இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது இலங்கை மகளிர் அணி

ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியான மகளிருக்கான கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் பாகிஸ்தானை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை அணி இறுதி போட்டிக்கு தகுதிபெற்றது.

இன்றைய தினம் நடைபெற்ற குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர்கள் நிறைவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பில் ஷவால் சுல்பிகர் (Shawal Zulfiqar) 16 ஓட்டங்களையும் முனீபா அலி (Muneeba Ali) 13 ஓட்டங்களையும் ஒமைமா சோஹைல் (Omaima Sohail) 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் உதேசிகா பிரபோதனி (Udeshika Prabodhani) மூன்று விக்கெட்டுகளையும் கவிஷா தில்ஹாரி (Kavisha Dilhari) இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

அதற்கமைய 76 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 16.3 ஓவர்கள் நிறைவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 77 ஓட்டங்களை பெற்றது.

இலங்கை அணி சார்பில் ஹர்ஷித சமரவிக்ரம (Harshitha Samarawickrama) 23 ஓட்டங்களையும் நிலாக்ஷி டி சில்வா (Nilakshi de Silva) 18 ஓட்டங்களையும் அனுஷ்கா சஞ்சீவனி (Anushka Sanjeewani) 15 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் பாகிஸ்தான் அணி சார்பில் சாடியா இக்பால் (Sadia Iqbal), டயானா பெய்க் (Diana Baig) மற்றும் உம்மே ஹனி (Umme Hani) ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

இந்த வெற்றியின் மூலம் இலங்கை மகளிர் அணி நாளைய தினம் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *