விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்

அக்டோபர் 13, 1972 அன்று மான்டிவிடியோவை சேர்ந்த ஓல்ட் கிறிஸ்டியன்ஸ் கிளப் பள்ளியைச் சேர்ந்த ரக்பி அணி, சிலியின் சாண்டியாகோவுக்கு செல்ல உருகுவே விமானப்படை விமானத்தை வாடகைக்கு எடுத்திருந்தது.

அந்த நகரத்தில் உள்ள ஓல்ட் பாய்ஸ் குழுவுக்கு எதிரான போட்டியில் அவர்கள் விளையாட இருந்தனர். ஆனால், அவர்களோடு சேர்த்து 45 பேரோடு பயணித்த எப்எச் – 227D விமானம் ஆண்டெஸ் மலைகளின் மேல் பறந்து கொண்டிருந்தபோது விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே 12 பேர் உயிரிழக்க நேர்ந்தது.

இதர 17 பேர் அடுத்தடுத்த நாட்களில் காயம் காரணமாகவும், உணவு இல்லாமை மற்றும் அங்கிருந்த அசாதாரண நிலைமைகளாலும் உயிரிழந்தனர். இந்த விபத்து வரலாற்றில் “தி மிராக்கில் ஆஃப் ஆண்டெஸ்” என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில்கூட “தி ஸ்னோ சிட்டி” என்ற பெயரில் படமாகவும் வெளிவந்துள்ளது.

விமான போக்குவரத்து வரலாற்றில் இது மிகவும் அதிர்ச்சியூட்டும் விஷயம். காரணம் இதிலிருந்து தப்பித்த மீதி 16 பேரும், விபத்தில் இறந்து போன சக நண்பர்களின் பிணங்களைத் தின்று பிழைத்திருந்தனர். அவர்கள் அனைவரும் விபத்து நடந்து 72 நாட்கள் கழித்தே மீட்கப்பட்டனர்.

மீட்கப்பட்டவர்களில் ஒருவரான ராபர்டோ கேனெஸ்ஸா தற்போது குழந்தைகள் இதய மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற இதய மருத்துவராக உள்ளார்.

மார்ச் 2016இல் அவர் எழுதிய “நான் உயிர் பிழைக்க வேண்டும்: ஆண்டெஸ் மலையில் ஏற்பட்ட விமான விபத்து எவ்வாறு உயிர்களைக் காக்க என்னைத் தூண்டியது,” புத்தகத்தை அவர் வெளியிட்ட நேரத்தில், பிபிசியின் விக்டோரியா டெர்பிஷையர் நிகழ்ச்சி அவரை நேர்காணல் செய்தது.

  • விமான விபத்தில் பிழைத்தவரின் வாக்குமூலம்
விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரார்ட்டோ கேனெஸ்ஸா 1974

இதுவே அவரது சாட்சியம்.

“நாங்கள் ஆண்டெஸ் மலைக்கு மேலே பறந்து கொண்டிருந்தோம். அப்போது அங்கு மேகமூட்டமாகக் காணப்பட்டது. திடீரென்று , ஒரு விமான ஊழியர் பயணிகளை ‘உங்கள் சீட் பெல்ட்களை வேகமாக அணிந்து கொள்ளுங்கள், நாம் மேகங்களுக்கு நடுவே செல்ல இருப்பதால், விமானம் குலுங்கப் போகிறது’ என்று கூறினார்.

உடனடியாக விமானமும் குலுங்கத் தொடங்கியது. யாரோ ஒருவர் என்னை ஜன்னல் பகுதியைப் பார்க்க சொன்னார், நாங்கள் மலைகளுக்கு மிக அருகில் பறந்து கொண்டிருந்தோம். உடனே சிலர் ‘நான் சாகக்கூடாது’ என்று சொல்லத் தொடங்கினர்.

விமானம் உயரத்திற்குப் பறக்க முயற்சி செய்தது, ஆனாலும் விபத்தில் சிக்கிக் கொண்டது. நான் என்னுடைய இருக்கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டேன். விமானம் தனது இரண்டு இறக்கைகளையும் இழந்து மலைகளில் சறுக்கத் தொடங்கியது.

இறுதியில் அது நின்றபோது, எனக்கு முன்னாள் இருந்த பாறையின் மீது மிக வேகமாக நான் பறந்துபோய் விழுந்தேன். எனது தலை கடுமையாக இடித்துக் கொண்டதில் எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது. விமானம் நின்றுவிட்டதை என்னால் நம்பவே முடியவில்லை.

என்னுடைய கை, கால்கள் இன்னமும் அங்கேயே இருப்பதை என்னால் பார்க்க முடிந்தது. ஆம் நான் பிழைத்துவிட்டேன்.”

  • விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்

பட மூலாதாரம்,COURTESY

“என்னால் அதை நம்பவே முடியவில்லை. சுற்றிப் பார்த்தால் எல்லாமே மோசமாக நொறுங்கிக் கிடந்தது. சில நண்பர்கள் இறந்திருந்தனர், மற்றவர்கள் காயமடைந்திருந்தனர், ரத்தம் வடிந்து கொண்டிருந்தது. சிலரின் உடம்பில் உடைந்த உலோகத் துண்டுகள் குத்திக் கொண்டிருந்தது.

நான் இங்கிருந்து வெளியே போக வேண்டும், காவல்துறை வந்துவிடும், அவசர ஊர்தி, தீயணைப்பு வீரர்கள் வந்து விடுவார்கள் என்றெல்லாம் எனக்கு நானே சொல்லிக்கொண்டு விமானத்தின் வால் பகுதிக்குச் சென்றுவிட்டேன்.

விமானம் உடைந்திருந்தது, வெளியே நான் பனியால் சூழப்பட்டிருந்தேன். அமைதி நிறைந்த மலைகளுக்கு நடுவில் நாங்கள் மாட்டிக்கொண்டதால் நான் மிகவும் சோகமாக உணர்ந்தேன்.”

  • உடலை வாட்டிய கொடூரப் பசி
விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்

பட மூலாதாரம்,URUGUAYAN AIR FORCE

படக்குறிப்பு,“அங்கிருந்த அதீத குளிரால் நாங்கள் உறைந்து போயிருந்தோம்”

“அங்கு தீயணைப்பு வீரர்களும் இல்லை, உதவி எதுவுமே இல்லை. விமானி உயிரோடுதான் இருந்தார், ஆனால் விமானி அறைக்குள் சிக்கிக் கொண்டிருந்தார். அங்கிருந்தவர்களால் அவரை வெளியே கொண்டு வர முடியவில்லை.

அப்போது அவர் தன் பெட்டியில் துப்பாக்கி இருக்கிறது என்று சொன்னார். அவர் தற்கொலை செய்துகொள்ள நினைத்தார். இரவு முழுவதும் வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். ஆனால், எங்களால் அவரை வெளியே எடுக்கவே முடியவில்லை.

அங்கிருந்த அதீத குளிரால் நாங்கள் உறைந்து போயிருந்தோம். அடுத்த நாள், மிகவும் மோசமாகக் காயமடைந்த ஒருவர் இறந்துவிட்டார். அது எனக்கு நல்லதாகவே தோன்றியது, காரணம் அவருக்கு வலி பொறுத்துக்கொள்ள முடியாததாக இருந்தது.

பிழைத்திருந்த மற்றவர்களுக்கு வெறும் பனியும், பாறைகளும் மட்டுமே இருந்தது. வேற எதுவுமே உண்பதற்கு இல்லை. எங்களுக்கு மிகவும் மோசமான பசி மட்டும் இருந்தது.

கொடூரமான பசியில் இருக்கும்போது உங்களின் உள்ளுணர்வு எதையாவது சாப்பிடு என்று சொல்லிக் கொண்டே இருக்குமல்லவா? அதனால் காலணிகளின் லெதர் அல்லது பட்டைகளை உண்ணலாமா என்று நாங்கள் யோசித்தோம்.

அதனால் காலணியின் லெதரை மெல்லத் தொடங்கினோம். ஆனால் அதில் அதிகமான ரசாயனங்கள் இருக்கும் என்பதால் அது எங்களுக்கு விஷமாக மாறக்கூடும் என்று நாங்கள் உணர்ந்தோம். அதைத் தவிர அந்த நேரத்தில் எங்களிடம் உண்ண வேறு எதுவுமே இல்லை.”

“ஒருகட்டத்தில் அங்கிருந்த ஒருவர் ‘எனது மனநலம் பாதிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். ஏனென்றால் நமது நண்பர்களின் உடலை உண்ணலாம் என்று எனக்குத் தோன்றுகிறது,’ என்று கூறினார்.

உடனே அங்கிருந்தவர்கள் அது முட்டாள்தனம், நாம் அதைச் செய்யக்கூடாது, நாம் நரமாமிசம் உண்பவர்களாக மாறக்கூடாது என்று அவருக்குப் பதிலளித்தனர்.”

  • விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,“எனது நண்பர்கள் உயிர் வாழ எனது உடல் உதவியாக இருக்குமானால் நான் பெருமையாக உணர்ந்திருப்பேன்.”

“அந்த நேரத்தில் நான் ஒரு மருத்துவ மாணவன் மற்றும் அந்த உடல்கள் அப்போது இறைச்சி, கொழுப்பு, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட்டாக மட்டுமே தெரிந்தது.

எனது நண்பர்களின் தனியுரிமையை மீறி அவர்களின் உடலின் பாகங்களை வெட்டுவது எனக்கு மிகவும் கடினமானதாக இருந்தது. அங்கிருந்தவர்களில் யாரோ ஒருவர், இயேசு கிறிஸ்து தனது லாஸ்ட் சப்பரில் ‘என்னுடைய உடல் மற்றும் ரத்தத்தை எடுத்துக்கொள்’ என்று சொன்னால் மட்டும் பரவாயில்லையா?’ என்று கத்தினார்.

ஆனால் எனக்கோ அது லாஸ்ட் சப்பர் கிடையாது. இதே நான் அங்கிருந்த பிணங்களில் ஒன்றாக இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பேன் என்று சிந்தித்தேன். எனது நண்பர்கள் உயிர் வாழ எனது உடல் உதவியாக இருக்குமானால் நான் பெருமையாக உணர்ந்திருப்பேன். இன்றும் எனது நண்பர்களின் ஒரு பகுதி எனக்குள் இருப்பது போன்று நான் உணர்கிறேன். மேலும் அவர்களுக்கு நன்றியுள்ளவனாக உணர்கிறேன்.

உடல்களை உண்டு மீட்கப்படும் வரை பிழைத்திருப்பது ஒரு சிலருக்கு மற்றவர்களைவிட மிகக் கடினமாக இருந்தது. அது ஒரு மனித சோதனை என்று நான் அடிக்கடி நினைப்பேன். பின்னால் பிழைத்திருந்தவர்களோடு இறைச்சியைப் பகிர்ந்து கொள்வது வழக்கமாகிவிட்டது.”

  • விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்
விபத்து நடந்து 40 ஆண்டுகள் கழித்து எடுக்கப்பட்ட படம்

“இறந்து போனவர்களின் குடும்பங்கள் எங்களுக்கு ஆதரவாகவே இருந்தன. அவர்கள் இறந்து போனவர்களின் உடல்களுக்கு என்ன ஆனது என்பது குறித்துக் கவலைப்படவில்லை. இறந்தவர்கள் உயிரோடு இருந்தபோது என்ன ஆனது என்பது மட்டுமே அவர்களது கவலையாக இருந்தது.

இது வேடிக்கையானது, காரணம் இந்தக் கதைக்கு இரண்டு பார்வைகள் உள்ளதாக நான் நினைக்கிறன். ஏனெனில், உயிர் பிழைத்திருக்க நாங்கள் எதிர்கொண்ட கடுமையான சவால்களில், பிணங்களை உண்டதெல்லாம் கடினமான விஷயமாகத் தெரியவில்லை.

சிலர் ‘அட! பிணங்களைத் திண்றதால் நீங்கள் உயிர் பிழைத்தீர்களா” என்று இது ஏதோ மாயமந்திரம் போலக் கேட்கிறார்கள்.

ஆனால் பிணங்களை உண்டது வெறும் பிழைத்திருப்பதற்கான நேரத்தை அதிகரிப்பது மட்டுமே. நாங்கள் அணியாக இருந்து ஒன்று சேர்ந்து பணியாற்றி ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டதால் நாங்கள் பிழைத்தோம் என்பதே கடினமான ஒன்று.”

  • விமான விபத்து: உதவி வரும் வரை உயிர் பிழைக்க இறந்தவர்களின் பிணங்களைத் தின்ற பயணிகள்
செப்டம்பர் 2010இல், உயிர் பிழைத்தவர்களின் குழு சிலியில் சுரங்கம் ஒன்றில் மாட்டிக்கொண்ட 33 பேரின் உறவினர்களை பார்க்கச் சென்றது.

“மலைகளில் இருந்து வெளியேறி 11 நாட்கள் நடந்ததால் நாங்கள் பிழைத்தோம்.

எங்களுக்குள் ஒற்றுமையாக இருக்கவும் தொடர்பு கொள்வதற்கும் உதவிய விஷயங்களில் ஒன்று நாங்கள் ஒரு குழுவாக இருந்தோம் என்பதும், ஒன்றாக வளர்ந்தோம் என்பதும்தான்.

எங்களிடம் இருந்ததெல்லாம் உயிர் மட்டுமே. ‘அனைத்து முரண்பாடுகளையும் கடந்து இதைச் செய்வோம், என்ன நடக்கிறது என்று பார்த்து விடுவோம்’ என்று சொல்லிக்கொண்டோம்.

நான் மலைகளில் இருந்தபோது எனது நண்பர்கள் இறப்பதைப் பார்த்தேன். அடுத்தது நானாக இருக்கலாம் என்று எனக்குத் தெரியும். அப்போதுதான் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் உள்ள கோடு எவ்வளவு மெல்லியது என்பதைப் புரிந்துக் கொண்டேன்.

அப்போதிலிருந்து கூடுதல் நாட்களை மகிழ்ச்சியுடன் வாழ்கிறேன்.”

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *