பெற்றோருக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இந்த நாட்களில் அதிக வெப்பநிலை காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க இயற்கையான திரவ உணவுகளை வழங்குமாறும், வழமையை விட அதிகமாக தண்ணீர் வழங்க வேண்டும் என்றும் கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் அதிக வெப்பம் நிலவுவதால் சிறுவர்கள் தொடர்பில் கடைப்பிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேற்று (27) ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில், சில குழந்தைகள் காரணமின்றி அழலாம், சில குழந்தைகளுக்கு தலைவலி, வாந்தி, தூக்கம் வரலாம், சில குழந்தைகளுக்கு தூக்கமின்மை, பசியின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். மேலும் காய்ச்சல் இல்லாவிட்டாலும், அதிக உடல் வெப்பநிலை மற்றும் வியர்வை காரணமாக இந்த அறிகுறிகள் ஏற்படலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், அதிக உஷ்ணத்தினால் தோல் நோய்களும் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்த வைத்தியர் தீபால் பெரேரா, இதனைக் கட்டுப்படுத்த ஒவ்வொரு குழந்தையும் காலையிலும் மாலையிலும் 20 நிமிடங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை குளிக்க வேண்டும் என்றார்.

இக்காலத்தில் தண்ணீர் பற்றாக்குறை உள்ள பிரதேசங்கள் காணப்படுவதாகவும் அவ்வாறான பிரதேசங்களில் கூட குழந்தைகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்க வேண்டும் எனவும் அசுத்த நீரைக் குடிப்பதன் மூலம் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்படுவதாகவும் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *