மறைந்த நாமத்தை உயிர்ப்பிக்க முனைய வேண்டும்! அதிபர் ஜனோபர் அழைப்பு!

– சம்மாந்துறை தேசிய பாடசாலை ‘பேசும் பாடசாலை’ இதுவே எனது இலக்கு.
– முரண்பாடுகளைக் களைந்து: உடன்பாட்டிலிருந்து எனது பணியை ஆரம்பிக்கிறேன்.
– பழைய மாணவர் அமைப்பின் புதிய நிர்வாகத் தெரிவு டிசம்பரில் இடம்பெறும்.
– பாடசாலையின் வளர்ச்சிக்காக பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரினதும் ஆதவரவையும், கருத்துக்களையும் வரவேற்கின்றேன்.

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலைக்கு கடந்த 03.11.2023 அன்று புதிய அதிபராக கடமையேற்ற எம்.ரீ. முஹம்மட் ஜனோபர் அவர்களுடனான நேர்காணலின் தொகுப்பு:

Q: புதிய நியமனம் பெற்ற அதிபர் அவர்களே! முதற்கண் உங்களுக்கான வாழ்த்துக்கள்!. இந்த அதிபர் நியமனம் குறித்தான உங்கள் பார்வை என்ன?

A: இந்த நியமனம் குறித்து எனது பார்வையில் கூறுவதானால்,
எமது பாடசாலையைப் பொறுத்த வரையில் நீண்ட காலமாக பொருத்தமான அதிபரை தேடிக் கொண்டிருந்த ஒரு நிலைமையாகவே இருந்தது. அது பாடசாலை சமூகம் மாத்திரமில்லாமல் முழு ஊருமே தமது தாய்ப் பாடசாலைக்கான தகுதியான அதிபரை தேடும் பணியில் அக்கரையுள்ளவர்களாக இருந்தனர். இந்த நிலையில் எமதூரின் முச் சபைகள், நலன் விரும்பிகள், பழைய மாணவரகள் பலர் இதில் எடுத்துக்கொண்ட அக்கறையின் பலனாக அல்லாஹ்வின் நாட்டம் எனக்கு தற்போது அதிபராக கடையாற்றக் கூடிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

Q: நீங்கள் அதிபராக கடமையேற்ற இந்த குறுகிய நாட்களுக்குள் நிர்வாக ரீதியிலான உங்களது கண்ணோட்டம் யாது?

A: இங்கு குறிப்பிட்ட சில காலமாக நிர்வாக சீரின்மை பெரும் பேசுபொருளாக மாறிவிட்டது. அவற்றுக்குள் பல கெடுபிடிகள் சிக்கியிருந்தன. இவற்றை கருத்திலெடுத்துதான் எமதூரின் முச் சபைகளும் ஒரு சில நலன்விரும்பிகளும் இந்த பாடசாலைக்கான தகுதியான அதிபரை இனங்கானும் பணியில் தீவிரமாக செயற்பட்டனர்.
அவர்களது செயற்பாட்டின் வெளிப்பாடே எனக்களிக்கப்பட்ட நியமனமாகும். இந்தப் பாடசாலையின் மீது அக்கறை என்னிடமுள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் இந்தப் பாடசாலையில் கல்வி கற்பித்த ஒரு ஆசிரியர் நான். இதே பாடசாலையில் ஆசிரியராக இருக்கும் போதுதான் 2016 ஆம் ஆண்டு அதிபர் சேவை பரீட்சை எழுதி சித்தியடைந்தேன். பிற்காலத்தில் பிரதி அதிபராகவம் செயலாற்றியிருக்கிறேன். இன்ஷா அல்லாஹ் தூய நோக்கத்துடன் நான் பாரமேற்ற இந்த பணியைக் கொண்டு அனைவரின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்த்து பாடசாலையின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் – என எதிர்பார்க்கின்றேன்.

Q: குறிப்பிட்ட சில வருடங்களாக பாடசாலையின் உள்ளகக் கட்டமைப்பிலுள்ள நிர்வாகக் குழு மற்றும் பாடசாலை சூழலில் அமைந்த பழைய மாணவர்கள் அமைப்பு மற்றும் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு ஆகியவற்றுக்கிடையிலான தொடர்பாடலில் பல பிணக்குகளை அவதானிக்க கூடியதாக இருந்ததன. இவற்றினது பயணம் உங்களது காலகட்டத்தில் எவ்வாறு அமையும்?

A: எனக்கு எப்போதும் எவருடனும் பகைமைகளை வளர்த்துக் கொண்டு நி;ரவாகம் செய்வதில் உடன்பாடில்லை. கடந்த சில ஆண்டுகளில் நிர்வாகங்களுக்கிடையே ஒன்றுக்கொன்று எதிர்க் கருத்துக்களும், ஒவ்வாமைகளும் இருந்த போதிலும் அவற்றை இனிவரும் காலங்களில் வினைத்திறனாகும் வகையில் ஒரே கோட்டின் கீழ் பயணிக்க கூடிய முயற்சியில் தற்போது முனைப்;புடன் செயற்படுகின்றேன்.
அந்த அடிப்படையில் சில தினங்களுக்கு முன்னர் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழுவினருடனான சந்திப்பு இடம்பெற்றது. அந்த சந்திப்பு மிகவும் சிநேகபூர்வமாக அமைந்ததுடன், அவர்களின் முழு ஒத்தாசைகளையும் தற்போதுள்ள பாடசாலைக் கட்டமைப்பின் முகாமைத்துவ குழுவுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.
அதேபோல், பழைய மாணவர் அமைப்புடனும் இன்றைய தினம் சந்திப்பு இடம்பெற்றது. அதுவும் பக்க பலமாக அமைந்துள்ளது, ஒத்தாசை நல்குவதாக கூறியுள்ளனர்.

Q: பழைய மாணவர் அமைப்புக்கும் அப்போதைய பாடசாலை நிர்வாகக் குழுவுக்கும் உள்ளக முரண்பாடுகள் அதிமாக இருந்தன. இது பலரும் அறிந்த விடயம். அவ்வாறிருக்கையில் கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் குறித்த அமைப்பு கலைக்கப்பட்டு விட்டதாக அப்போதைய அதிபரினால் கருத்து வெளியிடப்பட்டிருந்தது. இருப்பினும், தற்போது எந்த அடிப்படையில் அதே உறுப்பினர்களை பழைய மாணவர் அமைப்பின் நிர்வாக குழுவாக அழைத்துள்ளீர்கள்?

A: நல்லதொரு வினா! பழைய மாணவர் அமைப்பு உருவான பின்னரான காலப் பகுதியில் உள்ளக ரீதியில் முன்னரிருந்த பாடசாலை நிர்வாகக் குழுக்களுடன் ஒவ்வாமை இருந்த போதிலும், அது அணையா நெருப்பாக வலுப்பெற்று தனிநபர் பிணக்குளாக பணிப்போராகியதே தவிர, அதை சமரசம் செய்யும் எண்ணம் அவர்கள் எவரிடமும் காணப்படவில்லை. இதை குறையாக சுட்டிக் காட்ட முடியாது. அது அன்றிருந்த இக்கட்டான சூழல் என்றுதான் கூற முடியும்.

இருந்தாலும், உங்கள் வினாவிற்கு பதிலளிக்க வேண்டிய கடமைப்பாட்டின் அடிப்படையில், தற்போது சந்தித்துள்ள கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிர்வாகக் குழுவானது முன்னரிருந்து அதிபரினால் கலைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும், அதன் பின்னர் சில காலம் கடமையாற்றி மற்றய அதிபரினால் அதே நிர்வாகம் செயற்பட்டிருக்கின்றது.

அதனடிப்படையிலேதான் தற்போது நான் அதே அமைப்பினரை சந்தித்தேன். அதில் உடன்பாடான கருத்துக்களுடன் அந்த உறுப்பினர்கள் அனைவரும் செயற்பட்டார்கள். அதே வேளை பெரும்பாலும் எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் புதிய நிர்வாக உறுப்பினர்களையும் தெரிவுசெய்வதாக பரஸ்பர தீர்மாணத்துக்கு வந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எனவே இனிவரும் காலங்களில் பாடசாலையும், பாடசாலை சூழலிலுள்ள அமைப்புகளும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் திட்டங்களைத்தான் தற்போது உருவாக்குகின்றோம். இன்ஷா அல்லாஹ் இன்னும் சில மாதங்களில் அவை சீராகிவிடும் என்கிற பூரண நம்பிக்கை எனக்கு உள்ளது.

சுருக்கமாக கூறின் எனது இந்த பொறுப்பு வாய்ந்த, புனிதமான பணியை முரண்பாட்டிலிருந்து ஆரம்பிக்க எனக்கு உசிதமில்லை. மாறாக உடன்பாட்டிலிருந்தே ஆரம்பிக்க தயாராகின்றேன்.

Q: பாடசாலையின் பௌதீகக் கட்டமைப்பு தற்போதுள்ள நிலைமையில் உங்களுக்கு ஒத்தாசையாக உள்ளனவா?

பதில்: உண்மையில், இது ஒரு பெரிய பாடசாலை ஆளணி அதிமாக உள்ள பாடசாலை ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் அனைவரையும் உள்ளடக்கி சுமார் 200 இற்கு மேற்பட்டவர்கள் உள்ளனர். அதே போல் 2700 மாணவர்கள் தற்போதைய காலகட்டத்தில் கல்வி கற்கின்றனர்.
இதற்காக குறைந்தது 90 வகுப்பறைகள் இருக்க வேண்டும். ஆனால், தற்போது 60 வகுப்பறைகளே உள்ளன. இதே நேரம் காலாவதியான கட்டங்களிலும் கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளன. இவை தவிர இன்னும் சில கற்றல் நடவடிக்கைகளுக்கான வளப்பற்றாக்குறை நிலவுகின்றது.

இவ்வாறான குறைகளை நிவர்த்திக்க அதிபரால் மட்டுமோ அல்லது பாடசாலை முகாமைத்துவ மற்றும் அபிவிருத்தி குழுக்களால் மட்டுமொ முடியாது. மாறாக இப் பாடசாலை மீது நேசம் கொண்டுள்ள அனைத்து பழைய மாணவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இங்கு கற்ற பலரும் பல்வேறு உயர் பதவிகளில் உள்ளனர். தாழிலதிபர்களாக உள்ளனர். அரசியல் பிரமுகர்களாக உள்ளனர். ஆகையால், நான் திறந்த அழைப்பு விடுக்கிறேன்;. பாடசாலை மீது பற்றுள்ள நீங்கள் ஒவ்வொருவரும் எந்த சந்தர்ப்பத்திலும் எம்மோடு தொடர்புகொள்ளலாம். ஆலோசனைகளை கூறலாம். உதவி ஒத்தாசைகளை வழங்கலாம்.

இது நமது பாடசாலை நாமே இதன் வளர்ச்சிக் கரங்களாக திகழ வேண்டும்.
அத்துடன், மாணவர்களின் வரவு தற்போதைய காலகட்டத்தில் மிகவும் குறைவாக காணப்படுகின்றது. 30 மாணவர்கள் இருக்கக்கூடிய வகுப்பறையில் நாளொன்றுக்கான மாணவர் வருகை 5 தொடக்கம் 10 என காணப்படுகின்றது. இவற்றை பாடசாலை நிர்வாகக் குழுக்கள் நிவர்த்தி செய்ய முடியாது. பெற்றோர்கள்தான் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தாங்களது பிள்ளைகளின் பாடசாலை வரவு மற்றும் கற்றல் விடயங்களில் நீங்கள் தலையீடு செய்து அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது குறித்து எம்மிடம் கேளுங்கள். எந்தவொரு மாணவர்களின் குறைபாடுகளை கற்றல் குறைபாடுகளை நிவர்த்திக்கும் பொறுப்பு ஆசிரியர்களுக்குள்ளது.

எனவே, மாணவர்களின் செயற்பாடுகள் குறித்து பெற்றோர் எமக்கு முழு ஒத்துழைப்பை வழங்குங்கள் என கேட்டுக்கொள்கின்றேன்.

Q: பொதுவாக ஒரு நிறுவனத்தில் ஒருவர் தலைமைப் பொறுப்பை கையேற்கும் போது ஒரு குறிக்கோள் மற்றும் இலக்கு இருக்கும். அவ்வாறு உங்களுக்குள்ள இலக்கு?

A: ஆம், சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயமானது ‘பேசும் பாடசாலை’ ஆக மிளிர வேண்டும். என்பதுதான் எனது இலக்கு, அதாவது முன்னொரு காலத்தில் எத்தனையோ ஊர்கள் இருந்தெல்லாம் சம்மாந்துறை தேசிய பாடசாலைக்கு விடுதியில் தங்கி மாணவர்கள் கற்றலுக்காக வந்தார்கள். அப்படி நோக்கும் போது அந்த நிலைமை இன்று தலைகீழாக மாறியுள்ளது.

மாற்றம் ஒன்றே மாறாதது எனும் கருத்துருவில் மீண்டும் ஒரு நல்ல யுகத்தை இந்தப் பாடசாலை விரைவில் பெற்று ‘பேசும் பாடசாலை’ எனும் மகுடத்தைச் சுமக்க வேண்டும். இதற்காக உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புகளையும், ஆலோசனைகளையும் எதிர்பார்த்திருக்கின்றேன்.

வளத்திலும், சுற்றுச் சூழலிலும் தன்னிறைவு கொண்டுள்ள இப் பாடசாலை நிச்சயம் ஒருநாள் ‘பேசும் பாடசாலையாக மிளிரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. இன்ஷா அல்லாஹ்!

அதே நேரம், பாடசாலை அபிவிருத்தி விடயங்களில் உங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும், சிந்தனைகளையும் வரவேற்கின்றேன்.
***

நேர்காணல்:
✍️ கியாஸ் ஏ. புஹாரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *