மக்களைக் கடத்தி முதலைகளுக்கு இரையாக்கியவர்களுக்கா வாக்கு? – பிரதமர் ரணில் கேள்வி

“வெள்ளை வானில் மக்களைக் கடத்திக் கொடூரமாக சித்திரவதை செய்து முதலைகளுக்கு இரையாக்கியவர்களுக்கா வாக்களிக்கப் போகின்றீர்கள்? நாட்டு மக்களே இது தொடர்பில் நன்கு சிந்தித்து வாக்களியுங்கள்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

அமைச்சர் ராஜித சேனாரத்ன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், வெள்ளை வான் கடத்தலில் ஈடுபட்டதாகத் தெரிவித்த வான் சாரதி ஒருவர் சில விடயங்களை அம்பலப்படுத்தியிருந்தார். வெள்ளை வான் கடத்தலுக்குக் கோட்டாபய உத்தரவிட்டதாகவும், 300 பேர் வரையில் கடத்திக் கொல்லப்பட்டதாகவும் கூறினார். இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் சர்வதேச ஊடகம் ஒன்றின் கொழும்புச் செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவர் பதிலளிக்கும்போது,

“நவம்பர் 16ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற பின்னர் வெள்ளை வான் விவகாரத்துடன் சம்பந்தப்பட்ட அனைத்துக் குற்றவாளிகளுக்கும் எதிராக நாம் சட்ட நடவடிக்கை எடுப்போம். இதில் உறுதியாக இருக்கின்றோம்.

இது நடைபெறவேண்டும் எனில் எதிர்வரும் 16ஆம் திகதி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கே நாட்டு மக்கள் வாக்களிக்க வேண்டும்.

ராஜபக்ச குடும்பத்தினர் தங்களின் 10 ஆண்டுகள் ஆட்சியில் ஊழல், மோசடிகள் மற்றும் படுகொலைகளை எதற்கும் அஞ்சாது துணிவுடன் முன்னெடுத்துள்ளனர். எனவே, அந்த நிலமை மீண்டும் ஏற்பட நாட்டு மக்கள் இடமளிக்கக் கூடாது.

இந்த நாட்டில் அராஜக ஆட்சி இடம்பெறாமல் இருக்க நாட்டு மக்களின் வாக்கு சஜித்தின் ‘அன்னம்’ சின்னத்துக்கே அளிக்கப்பட வேண்டும்.

படுகொலைகளுக்கு உத்தரவிட்ட தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிடும் கோட்டாபயவை அனைத்துத் தரப்பினரும் தோல்வியடையச் செய்யவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *