வங்குரோத்து நிலையிலும் அமைச்சர்களுக்கு கோடியில் சம்பளம்

வற் (VAT ) வரி அதிகரிப்பினால் நாட்டு மக்களிடையே பாரிய பொருளாதார சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.

அசாதாரண ரீதியாக அதிகரித்து வரும் பொருட்களின் விலை, மின்சார கட்டண அதிகரிப்பு , எரிவாயுவின் விலை அதிகரிப்பு போன்றவற்றால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

இது இவ்வாறு இருக்க, டிசம்பர் மாதத்தில் அமைச்சர்களுக்கான சம்பளம் 8 கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பிரதான வார இதழ் ஒன்றில் முக்கிய செய்தியாக பிரசுரிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் தொடர்பிலான விவாதம் இடம்பெற்ற கடந்த டிசம்பர் மாதத்தில் மாத்திரம் நாடாளுமன்ற அமைச்சர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் சுமார் 8 கோடியை தாண்டியுள்ளதாக நாடாளுமன்ற நிதிப்பிரிவு அறிக்கையிட்டுள்ளது .

அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் 58 பேர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் சம்பளம் , சாரதி , உபசரிப்பு கொடுப்பனவுகள் என்பன நாடாளுமன்றம் மூலம் செலுத்தப்படாத காரணத்தினால் அவற்றிற்காக செலவழிக்கப்பட்ட தொகை இதனுள் உள்ளடங்கவில்லை எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட செலவுகளை தவிர்த்து அவர்களின் மாதாந்த அலுவலக கொடுப்பனவுகள், எரிபொருள் கொடுப்பனவு , தொலைபேசி கட்டண கொடுப்பனவுகள் , போக்குவரத்து கொடுப்பனவுகள் , வருகைக்கான கொடுப்பனவு உள்ளிட்டவை மற்றும் அமைச்சர்களின் சம்பளம் போன்றவற்றுக்காக இத்தொகை செலவிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை மாவட்ட உறுப்பினர் ராஜிகா விக்கிரமசிங்கவுக்காக அதிகளவான தொகை செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவரின் சம்பளம் 54, 285 ரூபாய் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளுடன் சேர்த்து 4, 83,054.15 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கு நாடாளுமன்ற கொடுப்பனவாக 3, 08,416.26 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு நாடாளுமன்ற கொடுப்பனவாக 3, 08,416.26 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரி பால சிரிசேன இருவருக்கும் முறையே 3,98,054.15 ரூபாய் மற்றும் 4, 49,907.04 ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் தொடர்பில் அறிக்கையொன்று கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து , 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய விபரங்கள் அடங்கிய அறிக்கை நாடாளுமன்ற நிதிப் பிரிவு தலைவர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *