இயேசுவின் உண்மையான பிறந்த நாள் எது? டிசம்பர் 25 என தீர்மானிக்கப்பட்டது எப்படி?

அது ஏப்ரல் 13 ஆக இருக்கலாம் அல்லது அக்டோபர் 14 அல்லது ஜூலை 3.

இயேசுவின் பிறந்த தேதியை தீர்மானிக்கும் பொறுப்பில் இருந்த இடைக்காலத் துறவி தவறு செய்யாமல் இருந்திருந்தால், நாம் இப்போது 2023க்கு பதிலாக 2026ஆம் ஆண்டில் இருந்திருக்க வாய்ப்புகள் இருக்கிறது.

நாசரேத்தில், இயேசு எந்த தேதியில் பிறந்தார் என்பதை உறுதியாக அறிய முடியவில்லை. அவருடைய வாழ்க்கையைப் பற்றி அறிந்துகொள்ள வரலாற்றாசிரியர்களுக்கு இருக்கும் ஒரே ஆதாரம் நற்செய்திகளே (Gospel).

அவர் இறந்து பல தசாப்தங்களுக்குப் பிறகு வாழ்ந்தவர்கள், அவரை நேரில் சந்திக்காதவர்கள், இயேசுவை மெசியாவாக ஏற்று விசுவாசப் பிரச்சாரகர்களாக இருந்தவர்கள், இவர்களால் இந்த நற்செய்திகள் எழுதப்பட்டன.

வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, முதல் தலைமுறை கிறிஸ்தவர்களால் சொல்லப்பட்ட அவரது கதை இரண்டாவது, மூன்றாவது அல்லது ஐந்தாவது தலைமுறைக்கு கடத்தப்பட்டு பின்னர் அது வெளியே வருகிறது.

ஆனால் அக்கதைகள் இயேசுவின் மரணம் மற்றும் உயிர்தெழுதலைப் பற்றி மட்டுமே அதிகம் பேசுகின்றன. அவரது பிறப்பை பற்றி அல்ல.

எவ்வாறாயினும், சுவிசேஷகர்களின் உரைகள் இயேசுவை, வரலாற்றின் ஒரு குறிப்பிட்ட தருணத்தில் வாழ்ந்த ஒரு நபராக, அவருடைய இருப்பை உறுதி செய்வதற்கான தடயங்களையும் வழங்குகின்றன என்பதில் ஆராய்ச்சியாளர்களிடையே ஒருமித்த கருத்து உள்ளது.

கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்
சுவிசேஷங்கள் இயேசுவின் மரணத்திற்குப் பிறகு எழுதப்பட்டது.

இயேசுவின் சிறுவயது கதைகள்

சுமார் கி.பி 80-90 ஆண்டுகளில் எழுதப்பட்ட மத்தேயு மற்றும் லூக்காவின் சுவிசேஷங்களை முக்கிய ஆதாரங்களாக பிபிசியிடம் காட்டுகிறார் ஸ்பானிய வரலாற்றாசிரியர் ஜேவியர் அலோன்சோ.

புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான பதிவுகளான மாற்குவின் நற்செய்தி மற்றும் தூதர் பவுலின் ஏழு கடிதங்கள் உண்மையானவை என்று கருதப்பட்டாலும், அவற்றில் இயேசுவின் ஆரம்பக் கால வாழ்க்கை குறித்து எதுவும் இல்லை.

ஆனால் மத்தேயு மற்றும் லூக்காவின் நற்செய்திகளில் “இயேசுவின் குழந்தைப் பருவத்தின் கதைகள்” இருக்கின்றன.

“சிக்கல் என்னவென்றால், காலவரிசைக் கண்ணோட்டத்தில் பார்த்தால், அவை பொருந்தாதவையாக இருக்கின்றன” என்று செமிடிக் தத்துவவியலாளரும் விவிலிய அறிஞருமான அலோன்சோ கூறுகிறார்.

முதலாம் ஏரோது ஆட்சியின் போது, அவர் இறப்பதற்கு சில காலம் முன்பு இயேசு பிறந்தார் என மாற்கு கூறுகிறார். “ஏரோது கிமு 4இல் இறந்ததை நாம் அறிவோம், மத்தேயு நற்செய்தியின்படி இயேசு கிமு 4, 5, 6 அல்லது 7இல் பிறந்திருக்க வேண்டும்” என்கிறார் மாற்கு.

கிறிஸ்துவாக மாறுவதற்கு பல ஆண்டுகள் முன்பே, இயேசு என்பவர் சாதாரண மனிதனாக, அதாவது ஒரு இயல்பான தருணத்தில் பிறந்திருக்கலாம் என அவர்கள் நினைக்கிறார்கள்.

கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்
மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்ய ஜோசப் மற்றும் மேரி பெத்லகேம் செல்ல வேண்டியிருந்தது என்கிறது லூக்கா நற்செய்தி.

இயேசுவின் பெற்றோர் பெத்லகேம் சென்றது ஏன்?

ஆனால் லூக்கா முதல் ஏரோதைப் பற்றி பேசவில்லை, அவர் இயேசுவின் பிறப்பை கிமு 6-இல் நடந்த குய்ரினஸ் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தொடர்புபடுத்துகிறார். அவரின் கதைப்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பில் தங்களை பதிவு செய்வதற்காக இயேசுவின் பெற்றோரான மேரியும் ஜோசப்பும் கலிலீ பகுதியிலிருந்து பெத்லகேமுக்குச் செல்ல வேண்டியிருந்தது.

சிரியாவின் ரோமானிய ஆளுநராக இருந்த பப்லியஸ் சல்பிசியஸ் குய்ரினஸ் செய்த மக்கள்தொகை பதிவு இது. அப்போது அவரது ஆட்சியின் கீழ் யூதேயாவும் இருந்தது என்றும், இயேசுவின் தந்தை ஜோசப் பிறந்த இடம் யூதேயா என்பதால், மேரி கர்ப்பமான நிலையில் இருந்தபோதிலும், தம்பதியினர் அங்கு செல்ல வேண்டியிருந்தது என்றும் சுவிசேஷகர் லூக்கா உறுதியாக கூறுகிறார்.

வரலாற்றாசிரியர் ஃபிளேவியஸ் ஜோசபஸின் சாட்சியத்தின்படி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடந்தது உண்மை. இது ஒரு குறிப்பிட்ட காலத்தை நமக்கு சொல்கிறது, ஆண்டு கிபி 6, “அதாவது, மத்தேயுவிற்கும் லூக்காவிற்கும் இடையே குறைந்தது 10 வருடங்கள் வித்தியாசம் உள்ளது” என்று அலோன்சோ வாதிடுகிறார்.

“மத்தேயு 1 மற்றும் 2, லூக்கா 1 மற்றும் 2 ஆகிய அத்தியாயங்கள், அந்தந்த சுவிசேஷங்கள் ஏற்கனவே மக்களிடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் புதிதாக சேர்க்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன, நாம் இந்த விஷயத்தையும் நினைவில் கொள்ள வேண்டும்” என நம்மிடம் கூறுகிறார் பேராசிரியர் அன்டோனியோ பினெரோ.

இவர் மாட்ரிட்டின் கம்ப்ளூட்டன்ஸ் பல்கலைக்கழகத்தின் கிரேக்க மொழியியல் துறையிலிருந்து ஓய்வு பெற்றவர். ஆரம்பகால கிறிஸ்தவத்தின் மொழி மற்றும் இலக்கியத்தில் இவர் ஆய்வு செய்துள்ளார்.

“மத்தேயு 3 மற்றும் லூக்கா 3இல் உள்ள கதாபாத்திரங்களுக்கு அதற்கு முன்பான அத்தியாயங்களில் என்ன நடந்தது என்பது பற்றிய எந்த சிந்தனை இல்லை, மேலும் முரண்பாடான தரவுகளும் அதில் உள்ளன” என்று பினெரோ வாதிடுகிறார்.

இந்தக் கதைகள் இரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தை சேர்ந்தவை என வரலாற்றாசிரியர்கள் வகைப்படுத்துகிறார்கள் என்கிறார் பினெரோ.

எனவே, இயேசுவின் பிறப்பு மற்றும் குழந்தைப் பருவம் பற்றி எழுதப்பட்ட நேரத்தில், அவர் இறந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியிருந்தது.

அதற்குள், உலகில் சுமார் 3,000 கிறிஸ்தவர்கள் வெவ்வேறு சமூகங்களில் வாழ்ந்து கொண்டிருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று பினெரோ சுட்டிக்காட்டுகிறார்.

கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்
முதலாம் ஏரோது ஆட்சியின் போது இயேசு பிறந்தார் என மார்க் கூறுகிறார்

மத்தேயு அல்லது லூக்கா, எந்தக் கதை உண்மைக்கு நெருக்கமானது?

இதைத் தீர்மானிக்க, வரலாற்றாசிரியர்கள் நற்செய்திகளில் வரும் மற்ற வரலாற்று அறிவிப்பாளர்களைக் குறித்து ஆய்வு செய்துள்ளனர். குறிப்பாக இயேசுவின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கதாபாத்திரம், பொன்டியஸ் பிலாத்து.

கி.பி 26 முதல் 36 வரை நடந்த பொன்டியஸ் பிலாத்துவின் ஆட்சிக் காலத்தில் இயேசு இறந்ததாக அறியப்படுகிறது. அவர் பேரரசர் டைபீரியஸின் பதினைந்தாவது ஆண்டில் பிரசங்கம் செய்யத் தொடங்கினார் என்று அலோன்சோ விளக்குகிறார்.

“நாம் மத்தேயுவின் கதைகளில் கவனம் செலுத்தினால், இயேசு கிமு 4ஆம் ஆண்டில் பிறந்தார் என்றால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும். அவர் 30ஆம் ஆண்டில் இறந்துவிடுகிறார். அதாவது சுமார் 34 வயதில் மரணம் நிகழ்ந்திருக்கும்” என்று வரலாற்றாசிரியர் அலோன்சோ வாதிடுகிறார்.

இவர் “கடவுளின் ஐந்து முகங்கள்” அல்லது “உயிர்த்தெழுதல், மனிதனிடமிருந்து கடவுளுக்கு” போன்ற படைப்புகளின் ஆசிரியர்.

இருப்பினும், நாம் லூக்காவின் கதையைக் கேட்டால், இந்த கணக்கு வேலை செய்யாது.

“தேதிகளின்படி, மத்தேயுவின் கதை பொருந்துகிறது. அதாவது கிமு 4இல், முதலாம் ஏரோதின் கடைசி ஆண்டுகளில் இயேசு பிறந்தார். மறுபுறம், குய்ரினஸ் மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த காலத்திற்கு பொருந்தாது.”

“இஸ்ரேலின் வடக்கே உள்ள நாசரேத்திலிருந்து சிலரை பெத்லகேமுக்கு மாற்றுவதற்கு இதை ஒரு சாக்காக லூக்கா பயன்படுத்தினார் என்று புரிந்து கொள்ளப்படுகிறது, காரணம் பெத்லகேமில் தான் இயேசு எனும் மெசியா பிறக்க வேண்டும் என்ற ஒரு தீர்க்கதரிசனம். இவ்வாறு லூக்கா பதிவு செய்தது கூட ஒரு இலக்கிய கலை தான்” என்று ஜேவியர் அலோன்சோ முடிக்கிறார்.

அன்டோனியோ பினெரோ இது ஒரு துல்லியமான ஆதாரம் என்று ஒப்புக்கொள்கிறார்.

“இயேசு தான் மெசியா என்று நீங்கள் நம்பினால், நீங்கள் மீகாவின் தீர்க்கதரிசனத்தை ஒப்புக்கொள்கிறீர்கள், அத்தியாயம் 5:1, அந்த டேவிட் பிறந்த நகரமான பெத்லகேம், அங்கிருந்து வரும் மெசியா”. இயேசு பெத்லகேமில் பிறந்தால் தான் பழைய ஏற்பாட்டில் இருக்கும் இந்த தீர்க்கதரிசனம் நிறைவேறும்”

கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்
வரலாற்றாசிரியர் ஃபிளேவியஸ் ஜோசபஸ்.

மேலும் ஆதாரங்கள் உள்ளதா?

இல்லை என்பதே பதில்.

இயேசுவின் இருப்பை சரியான வரலாற்று தருணங்களில் வைப்பதற்கான காலவரிசை மையங்களை மற்ற சுவிசேஷங்கள் வழங்குகின்றன, ஆனால் வேறு எந்த நூல்களிலும் அவருடைய வாழ்க்கை பதிவு செய்யப்படவில்லை.

1ஆம் நூற்றாண்டின் யூதேயா-ரோமன் வரலாற்றாசிரியரான ஃபிளேவியஸ் ஜோசபஸ், இயேசுவைக் குறித்து 95ஆம் ஆண்டில் வெளியான தனது ‘யூதர்களின் வரலாறு’ எனும் நூலில் எழுதியுள்ளார். ஆனால் அதிலும் இயேசுவின் பிறப்பைக் குறித்து எழுதாமல், பொதுவாகவே எழுதியுள்ளார்” என பினெரோ விளக்குகிறார்.

“பேரரசர் அகஸ்டஸ் பிறந்த நாளை கூட அறிந்து கொள்ளலாம், ஆனால் ஒரு கலிலியன் மதப் போதகர் பிறந்தது குறித்து யாருக்கும் தெரியாது. உண்மையில், நம்மிடம் உள்ள ஆதாரங்கள் பழமையானவையாக இருந்தாலும் துல்லியமாக இல்லை” என்று ஜேவியர் அலோன்சோ கூறுகிறார்.

முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் ஏன் இயேசுவின் குழந்தைப் பருவத்தில் ஆர்வம் காட்டவில்லை? பவுல், இயேசுவின் ஆரம்ப காலங்களைப் பற்றி எப்படி எதுவும் சொல்லவில்லை? இயேசு இறந்து சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு, ஆரம்பகால நற்செய்தியை எழுதிய மாற்கு ஏன் இயேசுவின் பிறப்பைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை?

பினெரோவின் கூற்றுப்படி, கடவுளுடைய ராஜ்யத்தின் வருகை விரைவில் நிகழும் என்ற இயேசுவின் செய்தியை மட்டுமே முதல் தலைமுறை கிறிஸ்தவர்கள் எடுத்துக்கொண்டனர் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

அந்த வருகை என்பது அவர்களைப் பொறுத்தவரை எதிர்காலத்திலோ, காலத்தின் முடிவிலோ அல்லது இறுதித் தீர்ப்புக்குப் பின்னரோ நடக்கக்கூடிய ஒன்றல்ல. அதனால் தான் இயேசுவின் போதனைகளிலிருந்து குறிப்பிட்ட தருணங்களையோ நிகழ்வுகளையோ நினைவில் கொள்வதில் அவர்களுக்கு ஆர்வம் இல்லை.

“ஆரம்பகால கிறிஸ்தவத்திற்கு, கடவுளுடைய ராஜ்யத்தின் வருகை மிக விரைவில் நடக்கும் என நம்பிக்கை இருந்தது, அதனால் அவர்கள் இயேசுவின் கல்லறையைப் பற்றியோ அல்லது அவர் இறந்த சரியான தேதியைப் பற்றியோ, அவர் பிறந்த தேதியைப் பற்றியோ கவலைப்படவில்லை” என்று கூறுகிறார் பேராசிரியர் பினெரோ.

இருப்பினும், இயேசுவின் சமகாலத்தவர்கள் இறந்துவிட்டதால், கடவுளுடைய ராஜ்யம் வரவில்லை என்பதை அடுத்த தலைமுறையினர் உணர்ந்ததால், இயேசுவைப் பற்றி அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கூற, அவரைப் பற்றி தாங்கள் அறிந்ததைப் பதிவு செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

“ஆரம்பகால கிறிஸ்தவ மதத்தில் இயேசுவின் பிறப்புக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை, ஏனென்றால் இயேசு மனிதகுலத்தின் பாவங்களுக்காக இறந்து உயிர்த்தெழுந்தார் என்பதே அசல் செய்தி. அதுவே மரணத்தின் மீதான வெற்றி. மற்ற அனைத்தும் அலங்காரமாக தான் பார்க்கப்பட்டது” என்று வரலாற்றாசிரியர் பினெரோ வாதிடுகிறார்.

“அவரது புகழ் அதிகரித்ததால், அவரது வாழ்க்கை வரலாற்றில் இருக்கும் இடைவெளிகளை நிரப்ப, கதாபாத்திரத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் எழுந்தது”

“அதனால் தான் கிறிஸ்தவம் இயேசுவின் வாழ்க்கை வரலாற்றை பின்னோக்கி எழுதுகிறது. பழமையான நூல்கள் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலைக் குறிக்கின்றன”

“பின்னர் அவை அவரது பொது வாழ்க்கை, 3 ஆண்டு பிரசங்கம் பற்றி பேசத் தொடங்குகின்றன. இயேசுவின் பிறப்பைப் பற்றி பேசும் மத்தேயு மற்றும் லூக்கின் அந்த இரண்டு நூல்கள் மிக சமீபத்தியவை”.

கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்
மத்தேயு மற்றும் லூக்கா நற்செய்திகளின் முதல் இரண்டு அத்தியாயங்கள் மட்டுமே இயேசுவின் குழந்தைப் பருவத்தைக் குறிப்பிடுகின்றன.

துறவி டியோனிசஸ்

வரலாற்று சான்றுகள் நம்மை கிமு 4ஆம் ஆண்டுக்கு அழைத்துச் சென்றால், கிமு 1 என்ற குறிப்பு எங்கிருந்து வருகிறது?

இங்கே தான் 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பைசண்டைன் துறவி, டியோனிசஸ் தி எக்சிகுயஸ் நுழைகிறார்.

பினெரோ விளக்குவது போல் டியோனிசஸ் என்பவர் 497ஆம் ஆண்டு ரோமில், கிழக்கு தேவாலயங்களுடன் ஒரு உடன்படிக்கையை எட்டுவதற்கும் ஈஸ்டர் தேதியை தீர்மானிப்பதற்கும் போப் ஆண்டவரால் நியமிக்கப்பட்டவர்.

மேலும், ஈஸ்டர் தேதி தீர்மானிக்கப்பட்டதும், இயேசு எப்போது பிறந்தார் என்பதையும் விசாரிக்கும்படி போப் ஆண்டவரால் கேட்டுக்கொள்ளப்பட்டவர்.

டியோனிசஸ் ஒரு கால வரையறை நிபுணர். காலவரிசை குறித்து அந்த கால நூல்களில் இருந்து கற்றுக்கொண்டவர்.

“இன்று ஒரு வரலாற்றாசிரியரிடம் இருக்கும் வசதிகள் அவரிடம் இல்லை, போப் ஆண்டவர் அவருக்கு கட்டளையிட்டபடி அவர் அதைச் செய்தார், கண்டிப்பாக அவர் பிழையாக தான் பதிவு செய்துள்ளார்” என்று ஜேவியர் அலோன்சோ வாதிடுகிறார்.

இயேசு, ரோம் நிறுவப்பட்ட 753 ஆண்டுகளுக்குப் பிறகு பிறந்தார் என்று தீர்மானித்தார் துறவி டியோனிசஸ். மேலும் 754 ஆம் ஆண்டை கிறிஸ்தவ சகாப்தத்தின் 1ஆம் ஆண்டாக நிறுவினார்.

ஆண்டுகளை எண்ணும் இந்த முறை காலப்போக்கில் தொடர்ந்தது, அதனுடன் இயேசுவின் பிறந்த தேதியில் ஏற்பட்ட பிழையும் தொடர்ந்தது.

அந்த காலத்தில், ரோமானியாவில் உலக நேரம் என்பது ஒரு பேரரசரின் ஆட்சிக்காலத்தின் தொடக்க ஆண்டிலிருந்து அளவிடப்பட்டது (உதாரணமாக, டைபீரியஸின் ஆண்டு 5, அல்லது நீரோவின் 4) மற்றும் சில நகரங்களில் அவை நிறுவப்பட்ட ஆண்டிலிருந்து அளவிடப்பட்டது (ரோம் நகரம் உருவான ஆண்டைப் போல)

கிறிஸ்தவம், இயேசு கிறிஸ்து, மதங்கள், வரலாறு, கிறிஸ்துமஸ்
கிறிஸ்தவம் “சூரியக்கடவுளின் திருவிழா” எனும் பேகன் பண்டிகையை ஏற்றுக்கொண்டது.

டிசம்பர் 25 என்ற தேதி வந்தது எப்படி?

டிசம்பர் 25 என்பதில் டியோனிசஸுக்கு எந்த பங்கும் இல்லை, ஏனென்றால் அது அவருக்கு முன்பே நிறுவப்பட்டது.

“பேரரசர் தியோடோசியஸ் I தி கிரேட் 380ஆம் ஆண்டிற்குப் பிறகு ரோமானியப் பேரரசின் பிரத்யேக மதமாக கிறிஸ்தவத்தை நிறுவினார்.

மேலும் தேவாலயம் என்பது பிறரால் துன்புறுத்தப்படுவதில் இருந்து அது மற்றவரை துன்புறுத்துக்கூடிய ஒரு அமைப்பாக மாறும்போது, ​​​​கிறித்துவத்தில் ஒருங்கிணைய முயற்சிக்கிறது, முடிந்தவரை பேகனிசத்தை போல” என்று பினெரோ கூறுகிறார்.

டிசம்பர் 25 அன்று பேரரசில் “சூரிய கடவுளுக்கான” திருவிழா கொண்டாடப்பட்டது. சூரியக் கடவுள் ஜீயஸ், இருளை தோற்கடித்த நாள் அது. பகல் நேரம் அதிகமாக இருக்கும் குளிர்கால தருணத்தில், கதிர்த்திருப்பம் அன்று நடக்கும் நிகழ்வு அது”

“கதிர்த்திருப்பம் நடப்பது 21ஆம் தேதி, ஆனால் முன்னோர்கள் அதை 25ஆம் தேதி கொண்டாடினர், ஏனென்றால் “சூரிய கடவுளுக்கான திருவிழா”, அதாவது ஜீயஸ் இருளை தோற்கடிப்பதை ஏற்கனவே கணித்த தேதி அது.”

“மேலும் ஜீயஸ் யார், அவர் தான் இயேசு. அதனால் தான் அந்த தேதி கிறிஸ்தவமயமாக்கப்பட்டது மற்றும் இயேசுவின் பிறப்பு டிசம்பர் 25 என்று தீர்மானிக்கப்பட்டது,” என்று அன்டோனியோ பினெரோ விளக்குகிறார்.

“அந்த மாதத்தில் ரோமானியர்கள் சனிக் கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சாட்டர்னாலியா திருவிழாவைக் கொண்டாடினர். அதில் மாலைகள் தொங்கவிடப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன. கிறிஸ்துமஸ் மரங்களைப் போன்ற மரங்களும் இருந்தன. இந்த வழியில் தேதிகள் நகலெடுக்கப்பட்டன, அல்லது மாற்றப்பட்டன. பல முறை பழக்கவழக்கங்கள், சடங்குகள் அப்படியே எடுத்துக்கொள்ளப்பட்டன” என்று அலோன்சோ கூறுகிறார்.

எனவே 4ஆம் நூற்றாண்டு வரை இயேசுவின் பிறப்பு விழாவை கொண்டாடத் தொடங்கவில்லை என தெரிகிறது.

இயேசு

கிறிஸ்தவ விடுமுறையாக டிசம்பர் 25 எப்போது மாறியது?

“இதை அறிந்துகொள்ள கலை ஒரு தடயமாக உதவலாம். ரவென்னாவில் உள்ள சான் விட்டேல் தேவாலயத்தில், 6ஆம் நூற்றாண்டிலிருந்து, அதாவது பேரரசர் ஜஸ்டினியன் காலத்திலிருந்தே வரையப்பட்ட படங்கள் உள்ளன. எடுத்துக்காட்டாக, மன்னர்களை வணங்குவது போன்ற படங்கள்”

“இயேசுவின் பிறப்பு தொடர்பான நற்செய்திகளிலிருந்த அத்தியாயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இவை வரையப்பட்டுள்ளன.” என்கிறார் அலோன்சோ.

நாம் கொண்டாடும் தேதி உண்மையில் இயேசு பிறந்த தேதி இல்லை என்றால், அவரது பிறப்பைப் பற்றிய வேறு என்ன தகவல்கள் நிரூபிக்கப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கருதுகிறார்கள்?

இயேசுவின் குழந்தைப் பருவத்தைப் பற்றிப் பேசும் மத்தேயு மற்றும் லூக்காவின் அத்தியாயங்கள் ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதால், “இரண்டு வெவ்வேறு நபர்களைப் பற்றி பேசுவது போல் தெரிகிறது” என்று அன்டோனியோ பினெரோ கருதுகிறார்.

“அந்த கதைகள் எங்கே பொருந்துகிறது என்றால், அவரது பெற்றோர்கள் மேரி மற்றும் ஜோசப் என்றே அழைக்கப்பட்டனர், அவர்கள் மிகவும் மத நம்பிக்கை கொண்ட ஒரு குடும்பம் மற்றும் இயேசு ஒரு கலிலியன்” என்கிறார் பினெரோ.

ஜேவியர் அலோன்சோவைப் பொறுத்தவரை இரண்டு கதைகளுமே உண்மைக்கு நெருக்கமாக இல்லை. அவர் இறுதியாக கூறியது, “அவை எனக்கு கிட்டத்தட்ட இரண்டு புராண நூல்கள் போல தான் தெரிகின்றன”.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *