ராஜபக்சக்களைத் திருப்திப்படுத்தவே சவேந்திர புதிய தளபதியாக நியமனம்! – மைத்திரியின் ஆட்டம் வெகுவிரைவில் அடங்கும் என்கிறார் பொன்சேகா

“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ராஜபக்சக்களைத் திருப்திப்படுத்தவே ஆட்டம் போடுகின்றார். இவரின் ஆட்டங்கள் எல்லாம் வெகுவிரைவில் அடங்கியே தீரும். சவேந்திர சில்வாவுக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் பாரதூரமான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு லெப்.ஜெனரல் என்ற பதவி உயர்வுடன் இராணுவத் தளபதி என்ற உயர் பதவியையும் ஜனாதிபதி வழங்கியுள்ளார். இதனால் ஒட்டுமொத்த இராணுவத்துக்கும் அபகீர்த்தி ஏற்பட்டுள்ளது.”

– இவ்வாறு முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:-

“சவேந்திர சில்வாக்கு எதிராக பல தரப்பினராலும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு இராணுவத் தளபதி பதவி வழங்கி மதிப்பளித்துள்ளார் மைத்திரி. இதற்கு சர்வதேச மட்டத்திலிருந்து எதிர்ப்புக்கள் வரும் என்று தெரிந்திருந்தும் வேண்டுமென்றே மைத்திரி செயற்பட்டுள்ளார்.

ராஜபக்சக்களின் சகாவாக சவேந்திர சில்வா விளங்குகின்றார். இந்தநிலையில், அவர்களின் நிகழ்ச்சி நிரலுக்கேற்பவும், அவர்களைத் திருப்திப்படுத்தும் வகையிலும் மைத்திரி தமது ஒவ்வொரு செயற்பாட்டையும் முன்னெடுத்து வருகின்றார்.

இராணுவத்தில் இராணுவத் தளபதி என்ற உயர் பதவிக்குப் பலர் தகுதியானவர்களாக இருக்கின்றபோது பாரிய குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாக்கியுள்ள சவேந்திர சில்வாவுக்கு அந்தப் பதவியை எந்தத் துணிவுடன் மைத்திரி வழங்கினார்? நிறைவேற்று அதிகாரத்தை இவர் முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளார்.

சர்வதேச சமூக்கத்துக்குச் சவால் விடும் வகையிலேயே ஜனாதிபதி மைத்திரி செயற்படுகின்றார். இவர் அவமானப்பட்டுக்கொண்டு விடைபெறும் காலம் நெருங்கிவிட்டது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *