபோது நான் மறுத்தேன். அதற்குக் காரணம் பிரதமர் பதவிக்கு நான் தகைமையற்றவன் என்ற அர்த்தத்தில் அல்ல. அந்தப் பதவியைப் பெற்றுக்கொள்ளக் கூடாது என்பதே ஆகும்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்களின் பெரும்பான்மையான ஆதரவுடனே தெரிவு செய்யப்பட்டார். ஆகவே, அவரே அந்தப் பதவியை வகிக்க வேண்டும்.

குறுக்கு வழியிலோ சூழ்ச்சியினாலோ ஒருபோதும் அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் கிடையாது. மக்களின் ஆதரவு எனக்கு முழுமையாகக் காணப்படுகின்றது. மக்கள் ஆணையின் ஊடாகவே உயர் பதவியைப் பெறுவேன். இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. தற்போது முன்னெடுத்துள்ள இப்போராட்டத்தில் இருந்து சிறிதேனும் பின்வாங்க மாட்டேன்.

2015ஆம் ஆண்டு நாட்டில் பேச்சு சுதந்திரம், அரசியல் சுதந்திரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாட்சியில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டும் இந்த நிலைமையே தொடரும். ஐக்கிய தேசியக் கட்சி நாட்டு மக்களுக்குச் சிறந்த அபிவிருத்திகளையே தொடர்ந்து முன்னெடுக்கும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *