கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் அறிமுகம்

சர்வதேச கிரிக்கெட்டில் 3 புதிய விதிகளை ஐ.சி.சி. அறிவித்துள்ளது. அவற்றில் ஒன்றான ஸ்டாப் கிளாக் என்ற புதிய விதிமுறை பந்துவீசும் அணிக்கும், பவுலர்களுக்கும் புதிய நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்டாப் கிளாக் விதிமுறை என்ன? அதனால் பந்துவீசும் அணிக்கு என்ன நெருக்கடி? மற்ற இரு விதிகள் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான டேனியல் மெக்காஹேவுக்கு என்ன பிரச்னை? இந்த 3 விதிகளும் எப்போது முதல் அமலுக்கு வரும்? விரிவாகப் பார்க்கலாம்.

ஐசிசி நிர்வாகிகள் கூட்டம் நவம்பர் 21ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக ஐசிசி அறிவிப்பு வெளியிட்டது. அதில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் பந்துவீச்சும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையே பந்துவீச மூன்றாவது முறையாக 60 விநாடிகளுக்கு மேல் நேரம் எடுத்துக்கொண்டால் 5 ரன்கள் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நடப்பாண்டு டிசம்பர் முதல் 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை சோதனை முயற்சியாக இந்த விதிகள் பின்பற்றப்படும் என்று தெரிவித்திருக்கும் ஐசிசி, விளையாட்டின் வேகத்தையும் பார்வையாளர்களின் அனுபவத்தையும் மேம்படுத்துவதற்கான பரந்துபட்ட முயற்சியின் ஒரு பகுதி என்றும் கூறுகிறது.

சர்வதேச ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் ஸ்டாப் கிளாக் விதிமுறை சோதனை அடிப்படையில் புதிய விதியை கொண்டு வர ஐசிசி முடிவு செய்துள்ளது

  • கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் அறிமுகம்
அடுத்ததாக, கிரிக்கெட்டில் பாலின சமத்துவத்திற்கான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், ஆண் அதிகாரிகளுக்கு இணையாக பெண் அதிகாரிகளும் சம ஊதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பையும் ஐசிசி வெளியிட்டிருக்கிறது.

ஆடவர் போட்டியோ, மகளிர் போட்டியோ நடுவர்களுக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள ஐசிசி, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த அறிவிப்பு செயல்பாட்டுக்கு வரும் என்று கூறியுள்ளது.

இறுதியாக, ஆண்களாக பிறந்து பெண்களாக மாறிய திருநங்கைகள் சர்வதேச பெண்கள் கிரிக்கெட்டில் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. ஆண் எந்த அறுவை சிகிச்சை அல்லது பாலின மறுசீரமைப்பு சிகிச்சையை மேற்கொண்டிருந்தாலும், சர்வதேச பெண்கள் விளையாட்டில் பங்கேற்க தகுதி பெற மாட்டார்கள் என ஐசிசி கூறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்குள் இந்த விதி மறு ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த ஐ.சி.சி. தலைமை நிர்வாகி ஜெஃப் அல்லார்டிஸ், சர்வதேச பெண்கள் விளையாட்டின் ஒருமைப்பாடு மற்றும் வீரர்களின் பாதுகாப்பைப் பாதுகாப்பதே எங்கள் முன்னுரிமை என கூறியிருக்கிறார்.

  • கிரிக்கெட்டில் 3 புதிய விதிகள் அறிமுகம்
ஐசிசி விதிகளில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த மாற்றம் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்ற முதல் திருநங்கையான கனடா அணியின் வீராங்கனை டேனியல் மெக்காஹே இனி மகளிர் கிரிக்கெட்டில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள டேனியல் மெக்காஹே 19 புள்ளி 66 சராசரியுடன் 118 ரன்கள் எடுத்திருந்தார்.

புதிய விதி குறித்து பிபிசி ஸ்போர்ட்ஸிடம் பேசிய டேனியல் மெக்காஹே, “இப்போதுதான் புதிய கொள்கைகளை படித்து பார்த்தேன், ஆனால், கடந்த வாரமே இது குறித்து எனக்கு தெரிவிக்கப்பட்டது. தற்போது பேசுவதற்கு என்னிடம் அதிக வார்த்தைகள் இல்லை, ஆனால், இது ஒரு கடினமான முடிவு. உலகெங்கிலும் உள்ள இளம் திருநங்கைகளுக்கு இது ஏற்படுத்தும் தாக்கத்தை கருத்தில் கொள்ளும்போது இது நம்பமுடியாத ஏமாற்றத்தை அளிக்கிறது” என்றார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *