மொட்டு கட்சிக்குள் குழப்பம்!

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் உறுதியான தீர்மானங்களை எடுக்க முடியாதளவுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உறுப்பினர்களுக்கிடையே குழப்பநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மொட்டுக் கட்சியின் ஒரு பிரிவினர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருவதுடன், இன்னுமொரு குழுவினர் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று கோருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேவேளை, மற்றுமொரு குழு ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்ந்து தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்வை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் பசில் ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராவது தொடர்பில் இதுவரையில் அவர் தரப்பில் இணக்கம் வெளியிடப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

அவர் வேட்பாளராவதற்கு முன்னர் அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்ய வேண்டும் என்பதனால் அவர் இதற்கு இதுவரையில் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும் தெரியவருகின்றது.

இந்நிலையில், நாமல் ராஜபக்சவை வேட்பாளராகக் களமிறக்க வேண்டும் என்ற நிலைப் பாட்டில் இளம் மற்றும் பின் வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கட்சித் தலைமைக்கு அறிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை கட்சியின் செயலாளரும் இது தொடர்பில் ஆராய்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனபோதும் கட்சியின் அமைச்சர்கள் உள்ளிட்ட ஆளும் கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் ரணில் விக்ரமங்கவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டுள்ளனர்.

இதனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்க முடியாததுள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *