தொல்பொருள் திணைக்களம் மீது அமைச்சர் மனோ கோபாவேஷம்! – வரலாற்றை திரிக்கவேண்டாம் என பணிப்பாளருக்கு கடும் எச்சரிக்கை

“வடக்கு – கிழக்கில் காணக்கிடக்கும் பெளத்த சின்னங்கள் எல்லாமே, சிங்கள பெளத்த சின்னங்கள் என முடிவு செய்ய வேண்டாம். 2ஆம்,3ஆம் நூற்றாண்டுகளில் தமிழகத்திலும், வடக்கு – கிழக்கிலும் தமிழர் மத்தியில் பெளத்தம் பரவி விரவி இருந்தது என்பது வரலாறு. ஆகவே, இந்நாட்டின்வரலாறு ஒரு இன மதத்துக்கு மாத்திரம் சொந்தமானது எனத் தீர்மானிக்க வேண்டாம். அப்படியானால் இந்நாட்டில் தேசிய ஒருமைப்பாட்டை என்னால் முன்னெடுக்க முடியாது.”

– இவ்வாறு தொல்பொருளாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம், நாடாளுமன்ற வளாகத்தில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற மத நல்லிணக்க தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் கூறினார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய, முஸ்லிம் விவகார அமைச்சர் ஹலீம், கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க, திருகோணமலை பிரதேச பொலிஸ் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், தொல்பொருளாராய்ச்சி திணைக்களப் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மண்டாவெலவிடம் சாரமாரியாகக் கேள்விகளைக் கேட்டனர்.

“திருகோணமலையில் பொலிஸாரின் நேரடி ஆதரவுடனேயே திருகோணமலை தென்னமாவாடியில் புத்தர் சிலை வைக்கப்பட்டது. அந்தச் சிலை வைப்புக்கு தொல்பொருள் திணைக்களம் துணை செய்கின்றது. இதை நாம் அனுமதிக்க முடியாது. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும் சமயத்தில் எப்படி ஒரு பெளத்த தேரர் அங்கே புத்தர் சிலையை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்?” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தொல்பொருள் திணைக்களப் பணிப்பாளர் நாயகம், திருகோணமலை பிரதேச பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரிடம் கேள்வி எழுப்பினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *