அமைச்சர்களை அதிகரிப்பதற்கு சபையில் இன்று தீர்மான வரைவு! – கூட்டு அரசு என்ற கோதாவில் ஐ.தே.க. நடவடிக்கை

அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும், தீர்மானம் வரைவு நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை முன்வைக்கப்படவுள்ளது. அமைச்சரும், சபை முதல்வருமான லக்ஸ்மன் கிரியெல்லவால் இந்த வரைவு சமர்பிக்கப்படவுள்ளது என நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

“நாடாளுமன்றத்தில் ஆகக் கூடுதலான ஆசனங்களைப் பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியினால் கூட்டு அரசு ஒன்று நிறுவப்பட்டுள்ளதால் அரசமைப்பின் 46(4) உறுப்புரையின் பிரகாரம் அமைச்சரவை அமைச்சர்களினது எண்ணிக்கை 48ஐ விட விஞ்சாதவாறு இருத்தல் வேண்டும் எனவும், அமைச்சரவை உறுப்பினர்கள் அல்லாத அமைச்சர்களினதும், பிரதி அமைச்சர்களினதும் எண்ணிக்கை 45 ஐ விட விஞ்சாதவாறு இருத்தல் வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தினால் தீர்மானிக்கப்படுகின்றது” என்று முன்வைத்துள்ள வரைவில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து 2015ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கூட்டு அரசை நிறுவின. 2018ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி அரசியல் புரட்சியுடன், கூட்டு அரசு முறிந்தது. ஐக்கிய தேசியக் கட்சி அரசு கடந்த வருடம் டிசம்பரில் மீண்டும் பதவியேற்றது. 19ஆவது அரசமைப்புக்கு அமைவாக 30 பேர் அமைச்சர்களாகப் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

அமைச்சுப் பதவிகளை அதிகரித்துக் கொள்வதற்கான தீர்மானம் நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு கடந்த காலத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி முயற்சித்திருந்தது. இருப்பினும் அது வெற்றியளிக்கவில்லை. அதனை மீண்டும் நாடாளுமன்றத்தில் இன்று முன்வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

19ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படும்போது, நாடாளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற முதலாவது கட்சியும், இரண்டாவது கட்சியும் இணைந்து கூட்டு அரசு அமைக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எதிர்ப்பு வெளியிட்டது. குறிப்பாக தினேஷ் குணவர்தன, ஜி.எல்.பீரிஸ் போன்றவர்கள் கடுமையாக எதிர்த்திருந்தனர். இதன் பின்னர், நாடாளுமன்றத்தில் அதிகூடிய ஆசனங்களைப் பெற்ற முதலாவது கட்சி, எந்தவொரு கட்சியுடனும் கூட்டு அரசு அமைக்கலாம் என்று மாற்றப்பட்டு சட்டவரைவு நிறைவேற்றப்பட்டது.

இதற்கு அமைவாக, ஐக்கிய தேசியக் கட்சி, ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் (ஏனைய முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிட்டு தெரிவானவர்கள்) கூட்டு அரசு அமைத்துள்ளதாகக் காட்டிக் கொண்டு அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் தீர்மான வரைவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கின்றது.

நாடாளுமன்றத்தில் தீர்மான வரைவு வாக்கெடுப்புக்கு விடப்படுகின்றபோது, சபையில் இருக்கின்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பெரும்பான்மையைப் பெற்றாலே, தீர்மான வரைவு நிறைவேறியதாக அறிவிக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *