விஜயகாந்த் படங்களில் ரசிகர்களை ஈர்த்த அம்சங்கள்!

 

தமிழ் திரையுலகில் விஜயகாந்தைப் புகழாதவர்களே கிடையாது; அந்த அளவுக்குத் தனது நட்பு பாராட்டும் பாங்கினால் அனைவரையும் கவர்ந்தவர் விஜயகாந்த்.

படப்பிடிப்புத் தளத்தில் பேதம் பார்க்காமல் பழகுவதுபோல, பொதுவெளியில் தனது ரசிகர்களையும் நடத்தியவர். வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை அல்லது ஒரு நாளின் சில மணி நேரங்களை ரசிகர்களோடு செலவழிப்பது என்பதில் கறாராக இருந்தவர்.

‘பப்ளிசிட்டி ஸ்டண்ட்’ என்று எதிராளிகள் விமர்சித்தாலும், தன்னால் முடிந்த உதவிகளை ரசிகர் மன்றங்கள் மூலமாகத் தொடர்ந்து மேற்கொண்டவர். எளியவர்களின் வாழ்க்கை வலிகளை அறிந்தவர். அந்தக் காரணத்தினாலோ என்னவோ, சாதாரண மக்கள் பலர் அவருக்கு ரசிகராக இருந்தார்கள்.

அவர்களிடம் நல்லதொரு அறிமுகத்தைப் பெற்றபிறகு, அவர் நடித்தவற்றில் பெரும்பாலானவை ப்ளாக்பஸ்டர், சூப்பர்ஹிட், ஹிட் மற்றும் சுமார் வெற்றிகளாகவே அமைந்தன. அவர் நடித்த படங்களின் கதைகளும் ஏற்றப் பாத்திரங்களும் அக்காலகட்டத்தில் இருந்த பிற நாயகர்களின் தேர்வில் இருந்து வேறுபட்டதாகவே இருந்தன. அதுவே ரஜினி, கமலுக்கு இணையான புகழை அவருக்குத் தேடித் தந்தது.

விஜயகாந்தின் படங்களில் தென்படும் சில அம்சங்களைத் தொகுத்தால், அதன் வழியே அவரது பிலிமோகிராஃபியில் நிகழ்ந்த மாற்றங்கள் நமக்குத் தெரிய வரும்.

‘பழிக்குப் பழி’ கதைகள்!

இனிக்கும் இளமை, அகல் விளக்கு படங்கள் வாயிலாக ஒரு வசீகர முகமாகத் திரையில் அறிமுகமானார் விஜயகாந்த். தொடர்ந்து வில்லன் வேடங்களிலும் சிறு பாத்திரங்களிலும் நடிப்பதா, வேண்டாமா என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்தபோது, அவரை நாயகனாக மட்டுமே பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டவர் அவரது நண்பர் இப்ராஹிம் ராவுத்தர்.

அதனாலேயே, ஏவிஏம்மின் தயாரிப்பில் ‘முரட்டுக்காளை’யில் வில்லனாக நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தார் விஜயகாந்த். அதன்பிறகு, அந்த வேடத்தில் நடித்த ஜெய்சங்கர் தொடர்ந்து வில்லனாக நடித்துத் தனது ‘இரண்டாவது இன்னிங்க்ஸை’ வெற்றிகரமாகத் தொடர்ந்தது தனிக்கதை.

முரட்டுக்காளை வெளியான நேரத்தில் விஜயகாந்த் வருந்தினாரா என்று நமக்குத் தெரியாது. ஆனால், தனது நண்பர் இப்ராஹிமின் கணிப்புதான் சரி என்பதை ‘சட்டம் ஒரு இருட்டறை’ வெளியானபோது நிச்சயம் உணர்ந்திருப்பார்.

இயக்குனர் சந்திரசேகரன் தந்த அந்த வாய்ப்பு, விஜயகாந்த் விரும்பாமலேயே ‘ஆக்‌ஷன் ஹீரோ’ முத்திரையை உருவாக்கிவிட்டது. அந்தப் படத்திற்குப் பிறகு தொடர்ந்து ‘பழிக்குப் பழி’ வகையறா கதைகளில் நடிக்கத் தொடங்கியது, ‘ஒரே மாதிரியே நடிக்கிறாரே’ என்று ரசிகர்களை முனுமுனுக்க வைத்தது.

1983ஆம் ஆண்டு, கிட்டத்தட்ட பல மாதங்கள் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்திருக்கிறார் விஜயகாந்த். அந்தக் காலகட்டத்தில், அவரது நடிப்பில் மூன்று படங்களே வெளியாகின. அதிலொன்றாக அமைந்த ‘சாட்சி’ மீண்டும் விஜயகாந்துக்கு ஏறுமுகத்தைத் தந்தது.

ஆனால், அந்த வெற்றிக்கு முன்னதாகக் கிடைத்த அனுபவங்கள் வழியே திரையுலகத்தில் தொடர்ந்து நீடிப்பதற்கான சூத்திரங்களை அவர் கற்றுக்கொண்டார். தன்னியல்பான நற்குணங்களைத் தக்க வைத்துக்கொண்டதோடு, சாதாரண நிலையில் இருக்கும் பணியாளர்களோடு நெருக்கமாகப் பழகத் தொடங்கினார். படத் தயாரிப்பிலும் நண்பர் இப்ராஹிமை ஈடுபட வைத்தார்.

இடதுசாரிச் சிந்தனையும் ஆன்மிகமும்..!

‘சிவப்பு மல்லி’ காலம் முதலே ஒடுக்கப்பட மக்களின் வேதனைகளைத் திரையில் பிரதிபலித்திருக்கிறார் விஜயகாந்த். ‘அலை ஓசை’ படத்தில் வரும் ‘போராடுடா ஒரு வாளேந்துடா’ பாடல் கூட அந்த வகையறாதான்.

லியாகத் அலிகான் உடன் விஜயகாந்த் கைகோர்த்த படங்களில் இடதுசாரிச் சிந்தனைகளும் அரசியல்களம் குறித்த விமர்சனங்களும் சாதாரண மக்களின் பார்வையில் வெளிப்படுத்தப்பட்டிருந்தன. ‘ஏழை ஜாதி’ போன்ற படங்கள் அதற்கான உதாரணம்.

‘ராகவேந்திரா’, ‘பாபா’ என்று இரண்டொரு படங்களில் மட்டுமே ஆன்மிகத்தைத் தொட்டார் ரஜினிகாந்த். அவரும் சரி, கமலும் சரி, புராணப் படங்கள் என்ற வகைமையின் பக்கம் ஒதுங்கியதே கிடையாது. ஆனால், அப்போதிருந்த தனது சந்தை மதிப்பைப் பாராமல் ’நவக்கிரக நாயகி’, ‘வேலுண்டு வினையில்லை’, ‘மீனாட்சி திருவிளையாடல்’, ‘நம்பினார் கெடுவதில்லை’ போன்ற படங்களில் மூத்த இயக்குனர்களுக்காக நடித்து தந்தார் விஜயகாந்த்.

தீவிரவாத எதிர்ப்பு!

எப்படி அர்ஜுன் படங்களில் அதீதமாகத் தேசப்பற்று இடம்பெற்றதோ, அதற்கு இணையாக விஜயகாந்த் படங்களிலும் அது பிரதிபலிக்கப்பட்டது. அவர் தீவிரவாதிகளைப் பாய்ந்தோடிப் பிடித்து பக்கம் பக்கமாக வசனம் பேசும் படங்கள் அனைத்தும் அந்த வரிசையில் சேரும். இப்படிப்பட்ட படங்களில் விஜயகாந்த் பெரும்பாலும் போலீஸ் அதிகாரியாக நடித்திருப்பார்.

எஸ்.ஏ.சியின் ஆரம்பகாலப் படங்களில் ‘இன்ஸ்பெக்டர் விஜய்’ எனும் பாத்திரப் பெயரில் தோன்றிய விஜயகாந்த், தொண்ணூறுகளில் காவல் துறை உயரதிகாரி வேடங்களை ஏற்றார். அப்படங்கள் அனைத்தும் பொதுப் பிரச்சனைகள் சார்ந்திருந்தது இன்னொரு சிறப்பம்சம். ‘ஊமை விழிகள்’, ‘புலன்விசாரணை’ தொடங்கிப் பல படங்களை அந்த வரிசையில் சேர்க்கலாம்.

‘மாநகர காவல்’ படத்தில் முதன்முறையாக நாட்டின் தலைவர்களைக் காப்பது போன்ற கதையில் நடித்தார். பி.வாசுவின் ‘சேதுபதி ஐபிஎஸ்’ படத்தில் தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தனது குடும்பத்தினரையும் நாட்டையும் காக்கும் வேடத்தில் தோன்றினார். கருப்பு நிலா, தர்மா போன்ற படங்களும் இந்த பட்டியலில் சேரும்.

இதில் உச்சம் தொட்டது என். மஹராஜன் இயக்கிய ‘வல்லரசு’. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிளாக் பஸ்டர் வெற்றியை விஜயகாந்துக்குத் தந்த படம் இது. இப்படத்தில் தீவிரவாதி வாஸிம்கான் (முகேஷ் ரிஷி) சதியை முறியடித்து நாட்டு மக்களைக் காப்பாற்றும் வேடத்தில் நடித்திருப்பார். அதன்பிறகு நரசிம்மா, ராஜ்ஜியம், சுதேசி படங்களிலும் இதே போன்ற வேடங்களை ஏற்றார். அவரே இயக்கி நடித்த ‘விருதகிரி’யும் கூட இந்தப் பட்டியலில் சேரும்.

‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் காட்டைச் சூறையாடும் வீரபத்ரனைப் பிடிக்கும் வனத்துறை அதிகாரியாக நடித்திருப்பார். ‘தென்னவன்’ படத்தில் தேர்தல் ஆணையராகத் தோன்றியிருப்பார். ‘ரமணா’வில் ஒரு பேராசிரியராக இருந்துகொண்டு ஊழல் புரியும் அரசு அதிகாரிகளைக் கடத்துபவராக வந்திருப்பார். மருத்துவ ஊழல்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வருபவராகவும் இதில் அவரது பாத்திரம் இடம்பெற்றிருக்கும். இதே தொனியில் அவர் நடித்த ‘சபரி’ கதையும் அமைக்கப்பட்டிருக்கும்.

விஜயகாந்தின் 125வது படமான ‘உளவுத்துறை’ திரைக்கதையில், அவரது சாகசங்கள் கடற்படை சார்ந்து அமைக்கப்பட்டிருக்கும். இப்படங்களில் எல்லாம் அவர் தீவிரவாதத்தால் நாடு எதிர்கொள்ளும் சிதைவு குறித்து நரம்பு புடைக்க வசனம் பேசியிருப்பார். அப்படங்களில் அவர் நாட்டுப்பற்றை வெளிப்படுத்திய விதம் இன்றும் சிலருக்குப் பிடித்தமானதாக உள்ளது.

தமிழ் மீதான வேட்கை!

தொண்ணூறுகளில் வெளியான விஜயகாந்த் படங்கள் பெரும்பாலும் தமிழ் மொழி மீதான வேட்கையை வெளிப்படுத்தும் விதமாகவே இருந்தன. அவரது படங்களின் தலைப்புகள் கூடத் தமிழிலேயே இடம்பெற்றன.

பெரும்பாலும் ஆங்கிலக் கலப்பு இல்லாத வசனங்களையே திரையில் அவரே பேசினார். சில படங்களில் காவல்துறை உயரதிகாரியாக நடித்தபோதும் ஆங்கில வசனங்கள் பேசுவதில் அவர் நாட்டம் காட்டவில்லை.

பொது மேடைகளில் தன்னைக் குறைந்தபட்சக் கல்வியறிவு கொண்டவராகவே வெளிப்படுத்தினார். அப்போதும் கூட, ஆங்கில மொழியைவிடத் துறை சார்ந்த அறிவிருப்பதே போதுமானது எனும் மனப்பாங்கைக் காட்டினார்.

எண்பதுகளின் மத்தியிலேயே, தன்னை விடுதலைப்புலிகளின் ஆதரவாளராகப் பதிவு செய்தார் விஜயகாந்த். அந்த காலகட்டத்தில் ‘கேப்டன் பிரபாகரன்’ என்று தனது படப்பெயரைப் பதிவு செய்ததோடு, அவ்வியக்கத்தின் தலைவர் பிரபாகரன் நினைவாகத் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் எனும் பெயரை இட்டார்.

அப்படியொரு சார்பினை வெளிப்படுத்துவதே உற்றுநோக்கப்பட்ட காலத்தில், விஜயகாந்த் அதனைச் சர்வ சாதாரணமாகச் செய்தது நிச்சயம் சாதாரண விஷயமல்ல.

தமிழ், தமிழர் சார்ந்த பொதுப் பிரச்சனைகளில் ஆர்வம் காட்டிய விதமும், அது தொடர்பான போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றதும், அவரைப் பல ரசிகர்கள் அரசியல்ரீதியிலும் பின்தொடரச் செய்தது.

‘மாநகர காவல்’, ‘கேப்டன் பிரபாகரன்’ உட்படப் பல படங்கள் விஜயகாந்தை ஆந்திராவிலும், இன்றைய தெலங்கானாவிலும் பிரபலமாக்கின. அவரைத் தெலுங்கில் நேரடியாக நடிக்க வைக்கப் பல தயாரிப்பாளர்கள் பெரும்பணம் தரத் தயாராக இருந்தனர்.

அந்தக் காலகட்டத்தில் பல நாயகர்கள் அப்படி நடித்து வந்தனர். ஆனால், விஜயகாந்த் அவ்வாய்ப்புகளை இறுதிவரை ஏற்கவில்லை. இதுவே, தான் வகுத்துப் பின்பற்றிய வாழ்வியல் நியதிகளுக்கு அவர் தந்த முக்கியத்துவத்தைக் காட்டும். தமிழ் மொழிப் பற்று அதில் மிக முக்கியமானது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *