ரணில் – பசில் இடையே மோதல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்பு குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ அதிருப்தி அடைந்துள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

பொதுஜன பெரமுன வழங்கியுள்ள பெயர் பட்டியலின் பிரகாரம் அமைச்சுப் பதவிகளை ஜனாதிபதி வழங்கவில்லை என பசில் ராஜபக்ஷ, ஜனாதிபதியிடம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு அதிக அமைச்சுகளை கொடுத்துள்ளமைக்கான கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்தைக் கேட்காமல் ஜனாதிபதி அமைச்சரவை மாற்றத்தை மேற்கொண்டுள்ளமைக்கு கடந்த சில நாட்களாக தொடர் ஊடக சந்திப்புகளை நடத்தும் பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதியை எதிர்க்கும் வகையில் பல்வேறு கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த செயல்பாட்டுக்கு ஜனாதிபதி, பசில் ராஜபக்ஷவிடம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.

இதேவேளை, பொதுஜன பெரமுனவுடன் கலந்துரையாடல்கள் எதனையும் நடத்தாது ஜனாதிபதி அமைச்சரவையில் மறுசீரமைப்பை மேற்கொண்டுள்ளமைக்கு அக்கட்சியின் பொது செயலாளர் சாகர காரியவசம் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

அதேபோன்று பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவும் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை மறுசீரமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டிருந்தார்.

ஜனாதிபதிக்கு எதிர்ப்பை வெளியிட்டுவரும் பொதுஜன பெரமுனவினருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார, ஜனாதிபதி எவரது பின்னாலும் சென்று ஜனாதிபதி பதவியை பெறவில்லை என்றும், மாறாக அவரை அழைத்தே ஜனாதிபதி பதவியை பொதுஜன பெரமுன வழங்கியது என்றும் கூறியுள்ளார்.

ஐ.தே.க. மற்றும் பொதுஜன பெரமுனவினர் மாறி மாறி கருத்து மோதல்களில் ஈடுபட்டுள்ளதால் அரசாங்கத்துக்குள் சில முறுகல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்வரும் பட்ஜெட் வாக்குகெடுப்பில் இது தாக்கத்தை செலுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *