மனித கடத்தல் குழுவிடம் சிக்கித் தவித்த இலங்கையர்கள்; முக்கிய சந்தேகநபர் கைது

இலங்கைப் பிரஜைகள் தொடர்பான மனித கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்த 39 வயதுடைய நபரை இரண்டு வருடங்களுக்கும் மேலான தேடுதலுக்கு பின்னர் தமிழகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (NIA) சந்தேகநபரை கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய நபராக கூறப்படும் “ஹாஜா நஜர்பீடன்” என்ற முகமது இம்ரான் கான் ஜூன் 2021 முதல் தலைமறைவாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், கடந்த பல மாதங்களாக இம்ரான் கானின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டதாகவும், ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் அவர் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,

தமிழ்நாட்டின் இராமநாதபுரத்தில் வசிக்கும் இம்ரான் கான், அப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத நடவடிக்கைகளில் நீண்டகால வரலாற்றைக் கொண்ட ஒரு பிரபலமான கடத்தல்காரர் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

“அவர் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக தேடப்பட்டு வந்ததாக” அவர் கூறியுள்ளார்.

நம்பகமான உளவுத்துறையின் அடிப்படையில், உரிய ஆவணங்கள் இல்லாமல் கர்நாடகாவில் உள்ள மங்களூரில் ஒரு குழு வந்து தங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதன்படி, 2021ஆம் ஆண்டு ஜூன் ஆறாம் திகதி மங்களூரில் வைத்து 38 இலங்கை பிரஜைகள் கைது செய்யப்பட்டனர்.

“இலங்கையில் இருந்து தமிழ்நாடு மற்றும் பெங்களூரு வழியாக மங்களூருக்கு இலங்கை பிரஜைகள் அழைத்துவரப்பட்டமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் (LTTE) தொடர்புடைய இலங்கை நாட்டவரான ஈசனுடன் இணைந்து இம்ரான் கான், 38 இலங்கை பிரஜைகளை பல்வேறு இடங்களுக்கு சட்டவிரோதமாக கொண்டு செல்ல திட்டம் தீட்டியமை விசாரணையில் தெரியவந்துள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

“கனடாவிற்கு குடிபெயர்வதற்கான முறையான ஆவணங்களைப் பெறுவது மற்றும் வேலை வாய்ப்புகளைப் பெறுவது உள்ளிட்ட தவறான வாக்குறுதிகள் மூலம் இந்த நபர்களை அவர்கள் அழைத்துவந்துள்ளனர்.

இம்ரான் கான், சக குற்றவாளிகளுடன் சேர்ந்து, இலங்கைப் பிரஜைகளை பெங்களூரு மற்றும் மங்களூருவில் பல்வேறு இடங்களுக்கு கடத்தினார்,” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.

சர்வதேச மனித கடத்தல் சம்பந்தப்பட்ட பரந்த சதித்திட்டத்தில் இம்ரான் கான் ஒரு முக்கிய நபர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

“இலங்கைப் பிரஜைகளை அவர்களது சொந்த நாட்டிலிருந்து இந்தியாவிற்கும், பின்னர் மற்ற நாடுகளுக்கு அழைத்துச் செல்வதற்கு அவர் முக்கியப் பொறுப்பாகச் செயல்பட்டார்” என்று இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமையின் செய்தித் தொடர்பாளர் மேலும் கூறியுள்ளார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *