சவுதி அரேபியாவுக்கு நிதியுதவி வழங்கிய இலங்கை முஸ்லிம்கள்!

1945ம் ஆண்டு காலப் பகுதியில் மைப் பேனாவால் எழுதப்பட்டிருந்த அந்த மொனிட்டர் அப்பியாசக் கொப்பியில் ‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரண நிதி சேகரிப்பு’ எனத் தலைப்பிடப்பட்டு இருந்தது. அடுத்து வந்த பக்கங்களில் அந்த நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர் விபரம் எழுதப்பட்டிருந்து. 50 சதம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் என ஒவ்வொருவரும் அன்பளிப்புச் செய்த தொகை குறிப்பிடப்பட்டிருந்தது நினைவில் இருக்கிறது.

நான் கவனமாக எடுத்து வைத்திருந்த அந்த குறிப்புப் புத்தகத்தை இப்போது தேடிக் கொள்ள முடியவில்லை. அது பழைய பேப்பர் காரனிடம் போய்ச் சேர்ந்து விட்டதோ தெரியாது.

அதற்குப் பல வருடங்களின் பின்னர் தான் கீழே காட்டப்பட்டுள்ள 30/04/1945 திகதியிடப்பட்ட பத்திரத்தை வாசிக்கக் கிடைத்தது. அதிலிருந்து இந்த விடயம் தொடர்பான முழு விபரத்தையும் அறிந்து கொள்ள முடிந்தது.

1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப்போர் நடந்தது. இக்காலப் பகுதியில் ஹஜ்ஜுக்கு வெளிநாட்டவர்கள் செல்வது தடைப்பட்டது. ஹஜ் யாத்திரிகர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் தங்கியிருந்த மக்காவாசிகளும் மதீனாவாசிகளும் பெரும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானார்கள். அப்பகுதிகளில் பஞ்சம் நிலவத் தொடங்கியது.

இந்த நிலையில்தான் கொழும்பில் வாழ்ந்த முஸ்லிம்கள் ‘மக்கா – மதீனா பஞ்ச நிவாரணக் கமிட்டி’ என்ற பெயரில் அமைப்பொன்றை ஏற்படுத்தி நிவாரண நிதி சேகரிக்கத் தொடங்கினர். இந்த குழு டாக்டர் எம். ஸீ. எம் கலீல் (இலங்கை முஸ்லிம் லீக் தலைவர்) அவர்களின் தலைமையில் செயல்பட்டிருக்கிறது. அக்காலத்தில் அவர் State Council என்னும் ராஜாங்க சபையின் உறுப்பினர். இக்குழுவின் செயலாளராக பீ.எஸ். அப்துல் காதிர் என்பவர் இருந்துள்ளார். கொழும்பு உட்பட 86 ஊர்களில் இந்த நிதி சேகரிப்பு நடந்திருக்கிறது.

மொத்தம் 71,832 ரூபா 81 சதம் சேகரிக்கப்பட்டிருக்கிறது. முதல் கட்டமாக 50,000/- ரூபாவும் அதனை அடுத்து 20,000/- ரூபாவும் என மொத்தம் 70,000/- ரூபாய் கொழும்பில் இருந்த Eastern Bank ஊடாக Telegraphic Transfer மூலம் ஸஊதி மன்னர் அப்துல் அஸீஸ் இப்னு சுவூத் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு நன்றி தெரிவித்து பதில் தந்தியும் மன்னரிடமிருந்து வந்துள்ளது.

குறிப்பிட்ட வருடத்தில் ஒரு அமெரிக்க டொலரின் பெறுமதி 3/- ரூபாவாக இருந்திருக்கிறது. அதன்படி பார்த்தால் சுமார் 23,300 டொலருக்கு சமமான பணத்தை இலங்கை முஸ்லிம்கள் ஸவூதி அரேபியாவுக்கு நன்கொடையாக அனுப்பி வைத்துள்ளனர்.

இந்தப் பத்திரத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது:

3-4-45
சென்ற 4, 5 வருடங்களாக யுத்தத்தினால் ஜனங்கள் ஹஜ்ஜுக்கு போதிய அளவில் போகவில்லை. இதனால் ஹிஜாஸில் குறிப்பாய் மக்கா மதீனா நகர சுற்றுப்புறங்களில் வசிக்கும் ஹஜ் கால வரும்படியை எதிர்பார்த்து வாழக்கூடிய அரபிகளுக்கு கஷ்டமேற்பட்டு பஞ்ச நிலமை ஏற்பட்டிருப்பதாக நாமும் அறிந்து நமது முயற்சியின் பேரில் கொழும்பில் “மக்கா – மதீனா பஞ்ச நிவாரண கமிட்டி” என்ற பேரால் ஒரு கமிட்டி ஏற்படுத்தி பண வசூல் செய்தோம். மொத்தம் ரூ 71,832/81 வசூலானது. கொழும்புவுட்பட 86 ஊர்களில் நிதி சேகரித்து அனுப்பியிருந்தனர். மாட்சிமிக்க சுல்தான் அப்துல் அஸீஸ் இப்னு சுவூது மன்னர் அவர்கட்கு முதன்முறையாக ரூ 50,000/- மும் இரண்டாம் முறையாக ரூ 20,000/-மும், ஆக 70,000/- கொழும்பு ஈஸ்டர்ன் பேங்க் மூலமாக T. T. அனுப்பிக் கொடுத்தோம். ஒப்புக்கொண்டு நன்றி பாராட்டி தந்தி சொல்லி இருந்தார்கள்.
கமிட்டிக்குத் தலைவர் ஜனாப் Dr M. C. M. கலீல் M. S. C.
” ” காரியதரிசி ஜனாப் P. S. அப்துல் காதிர்
ஆபீஸ் 163, 2ம் குறுக்குத் தெரு,
கொழும்பு.
————-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *