கூட்டமைப்பை எவரும் உடைத்துவிட முடியாது! – செல்வம் எம்.பி. திட்டவட்டம்

“எமது மக்களின் சக்தியாக விடுதலைப்புலிகளின் அமைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. எங்கள் மக்களின் விடுதலை என்ற நோக்கத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே, நாங்கள் அதன் ஊடாகப் பயணிக்க வேண்டும்.”

– இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்.

அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்றுவரை தன்னகத்தே சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது. மூன்று கட்சிகள் இன்று வரை அந்தக் கட்சியிலே இருந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் தமிழ் மக்கள் பேரவையுடன் இணைந்திருக்க முடியும். தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று இல்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உறுவாக்கினவர்கள் என்ற நிலையிலே கூட்டமைப்புக்குள் பிரச்சினைகள் எழுந்தாலும் அதனை தக்க வைக்கவேண்டும் என்ற உணர்வோடு செயற்படுகின்ற கட்சியாக நாங்கள் உள்ளோம்.

எமது மக்களின் சக்தியாக விடுதலைப் புலிகளின் அமைப்போடு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது.

எங்களுடைய மக்களின் விடுதலை என்ற நோக்கத்துக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே, நாங்கள் அதன் ஊடாகப் பயணிக்க வேண்டும்.

இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சுற்றி எத்தனை எதிரிகள். சிங்கள சக்திகள் எங்களுடைய எதிரிகள் என்று பார்த்தால் தமிழ் தரப்பும் உள்ளது.

இன்று ஒவ்வொருவரும் கட்சிகளை ஆரம்பிக்கின்றார்கள். அவர்களின் பேச்சைப் பார்த்தால் தென்னிலங்கையை அவர்கள் தாக்குவது இல்லை. இராணுவத்தை தாக்கிக் கதைப்பது இல்லை. அரசை விமர்சிப்பது இல்லை. ஆனால், அவர்கள் விமர்சனம் செய்கின்ற ஒரே ஒரு கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான்.

ஆனால், நாங்கள் என்றைக்கும் விலைபோனவர்கள் இல்லை. கொள்கையில் உறுதியாக இருக்கின்றோம். தமிழருக்கான நிரந்தர தீர்வு கிடைக்கும்வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயக வழியில் அயராது போராடும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *