விண்ணப்பக்கோரலை இரத்துச் செய்க! தவறின் பெரும் போராட்டம் வெடிக்கும்!! – கிழக்கு முன்னாள் முதல்வர் நஸீர் போர்க்கொடி

“கிழக்கு மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான இலங்கை ஆசிரியர் சேவை 31(அ) தரத்திற்கு மாவட்ட ரீதியாக பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சைக்கு தற்போது கோரப்பட்டிருக்கும் விண்ணப்பங்கள் உடன் நிறுத்தப்பட்டு அது மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும். தவறும் பட்சத்தில் பட்டதாரிகள் பொதுமக்கள் வீதியில் இறங்குவர். இதற்கான பாரிய பேராட்டம் வெடிக்கும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“இந்த நியமனங்கள் வழங்குவது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பில் கிழக்கு மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்ட பட்டதாரிகளுக்கு மேலதிகமாக பதுளை, பொலநறுவை, அனுராதபுரம், கண்டி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டத்தில் வாழும் பட்டாதாரிகளுக்கும் சிங்கள பாடசாலைகளுக்கான நியமனம் என்ற ரீதியில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டிருக்கின்றது. இது குறித்து தெளிவுபட ஆராயவேண்டிய அவசியம் எற்பட்டுள்ளது.

நான் கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த கால கட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த வேலையில்லாத பட்டதாரிகளை ஆசிரிய சேவைக்குள் உள்வாங்குவதற்கான தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வந்தேன். கிழக்கை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்ட கிட்டத்தட்ட 5 ஆயிரத்து 400 இற்கும் அதிகமான பட்டதாரிகள் இந்த வேலைவாய்ப்பில் தமக்கான சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

அந்தவகையில் கடினமான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் மூலமாக இந்த 5 ஆயிரத்து 400 பட்டதாரிகளுக்கு அவற்றைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடப்பட்டது. எனினும், அவரால் தடங்கல் ஏற்பட்ட நிலையில் நான் இதனை எனது தனிப்பட்ட முயற்சியின் மூலமாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு முன்வைத்தேன்

பிரதமரின் ஆலோசனைக்கு அமைய அவரது பொருளாதார ஆலோசகர் பாஸ்கரலிங்கத்துடன் இதற்கான பேச்சு நடைபெற்று 5 ஆயிரத்து 400 பேருக்கும் நியமனம் வழங்குவது எனவும், முதற்கட்டமாக ஆயிரத்து 700 பேருக்கு வழங்க இடம் ஒதுக்கப்பட்டு இதற்கான நிதி ஒதுக்கீடும் திறைசேரியால் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாகாண சபை ஊடாக நாம் இந்த நியமனங்களை வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சைகளை நடத்தினோம். இதன்போதும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோரை உள்வாங்க வேண்டும் என்ற பிரச்சினை எழுந்தது. எனினும், நாம் அவற்றை ஏற்றுக்கொள்ளவில்லை.

இக்கால வேளையில் மாகாண சபை கலைக்கப்பட்டமை காரணமாக இந்த விடயம் காலதாமதத்துக்கு உள்ளானது. பின்னர் இந்த நியமனங்களில் ஆயிரத்து 300 நியமனங்களை 2017 நவம்பரில் ஆளுநர் வழங்கியிருந்தார்.

இந்நிலையில், தற்போது எம்மால் பெறப்பட்ட வெற்றிடமாகவுள்ள ஏனைய இடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கே விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

நமது மாகாணப் பட்டதாரிகளின் வேலைவாய்ப்பைப் பிரதான நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த வாய்ப்பை வேற எந்த விதத்திலும் – நியாயமற்ற முறையிலும் கடந்த காலங்களைப் போன்று வழங்க எடுக்கப்படும் திரைமறைவு முயற்சிகளை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த காலங்களில் ஆளுநர்களின் அதிகாரங்களின் ஊடாக மாகாணத்தைத் தவிர்ந்த பட்டாதாரிகளுக்கு இவ்வாறான நியமனங்கள் வழங்கப்பட்டு வந்தன. இதனூடக நியமனங்களைப் பெற்றுக்கொண்டவர்கள் சிறிய காலத்தின் பின்னர் இடமாற்றங்களைப் பெற்று மாவட்டங்களையும் மாகாணத்தையும் விட்டு தத்தமது மாவட்டங்களுக்குச் சென்றதன் காரணமாக வெற்றிடங்கள் வெற்றிடங்களாக மட்டும் உள்ளன.

எனது பதவிக்காலத்தில் இவை குறித்து நான் பல்வேறு ஆதாரங்களைப் பெற்றுக்கொண்டமை காரணமாக பல காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொண்டேன். குறிப்பாக இவ்வாறான வெற்றிடங்கள் முதலில் மாகாணத்தில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளித்து நிரப்பப்பட வேண்டும். பின்னர் உரியவர்கள் இல்லை என்ற நிலையில் ஏற்படும் வெற்றிடங்களுக்கு மட்டுமே ஏனைய மாகாணத்தைச் சேர்ந்தவர்களுக்கு வாய்பளிக்க வேண்டும் என்பதே எனது பணிப்புரையாக இருந்தது.

கடந்த கால நடவடிக்கைகளைக் கருத்தில்கொண்டு இந்த விடயத்தில் தீர்க்கமாக ஆராய்ந்து நியாயமான நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இது குறித்து மாகாண மட்டத்தில் இயங்கும் பல்வேறு பட்டதாரிகள் அமைப்புகள் எனது கவனத்துக்கு முன்வைத்திருக்கின்றன.

எனவே, முதலில் இந்த விண்ணப்பக்கோரலை உடன் இரத்துச் செய்ய வேண்டும். தற்போது பதவி ஏற்றுள்ள பிரதமரது அமைச்சரவை நியமனங்கள் நடைபெற்ற பின்னர் நான் அவரை நேரில் சந்தித்து இவ்விடயம் குறித்து துரித நடவடிக்கை எடுப்பேன்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *