‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கண்காட்சியில் மஹிந்த ஆட்சியின் கொடூரத்தை வெளிப்படுத்திய விவரணப் படம்

‘இருளின் பேய் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது! யாழ்ப்பாணத்து மக்களே நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றுசேருங்கள்!!’ என்ற கோரிக்கை என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சியில் விடுவிக்கப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா தேசியக் கண்காட்சி நேற்று மாலை 4.30 மணிக்கு ஆரம்பமானது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர அந்தக் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில், வங்கிகளுக்காக அமைக்கப்பட்ட காட்சிக் கூடத்தைப் பிரதமர் தலைமையிலான குழுவினர் பார்வையிட்டனர். தொடர்ந்து திரையரங்கு போன்ற காட்சிக் கூடத்துக்குள் சென்றனர்.

அங்கு விவரணப் படம் வெளியிடப்பட்டது. அந்தப் படம் கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் நடைபெற்ற கொடுமைகள், கொடூரங்கள், படுகொலைகள், வெள்ளைவான் கடத்தல்கள், கைதுகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள், ஊழல், அதிகார முறைகேடுகள் போன்றவற்றை வெளிப்படுத்தும் விதத்தில் அமைந்திருந்தது.

குடும்ப ஆட்சி என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவையும், அவரது சகாக்களையும் அந்தப் படம் குறிப்பிட்டிருந்தது. அந்த ஆட்சியிலிருந்து கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற அபிவிருத்திகள் பற்றிக் குறிப்பிடப்பட்டது.

ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமை, என்ரர்பிரைஸ் ஸ்ரீலங்கா, அரச ஊழியர்களுக்காக சம்பள அதிகரிப்பு, எரிபொருள் விலைக்குறைப்பு போன்ற விடயங்கள் பற்றிக் கூறியது. ‘இருளின் பேய் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது! நாட்டைக் கட்டியெழுப்ப யாழ்ப்பாணத்து மக்களே ஒன்றுசேருங்கள்!!’ என்ற அறைகூவல் அந்தப் படத்தில் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை இராணுவத்தினர், பொலிஸ் உயர் அதிகாரிகளுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், யாழ். மாநகர முதல்வர் ஆனோல்ட் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் ஆகியோர் பார்வையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *