வேலைநிறுத்தப் போராட்டங்களுக்கு தயாராகும் தொழிற்சங்கங்கள்:பல்வேறு துறைகள் முடங்கும் அபாயம்

தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, கிராம அலுவலர் உள்ளிட்ட பல்வேறு அரச துறையை உள்ளடக்கிய தொழிற்சங்கங்களினால் இவ்வாறு வேலைநிறுத்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இந்த நிலையில், பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.

சம்பள முரண்பாட்டை தீர்த்தல், கல்விச் சுமையை பெற்றோர்களிடம் இருந்து அகற்றுதல், கற்றல் உபகரணங்களின் விலையைக் குறைத்தல், ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கு பதவி உயர்வு வழங்குத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

கல்வி அமைச்சு மற்றும் நிதி அமைச்சு இந்த கோரிக்கைகளுக்கான தீர்வை புதுவருடப் பிறப்பின் பின்னர் வழங்காத நிலையில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், ஆசிரியர்களின் தொழில்சார் மீளாய்வு நடவடிக்கைகளை எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்ய வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவ்வாறு இல்லாத நிலையில் எதிர்வரும் கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை நிறைவடைந்ததும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சுகாதார அமைச்சு உறுதியளித்தபடி, சுகாதார சங்கங்களின் கொடுப்பனவு பிரச்சினைக்கு தீர்வு காண சுற்றுநிருபம் வெளியிடப்பட வேண்டும் எனவும், அவ்வாறு இல்லாத நிலையில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதனிடையே, அரசாங்கத்தின் அரிசி விநியோக வேலைத்திட்டம் உள்ளுர் அரசியல்வாதிகளின் தலையீடு இன்றி முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளிக்காவிட்டால், கிராம உத்தியோகத்தர்கள் குறித்த வேலைத்திட்டத்திலிருந்து விலகிக்கொள்வதற்கு தீர்மானித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

மேலும், இலங்கை போக்குவரத்துச் சபை ஊழியர்களின் நிலுவைத் தொகையை வழங்குவதாக எழுத்து மூலம் உறுதியளித்துள்ள போதிலும் இதுவரை வழங்கப்படவில்லை எனவும், கொடுப்பனவுகள் வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பிக்க வேண்டியிருக்கும் எனவும் அகில இலங்கை போக்குவரத்து ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *