அமெரிக்காவில் ஆசிரமம் தொடங்கிய ஓஷோ சிறையில் அடைக்கப்பட்டது ஏன்?

அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள், சீடர்கள் மற்றும் பின்பற்றுபவர்களால் எளிமையாக அவர் ‘ஓஷோ’ என அழைக்கப்பட்டார். இந்தியாவிலும் பின்னர் உலகம் முழுவதும் ‘ஆச்சார்யா ரஜ்னீஷ்’ மற்றும் ‘பகவான் ஸ்ரீ ரஜ்னீஷ்’ என்று அவர் அழைக்கப்பட்டு வருகிறார்.

‘ஓஷோ’ என்றால் கடலுடன் தன்னை இணைத்துக் கொண்டவர் என்று பொருள். அவர் இவ்வுலகை விட்டுப் பிரிந்து ஏறக்குறைய 33 வருடங்கள் ஆகின்றன. ஆனால் இன்றும் அவர் எழுதிய புத்தகங்கள் விற்கப்படுகின்றன, அவரது வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. பலரால் பார்க்கப்படுகின்றன.

ஓஷோ எந்த பாரம்பரியம், தத்துவ சித்தாந்தம் அல்லது மதத்தின் ஒரு பகுதியாகவும் இல்லாததால் அவர் மீது மக்களின் ஆர்வம் தொடர்ந்து அதிகரித்தது. டிசம்பர் 11, 1931 இல் மத்திய பிரதேசத்தில் பிறந்த ஓஷோவின் உண்மையான பெயர் சந்திரமோகன் ஜெயின்.

ஓஷோவின் வாழ்க்கை வரலாற்றான ‘தி லுமினஸ் ரெபெல் லைஃப் ஸ்டோரி ஆஃப் எ மேவரிக் மிஸ்டிக்’ (The Luminous Rebel Life Story of a Maverick Mystic) என்ற புத்தகத்தில், “ஓஷோ ஒரு சாதாரண குழந்தையைப் போலவே வளர்ந்தார். ஆனால் அவரிடம் ஏதோ வித்தியாசம் இருந்தது. அது அவரை சாதாரண குழந்தைகளிடமிருந்து பிரித்தது.

சிறு வயதிலிருந்தே, அவரிடம் ஒரு குணம் இருந்தது. தனக்குத்தானே கேள்விகள் கேட்டு பரிசோதனை செய்து கொண்டிருந்தார். ஆரம்பத்திலிருந்தே மக்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மனித நடத்தையை உன்னிப்பாக கவனிப்பது அவரது முக்கிய பொழுதுபோக்காக இருந்தது. தனக்கு வெளியே உள்ள உலகத்தையும் மனித மனதையும் கூர்ந்து கவனித்து வந்தார்,” என வசந்த் ஜோஷி எழுதியுள்ளார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
கல்லூரியில் இருந்து வெளியேற்றம்

1951 இல் இளங்கலைப் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு, ஜபல்பூரில் உள்ள ஹிட்காரினி கல்லூரியில் ஓஷோ சேர்ந்தார். அப்போது, ​​அவருக்கு ஒரு தத்துவப் பேராசிரியருடன் மோதல் ஏற்பட்டது. விரிவுரைகளின் போது அவர் அவரிடம் பல கேள்விகளைக் கேட்டார். அதற்குப் பேராசிரியர் பதிலளித்து, அளித்து சோர்வடைந்தார். மேலும் அவரது படிப்பை சரியான நேரத்தில் முடிக்க முடியவில்லை.

இது குறித்து தனது நூலில் குறிப்பிட்டுள்ள வசந்த் ஜோஷி, “இறுதியாக, பேராசிரியரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சந்திரமோகன் ஜெயின் கல்லூரியில் தொடர்ந்தால், தான் அங்கிருந்து சென்றுவிடுவதாகவும், அவர் அல்லது சந்திரமோகன் ஜெயின் மட்டுமே அந்த கல்லூரியில் தொடர முடியும் என்றும் அந்த பேராசிரியர் முதல்வருக்கு இறுதி எச்சரிக்கை கொடுத்தார்.

முதல்வர் சந்திரமோகனை தனது அலுவலகத்திற்கு அழைத்து, கல்லூரியை விட்டு வெளியேறும்படி கூறினார். உடனடியாக சந்திரமோகன் ஜெயின் அதற்கு ஒப்புக்கொண்டார். இந்த விஷயத்தில் தன் மீது எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் இந்த விவகாரத்தில் தனது கல்லூரியின் மூத்த பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்வதை விரும்பவில்லை என்றும் அப்போது அவர் கூறினார். மேலும், வேறு ஏதாவது ஒரு கல்லூரியில் தான் சேர்ந்துகொள்ள முதல்வர் உதவ வேண்டும் என்ற நிபந்தனையுடன் கல்லூரியை விட்டு வெளியேற சந்திரமோகன் முடிவு செய்தார்,” என எழுதியுள்ளார்.

ஆரம்பத்தில் எல்லா கல்லூரிகளும் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அளவுக்கு ரஜ்னீஷ் மிகவும் பிரபலமாகிவிட்டார். பின்னர், மிகவும் சிரமப்பட்டு டி.என். ஜெயின் கல்லூரியில் சேர்க்கை பெற்றார்.

ரஜ்னீஷ் தனது இளமை பருவத்தில் எப்போதும் தலைவலி பற்றி புகார் செய்தார். அவரது தலைவலி தீவிரமடைந்தவுடன், அவரது உறவினர் சகோதரர்களான கிராந்தி மற்றும் அரவிந்த் ஆகியோர் அவர்து தந்தையை அழைக்க வேண்டியிருந்தது. ரஜ்னீஷ் அதிகமாகப் படித்ததால் தலைவலியால் அவதிப்பட்டதாக அவரது தந்தை நம்பினார். எனவே, ரஜனீஷ் நெற்றியில் தைலம் தடவிவிட்டு பின்னர் வாசிப்பதைத் தொடர்ந்தார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
பேராசிரியர் வேலையை விட்டுவிட்டு ஆன்மீகத்தில் ஈடுபாடு

கல்லூரிப் படிப்புக்குப் பின் ரஜ்னீஷ் 1957 இல் ராய்ப்பூரில் உள்ள சமஸ்கிருதப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கினார். 1960 இல், ஜபல்பூர் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியரானார். அந்த நேரத்தில் அவர் ஒரு சிறந்த ஆசிரியராக கருதப்பட்டார்.

இந்த நேரத்தில், அவர் ஆசிரியப் பணியில் கவனம் செலுத்துவதைவிட ஆன்மீகப் பணிகளில் கவனம் செலுத்தத் தொடங்கினார். மேலும், இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அரசியல், மதம் மற்றும் பாலினம் குறித்து சர்ச்சைக்குரிய விரிவுரைகளை வழங்கத் தொடங்கினார்.

சில நாட்களுக்குப் பிறகு, அவர் பேராசிரியர் பதவியை ராஜினாமா செய்து, முழு அளவிலான ஆன்மீக குருவானார். 1969ல் மும்பையில் தனது தலைமையகத்தை நிறுவினார். ஓராண்டுக்கு முன் அவரைச் சந்தித்த அன்னை யோக லட்சுமி, அவருக்குத் தலைமை உதவியாளராகச் செயல்பட்டார். அப்பொறுப்பில் அவர் 1981-ம் ஆண்டு வரை இருந்தார்.

இந்த காலகட்டத்தில் தான், அவர் கிறிஸ்டினா வுல்ஃப் என்ற ஆங்கிலேய பெண்ணை சந்தித்தார். ரஜ்னீஷ் அவருக்கு ‘மா யோகா விவேக்’ என்ற சன்னியாசி பெயரைச் சூட்டினார். அந்தப் பெண் முற்பிறவியில் தனது தோழியாக இருந்ததாக அறிவித்த ரஜ்னீஷ், அவரை தனது தனிப்பட்ட உதவியாளராக நியமித்தார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
அசல் சிந்தனைகளால் கிடைத்த புகழ்

ஆரம்பத்திலிருந்தே, பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த மத நம்பிக்கைகள் மற்றும் சடங்குகளுக்கு எதிராக ரஜ்னீஷ் குரல் எழுப்பினார். ஒரு ஆன்மீகத் தலைவராக, ஒழுங்கமைக்கப்பட்ட மதம் ஆன்மீக அறிவொளியைக் காட்டிலும் மக்களிடையே பிரிவினைக்கான வழிமுறையாக மாறியுள்ளது என்று ஓஷோ நம்பினார்.

அவரது பார்வையில், மதம் தீமைக்கு பலியாகி, அதன் உயிர் சக்தியை இழந்துவிட்டது. ஓஷோ மதத்தையும் அரசியலையும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்களாகக் கருதினார், அதன் ஒரே நோக்கம் மக்களைக் கட்டுப்படுத்துவதாகும். கிழக்கத்திய தத்துவம் மற்றும் பிராய்டின் மனோதத்துவத்தின் அற்புதமான ஒருங்கிணைப்பை அவர் மக்கள் முன் முன்வைத்தார் என்பதுடன் வெளிப்படையாக ‘பாலியல் விடுதலையை’ ஆதரித்தார்.

எளிமையான மொழியில் சிக்கலான கருத்துகளை முன்வைக்கும் திறன் பல்வேறு தொழில்களைச் சேர்ந்த பலரை அவரை நோக்கி ஈர்த்தது. அவரைப் பாராட்டி, பிரபல எழுத்தாளர் குஷ்வந்த் சிங், “ஓஷோ இந்தியாவில் பிறந்த அசல் சிந்தனையாளர்களில் ஒருவர்,” என எழுதியுள்ளார். இது தவிர, “அவர் மிகவும் சிந்தனை மிக்க, அறிவியலுக்குட்பட்ட புதுமையான நபர்” என்று எழுதியிருந்தார்.

அமெரிக்க எழுத்தாளர் டாம் ராபின்ஸ், ‘ஓஷோவின் புத்தகங்களைப் படித்தால், அவர் 20ஆம் நூற்றாண்டின் மிகப் பெரிய ஆன்மீக குரு என்று உணர முடியும்’ என்று நம்பினார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
மர ஜெபமாலை மற்றும் லாக்கெட்டில் ஓஷோவின் உருவப்படம்

ஓஷோவின் செயலாளராக பல ஆண்டுகள் இருந்த அன்னை ஆனந்த் ஷீலா மிக இளம் வயதிலேயே அவருடன் தொடர்பு கொண்டார். ஓஷோ ஒவ்வொரு பெண்ணையும் தாய்மையின் அடையாளமாகக் கருதியதால், அவரைப் பின்பற்றும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ‘அம்மா’ என்று பெயரிட்டார். அவர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண் சீடரையும் ‘சுவாமி’ என்று அழைப்பார்.

ஷீலா தனது சுயசரிதையான ‘டோன்ட் கில் ஹிம், தி ஸ்டோரி ஆஃப் மை லைஃப் வித் பகவான் ரஜ்னீஷ்’ என்ற நூலில், “நான் அவரது அறைக்குள் நுழைந்ததும், பகவான் என்னைப் பார்த்து புன்னகைத்து கைகளை நீட்டினார். அவர் என்னை மார்போடு அணைத்து மிகவும் ஆழமாக அணைத்தார்.

அவர் என் கையை மெதுவாகப் பிடித்தார். நான் என் தலையை அவர் மடியில் வைத்தேன், சிறிது நேரம் கழித்து, நான் அமைதியாக எழுந்து செல்லத் தொடங்கியதும், அவர் மீண்டும் என்னை அழைத்தார், அவர் ஷீலா, நாளை 2.30 மணிக்கு என்னை சந்திக்க வாருங்கள் என்று கூறினார். இதைச் சொல்லி அவர் என் தலையில் கையை வைத்தார்,” என எழுதியுள்ளார்.

ஓஷோ தனது ஒவ்வொரு சீடருக்கும் ஒரு மர ஜெபமாலையைக் கொடுப்பார். அதில் ஒரு லாக்கெட் மற்றும் ஓஷோவின் படம் இரண்டு பக்கங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு துறவியும் எப்போதும் அந்த லாக்கெட்டை அணிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இதே போல் ஒவ்வொரு துறவிக்கும் ஒரு புதிய பெயரையும் வைத்தார். அதனால் அந்தத் துறவிகள் கடந்த காலத்திலிருந்து தங்களைப் பிரித்துக் கொண்டனர். அவர் தனது சீடர்கள் ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற ஆடைகளை அணிய வேண்டும் என்று விரும்பினார். ‘உடலில் ஆற்றல் எளிதில் புழங்கும்’ வகையில் அந்த ஆடைகள் தளர்வாக இருப்பது முக்கியம் என்றும் அறிவுறுத்தினார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
சர்ச்சைக்குரிய தலைப்புகளில் பேச்சு

ஓஷோ இந்தி அல்லது ஆங்கிலத்தில் தனது உரைகளை நிகழ்த்துவார். உரையின் போது கண்களை மூடிக்கொண்டு இருக்குமாறு பின்பற்றுபவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. ஓஷோ சர்ச்சைக்குரிய தலைப்புகளில் தனது கருத்துகளால் பிரபலமானவர்.

வின் மெக்கார்மேக் தனது ‘தி ரஜ்னீஷ் க்ரோனிக்கிள்’ என்ற புத்தகத்தில், “அவரது கருத்துகள் மிகவும் சர்ச்சைக்குரியவையாக இருந்தன. அவற்றைத் தடை செய்வது பற்றி இந்திய நாடாளுமன்றத்தில் பலமுறை விவாதங்கள் நடந்தன. வெவ்வேறு நபர்களை ஈர்க்க, ஓஷோ பலவற்றைப் பயன்படுத்தினார். அவர் கலப்புப் பின்னணியில் இருந்து வந்தவர். வயது, மதம், இனம் என அனைத்துப் பிரிவினரும் அவரது உரைகளைக் கேட்க திரண்டனர். அவருடன் தொடர்பு கொண்ட எவரும் அவருடைய சீடராகவோ அல்லது எதிராளியாகவோ மாறிவிட்டனர். யாரோ அவருக்கு எதிராக இருந்தார்கள். அவர் எப்போதும் எதைப் பற்றியும் அலட்சியமாக இருக்க முடியவில்லை,” என எழுதியுள்ளார்.

1972ல் இந்தியாவிற்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அவரால் ஈர்க்கப்படத் தொடங்கினர். அவரைச் சந்திக்கும் நபர்களை அவரது சீடரான லட்சுமி மிகவும் கவனமாக தேர்வு செய்து வந்தார். முதலில், அவர்கள் ஒரு ‘டைனமிக் தியானத்தில்’ பங்கேற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்கள் ஓஷோவை சந்திக்க அனுமதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் அவர் தினமும் காலை 6 மணிக்கு சௌப்பட்டி கடற்கரையில் தனது உரையை நிகழ்த்துவார்.

இரவு நேரங்களில் ஏதோ ஒரு மண்டபத்திலோ அல்லது தன் வீட்டிலோ மக்களிடம் உரையாடுவது வழக்கம். சில சமயங்களில் அவரது உரையைக் கேட்பவர்களின் எண்ணிக்கை 100 முதல் 120 வரை இருக்கும். சில சமயங்களில் அது 5000 முதல் 8000 வரை அதிகரிக்கும்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
புனேயில் கட்டப்பட்ட ஓஷோ ஆசிரமம்

சில நாட்களுக்குப் பிறகு, மும்பையில் ஓஷோவின் வாழ்க்கை கடினமாகத் தொடங்கியது. மும்பையில் பெய்து வந்த கனமழையால் அவருக்கு அலர்ஜியும் ஆஸ்துமாவும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிக்க ஆரம்பித்தன. அவரது வெளிநாட்டு சீடர்கள் கூட மும்பையின் பருவ மழைக்கு பழக்கமாகி இருக்கவில்லை. பல்வேறு நோய்கள் அவரைத் தாக்க ஆரம்பித்தன. அவர் தனது செயலாளரிடம் மும்பைக்கு அருகில் ஒரு இடத்தைக் கண்டுபிடிக்கச் சொன்னார்.

நீண்ட ஆலோசனைக்குப் பிறகு, புனேவில் அவர் தனது ஆசிரமத்தைக் கட்டுவது என்று முடிவு செய்யப்பட்டது. புனேவின் வானிலை மற்றும் தட்பவெப்பநிலை மும்பையை விட சிறப்பாக இருந்தது. அவர் தனது ஆசிரமத்தை புனே மாவட்டத்தில் உள்ள கோரேகானில் தொடங்கினார்.

இது குறித்து எழுதியுள்ள ஆனந்த் ஷீலா தமது நூலில், “புனேவை அடைந்த பிறகு, ஓஷோ மக்களிடமிருந்து தன்னைத் தனிமைப்படுத்தத் தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் ஆசிரமத்தின் தோட்டத்தில் மக்களைச் சந்தித்தார். பின்னர் அவரைச் சந்திப்பது மக்களுக்கு மிகவும் கடினமாகிவிட்டது.

அவர் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவர்களை மட்டும் தன்னைச் சுற்றிலும் வைத்துக்கொள்ளத் தொடங்கினார். உண்மையில், அவர் தன்னைப் பின்பற்றுபவர்களைத் தேடவில்லை; மாறாக வேலையாட்களைத் தேடினார் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், அவர் பெரும்பாலும் இந்தியர்களைப் புறக்கணிக்கத் தொடங்கினார். ஆனால், ஆர்வத்துடன் பலர் தனது ஆசிரமத்திற்கு வருகிறார்கள் என்பதை அவர் உணர்ந்தபோது, ​​அவர் ஆசிரமத்தின் நுழைவுக் கட்டணத்தை உயர்த்தினார். இதுமட்டுமின்றி, அவர் தனது இந்திய ஆதரவாளர்களைக் குறைக்கும் நோக்குடன் ஆங்கிலத்தில் உரைகளை வழங்கத் தொடங்கினார்.

அவர் எப்போதும் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டிருப்பார். அவருடைய சீடர்கள் தரையில் அமர்ந்திருப்பார்கள். இப்படிச் செயல்பட்டு வந்த அதே வேளையில், விரைவில் அவர் புனேவில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் தினமும் சுமார் 5,000 பேர் அவரது உரையைக் கேட்க வரத் தொடங்கினர்.

புனேயில் உள்ள ரஜ்னீஷ் ஆசிரமத்தால் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. புனேவை உலக வரைபடத்தில் இடம்பெறச் செய்ததில் இந்த ஆசிரமமும் பெரும் பங்கு வகித்தது. இது புனேவின் பொருளாதாரத்திற்கும் ஸ்திரத்தன்மையை என்பதுடன் அந்நகரத்திற்கு செல்வத்தையும், செல்வாக்கையும் கொண்டு வந்தது.

ஓஷோவின் ஆசிரமத்தில் பலவிதமான சிகிச்சைகள் கொடுக்கப்பட்டு, தண்ணீர் போல பணம் கொட்டத் தொடங்கியது. இந்த சிகிச்சைகளில், பாலியல் சிகிச்சைகள் மிகவும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இவற்றில் பாலுணர்வை எந்தவித பாரபட்சமும் இன்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தொடங்கினர். பாலியல் தொடர்பான நெறிமுறை சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஒதுக்கி வைக்கப்பட்டன.

ஆனந்த் ஷீலா தமது நூலில், “பொறாமை அல்லது உடைமை உணர்வு இல்லாமல் நாம் வேலை செய்ய வேண்டும் என்று கடவுள் விரும்பினார். இந்திய மக்கள் இந்த சிகிச்சைகளில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. ஓஷோ இந்த சிகிச்சைகளில் இந்திய மக்களுக்கு உதவியது அனைவருக்கும் புரியவில்லை. அவர்கள் ஏன் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டது?

அவர்கள் இதைப் பற்றி பல கேள்விகள் கேட்டனர். மேற்கத்திய மக்கள் அடக்குமுறையற்ற உலகத்தில் இருந்து வந்தவர்கள் என்பது அவரது வாதம். அவர்களின் வாழ்க்கை முறையும் மனநிலையும் இந்திய மக்களிடம் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அவர்களுக்கு செயல்படுவதற்குத் தேவையான சிகிச்சை தேவைப்பட்டது. அதேசமயம் இந்திய மக்களுக்கு செயலற்ற மற்றும் அமைதியான தியானமே போதுமானது,” என எழுதியுள்ளார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
ஆசிரமத்தின் பெண்களுக்கு அளிக்கப்பட்ட பாலியல் சுதந்திரம்

ஓஷோ தனது ஆசிரமத்தில் பாலியல் பங்காளிகளை மாற்றுவதை எப்போதும் ஊக்குவித்தார்.

ஓஷோவின் சீடரான டிம் கெஸ்ட், ‘மை லைஃப் இன் ஆரஞ்ச், க்ரோயிங் அப் வித் தி குரு’ என்ற புத்தகத்தில்,”பல இந்தியர்கள் அவரது ‘சம்போக் சே சமாதி’ புத்தகத்தை ஒரு ஆபாச புத்தகமாக கருதுகின்றனர். இது அவர்களின் மத உணர்வுகளை புண்படுத்துகிறது. இந்த புத்தகத்தை எழுதியதன் மூலம், பாலுணர்வை அடக்க நினைக்கும் துறவிகள் மற்றும் முனிவர்களின் எதிரியாக மாறினார் எனக் கருதப்பட்டது. மேலும், அவரது கருத்துகளை வெளிப்படையாக வெளிப்படுத்துவது ஆசிரமத்தில் இருந்த பெண்கள் பாலியல் பங்காளிகளை மாற்றுவதற்கான ஊக்கமாக கருதப்பட்டது,” என எழுதுகிறார்.

குறுகிய காலத்தில், புனேவின் ரஜ்னீஷ் ஆசிரமத்தின் மொத்த பரப்பளவு 25 ஆயிரம் சதுர மீட்டராக அதிகரித்தது. அங்கு ஒரு மருத்துவ மையம் கட்டப்பட்டது. உலகம் முழுவதிலுமிருந்து அழைத்து வரப்பட்ட மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அங்கு தங்க வைக்கப்பட்டனர். ஆசிரமவாசிகள் மற்றும் முழுநேர பணியாளர்களுக்கு மருத்துவ சேவை இலவசமாக வழங்கப்பட்டது.

ஆனந்த் ஷீலா தமது நூலில், “புதிதாகப் பிறந்த குழந்தைகளை அந்த குறுகிய இடத்தில் வைத்திருப்பதை ஓஷோ விரும்பவில்லை. அதனால் பெண் சன்னியாசிகள் கர்ப்பமாக இருப்பதை அவர் ஊக்கப்படுத்தவில்லை. ஓஷோ ஆசிரமத்தின் பல அதிகாரிகளை கருத்தடை அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தும்படி கேட்டுக் கொண்டார். ஏனெனில் கர்ப்பிணிப் பெண்களும், அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளும் ஆசிரமத்திற்குப் பிரச்சனையாக மாறும் என அவர் எண்ணினார். ஆசிரமத்திற்குள் பிரசவம் தடை செய்யப்பட்டது. கர்ப்பிணிப் பெண்கள் ஆசிரமத்திற்குள் வாழ முடியாது என்ற நிலை உருவாக்கப்பட்டது,” என எழுதுகிறார்.

ஓஷோ அடிக்கடி ‘பாலியல் ஆற்றலைப் புதுப்பிப்பது’ பற்றி பேசினார். ஆசிரமத்தில் வாழ்ந்த துறவிகள் வெளிப்படையான பாலியல் வாழ்க்கையை வாழ்ந்தனர். இதன் காரணமாக அங்கு பாலியல் நோய் தொற்றுகள் அதிகரிக்கத் தொடங்கின. சில பெண் சன்னியாசிகள் ஒரு மாதத்தில் சுமார் 90 முறை உடலுறவு கொண்டுள்ளனர்.

ஆனந்த் ஷீலா தமது நூலில், “இவ்வளவு பிஸியான நாளுக்குப் பிறகும் துறவிகள் உடலுறவுக்கு எப்படி நேரம் கண்டுபிடித்தார்கள் என்று நான் ஆச்சரியப்பட்டேன்,” என எழுதுகிறார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
வாசனை திரவியங்களினால் உடலுக்கு ஏற்பட்ட ஒவ்வாமை

இதற்கிடையில், ஓஷோவுக்கு நோய்கள் அதிகரிக்கத் தொடங்கின. அவரது ஒவ்வாமை, ஆஸ்துமா மற்றும் முதுகுவலி ஆகிய அனைத்து நோய்களும் மோசமடைந்து வந்தன.

அவருக்கு நீரிழிவு நோய் அதிகரித்தபோது, ​​அவர் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேறுவதையும், உரை நிகழ்த்துவதையும் நிறுத்தினார். அவரது கண்கள் பலவீனமடைந்தன. புத்தகத்தைப் படித்தவுடன் அவருக்கு மீண்டும் தலைவலி தொடங்கியது.

ஆனந்த் ஷீலா தமது நூலில், “அவருக்கு வாசனை திரவியம் என்றால் மிகவும் ஒவ்வாமை இருந்தது. வாசனை திரவியங்களை எடுத்துக்கொண்டவர்கள் அவர் அருகில் வருவதைத் தடுக்க நாங்கள் நிறைய முயற்சிகள் செய்ய வேண்டியிருந்தது.

காலை மற்றும் மாலை உரைகளுக்கு முன்பு, அவரது உரையைக் கேட்டுககொண்டிருந்த ஒவ்வொருவரும், அவர் வாசனை திரவியம் எடுத்திருந்தாரா என கண்டுபிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. இது ஒரு விசித்திரமான செயல்முறை. ஆனால் ஓஷோவை ஒவ்வாமையிலிருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம்,” என எழுதுகிறார்.

  • ஆச்சார்யா ரஜ்னீஷின் ராஜ்ஜியம்
அமெரிக்காவில் ஆசிரமம் – 17 நாட்கள் சிறைவாசம்

புனேவில் இருந்த ஆசிரமத்தில் வசித்துவந்த அவர் பின்னர் அமெரிக்காவின் ஒரேகானில் ஒரு ஆசிரமம் அமைக்கத் திட்டமிட்டார். இந்த ஆசிரமத்தில் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் கூடி வாழ வேண்டும் என்றும் அவர் விரும்பினார். இதையடுத்து அவர் மே 31, 1981 அன்று, அவர் மும்பையிலிருந்து தனது புதிய அமெரிக்க ஆசிரமத்திற்குப் புறப்பட்டார்.

விமானத்தில் முதல் வகுப்பு இருக்கைகள் அனைத்தும் அவருக்கும் அவரது நெருங்கிய கூட்டாளிகளுக்கும் முன்பதிவு செய்யப்பட்டிருந்தன. அவருடன், அவரது ஆசிரமவாசிகளில் இரண்டாயிரத்து ஐநூறு பேரும் அமெரிக்கா சென்றனர். அவர்களில் பிரபல திரைப்பட நடிகர் வினோத் கண்ணாவும் ஒருவர். இதற்கிடையில், ஓஷோ 93 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வாங்கினார். ஆனால் அதன் பின் தான் அவருக்கு மோசமான காலம் தொடங்கியது என்பதுடன், அவரது அமெரிக்க கனவு சீட்டுக் கட்டைப் போல் சரிந்தது.

குடியேற்ற விதிகளை மீறியதாக அவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டது. இதன் காரணமாக அவர் 17 நாட்கள் அமெரிக்க சிறையில் இருக்க வேண்டியிருந்தது. சிறையில் இருந்து வெளிவந்த பிறகு, அவர் அமெரிக்காவை விட்டு வெளியேற ஒப்புக்கொண்டார். இதற்குப் பிறகு பல நாடுகளில் தஞ்சம் அடைய முயன்றார். ஆனால் ஒன்றன்பின் ஒன்றாக எல்லா நாடுகளும் அவரை ஏற்க மறுத்துவிட்டன.

இறுதியில் அவர் தனது தாய் நாடான இந்தியாவுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

ஜனவரி 19, 1990 அன்று, அவர் தனது 58 வயதில் இந்த உலகத்திலிருந்து விடைபெற்றார். புனேவில் உள்ள அவரது இல்லமான ‘லாவோ சூ ஹவுஸ்’ என்ற இடத்தில் அவரது கல்லறை கட்டப்பட்டது, அந்த கல்லறையில், “ஓஷோ, ஒருபோதும் பிறக்கவில்லை, இறக்கவும் இல்லை. டிசம்பர் 11, 1931 மற்றும் ஜனவரி 19, 1990 இடைப்பட்ட காலத்தில் அவர் இந்த பூமிக்கு ஒரு பயணியாக வருகை தந்தார்,” என எழுதப்பட்டது.

 பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *