அரசாங்கத்துக்கான ஆதரவு குறைவடையும்; அச்சத்தில் பல எம்.பிகள்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றாடல் துறை அமைச்சருமான நசீர் அஹமடை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் சட்டரீதியானதென உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பானது எதிர்வரும் வரவு-செலவுத் திட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நசீர் அஹமடின் எம்.பி பதவி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவளித்ததன் ஊடாக நசீர் அஹமட் அரசாங்கத்தில் இணைந்துகொண்டார். அதன் பின்னர் அவருக்கு அமைச்சுப் பொறுப்பும் வழங்கப்பட்டது.

இவரது பாராளுமன்ற பதவி பறிபோனால், வரவு-செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கான ஆதரவு குறைவடையும்.

ஏற்கனவே, சில கட்சிகளில் இருந்து நீக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள மனுக்களும் விசாரிக்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கும் இந்த நிலைமையேற்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் அடுத்த ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எம்.நிசாம் காரியப்பர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,

2022 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்கக் கட்சி எடுத்த தீர்மானத்தை மீறி அரசாங்கத்திற்கு ஆதரவளித்தமையின் காரணமாகவே நசீர் அஹமட் பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான H. M. M. ஹரீஸ், பைசல் காசிம் ஆகிய எம்.பிகளும் நசீர் அஹமட் உடன் இணைந்து 2022ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்ததாகவும் தெரிவித்தார்.

அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க நாங்கள் அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்கள் இருவரும் மன்னிப்புக் கேட்டு, கட்சி எடுக்கும் முடிவுகளுக்கு மாறாக செயல்பட மாட்டோம் என உறுதியளித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறினார்.

2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நிதியமைச்சர் என்ற வகையில் எதிர்வரும் நவம்பர் 13 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதிவரை நடைபெறவுள்ளதுடன், இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு நவம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *