முன்னாள் போராளி அஜந்தன் இன்று பிணையில் விடுவிப்பு!

மட்டக்களப்பு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்டது தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி அஜந்தன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் காவல் கடமையில் இருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.

இது தொடர்பில் முன்னாள் போராளி அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில் ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்ததுடன், அஜந்தன் தொடர்ந்து பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வந்தார்.

இந்தநிலையில், உயிர்த்த ஞாயிறன்று ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் ஹாசீமின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸாரை தாங்களே கொலைசெய்ததாக வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தமைக்கு அமைவாக இன்று காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வி.தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அஜந்தனைப் பிணையில் விடுவித்த பதில் நீதிவான் எதிர்வரும் 13ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு பணித்தார்.

அதன்பின்னர் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர், வவுணதீவு கரையாக்கன்தீவில் அமைந்துள்ள அஜந்தனின் இல்லத்தில் அவரை மனைவி செல்வராணியிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *