தமிழர் விடுதலைப் போராட்டத்தை நேசித்த அருட்தந்தை காலமானார்!

யாழ். மறைமாவட்டத்தின் சிரேஷ்ட அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளார் நேற்றுக் கொழும்பில் மாரடைப்பு நோய் காரணமாக தனது 74ஆவது வயதில் காலமானார்.

இவர் யாழ். மனித முன்னேற்ற நடுநிலையத்தின் பணிப்பாளராகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தில் உள்ள ஆரோகணம் இளையோர் விடுதி இல்லத்தின் இயக்குநராகவும், வன்னிப் பெருநிலப்பரப்பில் பல்வேறு பங்குகளில் அருட்தந்தையாகவும் இருந்து அருட்பணி புரிந்தவர்.

ஆழிப்பேரலை அனர்த்தம் ஏற்பட்டபோது முல்லைத்தீவு பங்குத்தந்தையாக இருந்து மதங்களைக் கடந்து மனிதாபிமானப் பணியை அப்பகுதி மக்களுக்கு அறப்பணி புரிந்தவர். முல்லைத்தீவு நகரில் அமையப்பெற்ற ஆழிப்பேரலை நினைவாலயத்தை (பழைய இராயப்பர் தேவாலயத்தில்) நிறுவ முன்னின்று உதவியவர்.

இவர் அனைத்து மதத்தவர்களினாலும் மதிக்கப்பட்டவர். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நேசித்ததுடன் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைமையாலும் நேசிக்கப்பட்ட மனிதர்.

போர்க்காலத்தில் மக்களோடு மக்களாக இருந்து அருட்பணியுடன் அறப்பணியாற்றியவர்.

இவர் 2009ஆம் ஆண்டு இறுதிப்போரின்போது வலைஞர்மடம் பகுதியில் கிறிஸ்தவ தேவாலயத்தின் மீது அரச படையினால் நடத்தப்பட்ட எறிகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தார்.

அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரின் இழப்பானது தமிழ் மக்களுக்குப் பேரிழப்பாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *