சுனாமி அனர்த்தத்தை உலக நாடுகள் எதிர்கொண்டு 19 வருடங்கள் பூர்த்தி

கடலோர மக்களுக்கு அலைகள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், 19 ஆண்டுகளுக்கு முன்னர் கிறிஸ்துமஸ் பண்டிகை நிறைவுற்று இதே போன்றதொரு நாளில் ஏற்பட்ட அலையானது அத்தனை உயிர்களை காவுகொள்ளுமென யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

2004 ஆம் ஆண்டு இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் கடல்பகுதியில் அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கமானது 9.1 முதல் 9.3 ரிக்டர் அளவில் பதிவு செய்யப்பட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தினால் 14 இற்கும் மேற்பட்ட நாடுகள் பாதிப்பை எதிர்கொண்டன. இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இதற்கமைய, இலங்கையின் 14 கரையோர மாவட்டங்களும் பாதிக்கப்பட்டன.

இந்த அனர்த்தத்திற்கு சுமார் 35,000 பேர் பலியானதுடன், 5,000 பேர் வரை காணாமல் போனதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கின்றது.

அத்துடன், 34 பிரதேச செயலகப் பிரிவுகளில் 235,145 குடும்பங்களை சேர்ந்த 5,002,456 பேர் பாதிப்பை எதிர்கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், நாட்டின் சமூக, பொருளாதார, கலாசார மற்றும் சுற்றுச்சூழல் மிகப்பாரிய அளவில் பாதிக்கப்பட்டது.

இந்த பின்னணியில், சுனாமி அனர்த்தத்தை இலங்கை மாத்திரம் அன்றி உலக நாடுகள் எதிர்கொண்டு இன்றுடன் 19 வருடங்கள் பூர்த்தியாகின்றன.

இதனை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறுகின்றன.

இந்த நிலையில், இலங்கையில் 2005 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

சுனாமி அனர்த்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த மக்களை நினைவுகூறும் வகையில் ‘தேசிய பாதுகாப்பு தினம்’ இன்று நாடளாவிய ரீதியில் அனுஷ்டிப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

காலை 9.25 முதல் 9.27 வரை இவ்வாறு இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, பெரலிய சுனாமி நினைவுத் தூபிக்கு முன்பாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தொன்னகோன் தலைமையில் இன்று பிரதான அனுஷ்டான நிகழ்வு இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *