இந்திய மக்களவைத் தேர்தல் இன்று

உலகின் ஜனநாயக திருவிழாவாக கருதப்படும் இந்திய மக்களவைத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இன்று வெள்ளிக்கிழமை (19)ஆரம்பமாகவுள்ளன.

முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 6 மணி வரை இடம்பெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வாக்குப்பதிவு நிறைவடையும் நேரம் தொகுதிக்கேற்ப மாறுபடலாம் எனவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முதற்கட்டத் தேர்தல் வாக்குப்பதிவுகள் 17 மாநிலங்கள் 102 தொகுதிகளில் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், திரிபுரா, உத்தரப் பிரதேசம் , உத்தராகண்ட், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, புதுச்சேரி, அந்தமான், நிக்கோபார், ஜம்மு – காஷ்மீர், இலட்சத்தீவு ஆகிய யூனியன் பிரதேசங்களிலும் இன்று தேர்தல் நடைபெறவுள்ளது.

தமிழ் நாடு

2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் சுமார் 6 கோடியே 23 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காக தமிழகத்தில் 44,800 வாக்களிப்பு நிலையங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்படவுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்திருந்தார்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் ஆதார், வங்கிக் கணக்கு புத்தகம், மருத்துவக் காப்பீடு அட்டை மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்தி வாக்களிக்கலாம் முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ஏற்பாடுகள்

மக்களவைத் தேர்தலுக்காக தனியார் நிறுவனங்கள் ஊழியர்களுக்கு இன்று விடுமுறையளிக்க வேண்டும் என இந்திய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் தேர்தலில் வாக்களிப்பதற்கு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நேற்றும் இன்றும் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவுகளுக்கான திகதி

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளதுடன் இன்று (19) 102 தொகுதிகளிலும் எதிர்வரும் 26 ஆம் திகதி 89 தொகுதிகளிலும் வாக்கப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

அத்துடன் மே மாதத்தில் 07 ஆம் திகதியன்று 94 தொகுதிகளிலும் 13ஆம் திகதி 96 தொகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து 20 ஆம் திகதியன்று 49 தொகுதிகளிலும் 25 ஆம் திகதியன்று 57 தொகுதிகளிலும் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளன.

இதேவேளை, ஜூன் மாதம் முதலாம் திகதியன்று 57 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *