அரவிந்தகுமாருக்கு இராஜாங்க அமைச்சு! – பதுளை மக்கள் கோரிக்கை

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அ. அரவிந்தகுமாருக்கு பிரதி அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு வழங்கப்படல் வேண்டுமென்று  பதுளை மாவட்ட தமிழ் சமூக மற்றும் சமய அமைப்புகளுடன் தமிழ் மக்கள் இணைந்து வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் முக்கியஸ்தர்களான மனோகணேசன், பழனி திகாம்பரம், வேலுசாமி இராதாகிருஸ்ணன் மற்றும் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ ஆகியோருக்கும் தமிழ் அமைப்புக்கள் அனுப்பியுள்ள நீண்ட மகஜர்களில் குறிப்பிட்டுள்ளனர்.

தொடர்ந்து அக்கடிதங்களில், பதுளை மாவட்டத்தில் கணிசமான தமிழ் மக்கள் வாழந்து வரும் நிலையில் அம் மக்களின் பெரும்பான்மை பலமும் பெரும் ஆதரவும் பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிற்கே இருந்து வருகின்றது. கடந்த பொதுத் தேர்தலிலும் தமிழ் மக்களின் ஆகக் கூடிய வாக்குகளைப் பெற்றவரும் அவரேயாவார்.

அதைத் தொடர்ந்து அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரொருவரினாலும் மேற்கொள்ள முடியாத பாரிய சமூக அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும்,சமூக சேம நலன் குறித்த செயல்பாடுகளையும், கல்விசார் மேம்பாடுகளையும், சிறப்புடனும் வெற்றியுடனும் பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் முன்னெடுத்து வருகின்றார். இது யாவரும் அறிந்த உண்மையாகும்.

பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நிலையிலும் அவர் பாரிய வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் போது அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைக்கப்பெற்றால் அவரது சேவைகள் பன்மடங்குகளாக அதிகரிக்குமென்பது தின்னம்.

இலங்கை அரசியலில் கடந்த கால நெருக்கடியிருந்த போதிலும், கட்சி தாவாமல், கொள்கை மாறாமல், தனித்துவம் பேணப்பட்ட வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி யுடன் மிகவும் உறுதியாக இருந்து வந்தவர்களில் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் முக்கியமானவர்.

குறிப்பாக இலங்கை அரசியலில் நெருக்கடி ஏற்பட்டுள்ள வேளையிலும், மாற்றுத்தரப்பினர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு, கோடிக்கணக்கான ரூபா விலை பேசப்பட்ட போதிலும்இ சிறிதும் விலை போகாமல்இ கொள்கையுடன் உறுதியாக இருந்து வந்தவர் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாராவார். இவ்விடயம் அனைவருக்கும் தெரிந்த விடயமாகும். இத்தகைய இக்கட்டான நிலையிலும் எமது பாராளுமன்ற உறுப்பினர் துணை போகவில்லை. எத்தகைய காட்டிக் கொடுக்கும் செயல்பாடுகளையும் அவர் மேற்கொள்ளவில்லை.

ஆகவே பதுளை மாவட்ட தமிழ் மக்களை கௌரவிக்கும் வகையிலும் அம் மக்களுக்கான உரிய சேவைகளை பணிகளை சிறப்புடன் மேற்கொள்ளும் வகையிலும் பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமாரிற்கு பிரதி அமைச்சு அல்லது இராஜாங்க அமைச்சு வழங்கப்படல் வேண்டியது காலத்தின் அவசியத் தேவையாகும்.

இது விடயத்தில் எமது கோரிக்கை செவிமடுக்காத பட்சத்தில்  பாரிய ஆர்ப்பாட்டப் போராட்டங்களையும் கண்டனப் பேரணிகளையும் பதுளை மாவட்டத்தில் பரவலாக மேற்கொள்ளவும் நாம் ஆயத்தமாகவுள்ளோம். பதுளை மாவட்ட தமிழ் மக்கள்மாத்திரமன்றி அனைத்து சிறுபான்மை மக்களினதும் பெரும்பான்மை சிங்கள மக்களினதும் பேரபிமானங்களையும் பெற்ற ஒரு பெருந் தலைவராக அச் சமூகத்தினரால் மதிக்கப்படுவதையும் இங்கு நினைவு கூற வேண்டியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *