மேற்கு உலகை மிரட்ட அரபு நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தினால் என்ன ஆகும்?

அரை நூற்றாண்டுக்கு முன்பு அரபு நாடுகள் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தன. இந்தப் போர் ‘யோம் கிப்பூர் போர்’ என வரலாற்றில் அறியப்படுகிறது. அந்தப் போரின் விளைவாக இஸ்ரேலில் புதிதாக உருவான யூத அரசை அமெரிக்கா ஆதரித்தது.

அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க, அரபு நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தை நிறுத்தின.

இந்த முடிவு உலகப் பொருளாதாரத்திலும், எரிசக்திக் கொள்கையிலும், மத்திய கிழக்கின் அதிகாரச் சமநிலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவம் நடந்து சரியாக 50 ஆண்டுகளுக்குப் பிறகுதான், தற்போது இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் நடந்து வருகிறது.

இஸ்ரேலுடன் அமெரிக்கா துணை நிற்கும் சூழலில், காஸா மீது இஸ்ரேல் தொடர்ச்சியான தாக்குதலைத் தொடுத்து வருகிறது.

  • இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேலின் செயலால் அரபு நாடுகள் கோபத்தில் உள்ளன. இவ்வாறான நிலையில் போரை முடிவுக்குக் கொண்டு வரவோ அல்லது இஸ்ரேலை பணிய வைக்கவோ, அரபு நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகத்தைத் தடை செய்து அழுத்தம் கொடுக்குமா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

அரபு நாடுகள் மேற்குலக நாடுகளுக்கு எதிராக எண்ணெய் ஆயுதத்தைப் கையில் எடுப்பார்களா? இதற்கு முன்பு அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியபோது அது உலகப் பொருளாதாரத்தில் எந்தளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது? இங்கு விரிவாகப் பார்க்கலாம்.

கொரோனா பேரிடர், சீனாவுடனான மேற்கத்திய நாடுகளின் வர்த்தகப் போர், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மற்றும் ஐரோப்பாவிற்கு எதிரான அதன் ஆக்கிரமிப்பு எரிவாயு கொள்கை ஆகியவை ஏற்படுத்திய பாதிப்புகளோடு உலகப் பொருளாதாரம் இன்னும் போராடி வருகிறது.

மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவின் எண்ணெய் மற்றும் எரிவாயு வளமிக்க நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கும், ‘நட்பற்ற நாடுகளுக்கு’ விநியோகத்தை நிறுத்துவதற்கும் ஒப்புக் கொண்டால், அது உலகப் பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடிக்கு வழிவகுக்கும்.

யோம் கிப்பூர் போரின்போது இருந்த சூழ்நிலைக்கும் மத்திய கிழக்கின் இன்றைய நிலைமைக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. ஆனால் சில வேறுபாடுகளும் இல்லாமல் இல்லை என்கிறார் சர்வதேச எரிசக்தி முகமையின் (IEA) தலைவரான ஃபத்தி பிரோல்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் கூறுகையில், “உலகின் ஆற்றல் சந்தை எழுபதுகளில் இருந்து வியத்தகு முறையில் மாறிவிட்டது. அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்த முடிவு செய்ததை அடுத்துதான் மேற்கத்திய நாடுகள் சர்வதேச எரிசக்தி முகமையை உருவாக்கின. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட உலகம் இதுபோன்ற சூழ்நிலைகளைச் சமாளிக்கத் தயாராக உள்ளது,” எனத் தெரிவித்தார்.

மேற்கத்திய நாடுகளுக்கான எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது குறித்து இஸ்ரேலின் எதிர்ப்பாளர்களும், பாலத்தீன ஆதரவாளர்களும் இதுவரை அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.

ஆனால் நவம்பர் 7ஆம் தேதி, சௌதி அரேபியாவின் அமைச்சர் காலித் அல்-பாலிஹிடம், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு எண்ணெய்யை ஆயுதமாகப் பயன்படுத்த உங்கள் நாடு தயாரா என நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த, காலித் அல்-ஃபாலிஹ், “இன்று இந்த விருப்பத்தை நாங்கள் பரிசீலிக்கவில்லை. சௌதி அரேபியா அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அமைதியை அடைய விரும்புகிறது,” என்று புன்னகையுடன் பதிலளித்தார்.

  • எண்ணெய் விநியோகத் தடைக்கு ஆதரவளிக்கும் இரான்
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம் அடைந்த சூழலில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி செளதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் அவசர மாநாடு நடைபெற்றது. இதில், எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது குறித்துப் பெரிதாக விவாதிக்கப்படவில்லை.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மீது அழுத்தத்தை அதிகரிக்க சில நாடுகள் பல யோசனைகளை முன் வைத்தன. ஆனால் எரிசக்தி தடைகள் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை.

ஆனால் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிரியான இரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இஸ்ரேலுக்கு எண்ணெய் விநியோகத்தைக் குறைக்க வேண்டும் என முன்மொழிந்தார். ஆனால் அதற்கு மற்ற நாடுகளின் ஆதரவு கிடைக்கவில்லை.

இஸ்ரேல் தினசரி மூன்று லட்சம் பீப்பாய்கள் எண்ணெய் வாங்குகிறது. இஸ்ரேலுக்கு எண்ணெய் வழங்கும் நாடுகளில் கஜகஸ்தான் மற்றும் அஜர்பைஜான் ஆகியவையும் அடங்கும்.

இரானின் முறையீட்டின் பேரில், அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகள், எண்ணெய் விநியோக விவகாரத்தில் அரசியல் செய்ய தோங்கள் விரும்பவில்லை என்று தெளிவுபடுத்தும் விதமாக அறிக்கையை வெளியிட்டன.

அரபு நாடுகளும் இரானும் 1950களில் இருந்து, சர்ச்சைக்குரிய பாலத்தீனப் பகுதியில் ராணுவ மற்றும் மனிதாபிமான நெருக்கடிகள் வெடித்ததால், மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக எண்ணெயை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துவது பற்றி விவாதித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

  • எண்ணெய் தடை அரபு நாடுகளுக்கு பயன் தந்ததா?
இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்குலக நாடுகளுக்கு அரபு நாடுகள் இரண்டு முறை எண்ணெய் விநியோகத்தை நிறுத்தியுள்ளன. முதலில் 1967இல் ஆறு நாள் போரின்போது விநியோகம் நிறுத்தப்பட்டது.

பின்னர், 1973இல் யோம் கிப்பூர் போரின்போது தடை விதிக்கப்பட்டது. முதல் தடை பலனளிக்கவில்லை, ஆனால் இரண்டாவது தடை ஆழமான விளைவுகளை ஏற்படுத்தியது.

மேற்கத்திய நாடுகளும் அரபு நாடுகளும் இந்தச் சம்பவங்களில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டன. எனவே, இப்போது யாரும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்துவது குறித்து உறுதியாகப் பேசுவதில்லை. யாரும் அவ்வாறு செய்யத் தற்போது விரும்பவில்லை.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இஸ்ரேல் தன்னை யாரும் தாக்க மாட்டார்கள் என்று நினைத்தது. அதேபோல அரபு நாடுகள் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தாது என அமெரிக்கா கருதியது. ஆனால் இந்த இரண்டு நம்பிக்கைகளுமே தகர்ந்திருக்கின்றன.

யோம் கிப்புர் போரில் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு பத்து நாட்களுக்குப் பிறகு, அரபு நாடுகள் அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் பல மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தின. இது மட்டுமின்றி பாரசீக வளைகுடாவின் ஷேக்கும் இரானின் ஷாவும் எண்ணெய் விலையை 70 சதவீதம் உயர்த்த ஒப்புக்கொண்டனர்.

ஒருபுறம், எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்ட நிலையில், மறுபுறம், அரபு நாடுகளின் எண்ணெய் உற்பத்திக் குறைப்பால், எண்ணெய் விலை ஐந்து மடங்கு அதிகரித்தது.

அந்தக் காலத்தில், உலகின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக எண்ணெய் திகழ்ந்தது. எண்ணெயின் விலை உயர்வால், உலகப் பொருளாதாரம் சிக்கலில் மாட்டியது.

  • இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அமெரிக்காவின் நியூயார்கில் 1975இல் பொருளாதாரா மந்த நிலையின் போது நடந்த போராட்டம்.

அமெரிக்கப் பொருளாதாரம் 1973 மற்றும் 1975 க்கு இடையில் ஆறு சதவீதம் சுருங்கியது. வேலையின்மை விகிதம் ஒன்பது சதவீதமாக அதிகரித்தது. இதேபோல், ஜப்பானின் மொத்த உள்நாட்டு உற்பத்தி இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு முதல் முறையாகச் சரிந்தது.

இந்த பிரச்னையால் இந்தியா, சீனா உள்ளிட்ட வளரும் நாடுகளும் அப்போது அதிகம் பாதிக்கப்பட்டன.

மேற்கத்திய நாடுகள், பல ஆண்டுகளாக பணவீக்கத்தின் சுமையை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதற்குக் காரணம் எண்ணெய் தடை மட்டுமல்ல, மந்தநிலையும் பணவீக்கமும் போருக்கு முன்பே அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்த நெருக்கடி ஆழமடைந்தது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு, மார்ச் 18, 1974 அன்று, இந்தத் தடை இரண்டு முக்கிய காரணங்களுக்காக நீக்கப்பட்டது.

  • முதலாவதாக, இதனால் ஏற்பட்ட நெருக்கடியால் தங்கள் எண்ணெய்க்கான தேவை முடிவுக்கு வருவதை அரபு நாடுகள் விரும்பவில்லை. அமெரிக்காவும் ஐரோப்பாவும் மத்திய கிழக்கின் எண்ணெய் பற்றாக்குறைக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தொடங்கின. எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் நாடுகள் மேற்கத்திய எண்ணெய் நிறுவனங்களின் எண்ணெய் சந்தையில் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டியிருந்தன.
  • இரண்டாவது காரணம், எண்ணெய் தடையின் முக்கிய நோக்கத்தை அவர்களால் ஒருபோதும் அடைய முடியவில்லை. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இஸ்ரேலுக்கு தொடர்ந்து உதவின. எண்ணெய் விநியோகத்தைத் துண்டிக்கும் அச்சுறுத்தலின் அழுத்தத்தின் கீழ் அமெரிக்கர்கள், இஸ்ரேல், எகிப்து மற்றும் சிரியா இடையே அமைதிக்கான மத்தியஸ்தராக செயல்பட ஆர்வம் காட்டவில்லை.

எண்ணெய் விநியோகத்திற்கான தடை நீக்கப்பட்டவுடன், இந்த முழு பிராந்தியத்திலும் படிப்படியாக அமைதி நிலைநாட்டப்பட்டது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேற்கத்திய நாடுகளுக்கு எண்ணெய் விநியோகம் நிறுத்தப்படுவதற்கு முன்பு, உலகின் ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கையும் எண்ணெயை மட்டுமே நம்பியிருந்தது.

ஆனால் இதன் பிறகு, விஷயங்கள் மாறி, இப்போது நிலக்கரி, எரிவாயு மற்றும் அணுசக்தி ஆகியவை சமமான முக்கியத்துவத்தைப் பெற்றன. மேற்கத்திய நாடுகள் தாங்களாகவே எண்ணெயை உற்பத்தி செய்யத் தொடங்கின.

ஐரோப்பிய நாடுகள் சில உடனடியாக வட கடலில் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்தன. அமெரிக்கா அலாஸ்காவிலிருந்து ஒரு குழாய் அமைத்தது.

இதனுடன், மேற்கு நாடுகளின் நிறுவனங்கள் மத்திய கிழக்கு தவிர எண்ணெய் கிடைக்கும் பகுதிகளில் முதலீடு செய்யத் தொடங்கின. எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதன் தாக்கத்தை அமெரிக்கா நன்கு உணர்ந்திருந்தது.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புகழ்பெற்ற வரலாற்றாசிரியரும், “The Prize: The Epic Quest for Oil, Money, and Power” என்ற புத்தகத்தின் ஆசிரியருமான டேனியல் யெர்ஜின்ஸ் கூறுகையில், “1973இல் அமெரிக்கா உலகின் மிகப்பெரிய எண்ணெய் இறக்குமதியாளராக இருந்தது. ஆனால் இப்போது அமெரிக்கா உலகின் மிகப் பெரிய எண்ணெய் உற்பத்தியாளராகவும் முக்கிய ஏற்றுமதியாளராகவும் திகழ்கிறது,” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், “உலக நாடுகள் கூட்டாகத்தான் வாழ முடியும் என்பதுதான் இதன்மூலம் மேற்கத்திய நாடுகள் கற்றுக்கொண்ட மற்றொரு பாடம். அரபு நாடுகள் அனைத்து நாடுகளுக்கும் எண்ணெய் விநியோகத்தை நிறுத்தவில்லை.

உதாரணமாக, பிரிட்டன் அவர்களது நட்பு நாடுகளின் பட்டியலில் இருந்தது. ஆனால் உள்நாட்டு அரசியல் நெருக்கடியால், பிரிட்டனும் எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க வேண்டியிருந்தது,” என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதோடு, “ஒபெக் நாடுகள் எண்ணெய் ஏற்றுமதியைக் குறைத்ததால், மேற்கத்திய நாடுகள், தங்கள் எண்ணெய் நிறுவனங்கள் வளர்ந்த நாடுகளுக்கு எண்ணெயை விநியோகிக்க ஒப்புக்கொண்டன.

இதனால் தங்கள் கூட்டாளிகள் யாரும் அரபு ஷேக்குகளை சார்ந்து இருக்க மாட்டார்கள் என்று மேற்கத்திய நாடுகள் நம்பின. இந்த நெருக்கடியின்போது கடைபிடிக்கப்பட்ட ‘ஒன்றாகப் போராடுவது மற்றும் சமாளிப்பது’ என்கிற நுட்பம் இன்று வரை ஐரோப்பாவில் ஒரு உத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு உருவான நெருக்கடி சூழலுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA), தற்போது மேற்குலக நாடுகளிடையே முக்கியப் பாலமாக திகழ்கிறது,” என்று கூறினார்.

  • இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கிழக்கின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி நாடான சௌதி அரேபியாவின் ஒத்துழைப்பு இல்லாமல், எண்ணெய் விநியோகத்தில் எந்தக் கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துவிட முடியாது. 1973இல், சௌதி அரேபியா மேற்கத்திய நாடுகள் மீதான எண்ணெய் கட்டுப்பாடுகளை தயக்கத்துடன் ஆதரித்தது.

இப்போது விஷயம் முற்றிலும் மாறிவிட்டது என்கிறார் டெக்சாஸ் ஏ&எம் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான க்ரெகொரி காஸ்.

அவர் கூறுகையில், “அப்போது, சௌதி அரேபியா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய எகிப்து மற்றும் சிரியாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. தற்போது இந்த நாடுகள் ஹமாஸுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருக்கின்றன,” என்றார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர்: எண்ணெய் தடை அரபு நாடுகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கூடுதலாக, “சௌதி அரேபியா ஏற்கெனவே ரஷ்யாவை போலவே எண்ணெய் உற்பத்தியையும் குறைத்துள்ளது. உற்பத்தியைக் குறைப்பதன் மூலம் சௌதி அரேபியா எதையும் பெறாது.

அவ்வாறு செய்தால், அது அமெரிக்காவை மட்டுமல்ல, சீனா உட்பட மற்ற வாடிக்கையாளர்களையும் தனக்கு எதிராகத் அது திருப்ப நேரிடும். சௌதி அரேபியா உலகின் இரண்டு பெரிய பொருளாதார மற்றும் ராணுவ சக்திக்கு எதிராக போராட வேண்டியிருக்கும்,” என்றும் தெரிவித்தார்.

செளதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான்,

“லாபத்தைவிட அரசியலுக்கு அதிக முன்னுரிமை அளிக்கும் இடமாக சௌதி அரேபியா பார்க்கப்படுவதை விரும்பமாட்டார். காரணம் சௌதியில் பொருளாதார சீர்திருத்தத்தைக் கொண்டு வருவதே அவரது முக்கிய நோக்கமாக உள்ளது,” என பேராசிரியர் க்ரெகொரி காஸ் குறிப்பிடுகிறார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *