லசித் மலிங்கவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படம் தயாராகிறது லைகா!

லைகா நிறுவனம் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்கவின் வாழ்க்கை வரலாற்றை பிரதிபலிக்கும் திரைப்படத்தை எடுக்க தீர்மானிதுள்ளது.

லைகா தயாரிப்பு நிறுவனம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போது, தான் தொழிலுக்காகவே விளையாட ஆரம்பித்ததாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க குறிப்பிட்டார்.

”மிகப் பிரபலமான நடிகர்கள் இங்கு இருக்கின்றார்கள். இந்த இடத்திற்கு கிரிக்கெட் வீரர் என்ற வகையில் வரக் கிடைத்த வாய்ப்பால் மகிழ்ச்சி அடைகின்றேன்.

ஏன் கிரிக்கெட் விளையாடுகின்றீர்கள் என அப்பா என்னிடம் சிறு வயதில் கேட்டார். நான் ஆசைக்காக விளையாடுகின்றேன் என கூறினேன். சிறிது காலம் சென்றதன் பின்னர் இன்னும் விளையாடுகின்றீர்களா என்று அப்பா கேட்டார்.

லைகா நிறுவனத்தின் அங்குரார்பண நிகழ்வு கொழும்பு தாஜ்சமுத்திர நட்சத்திர ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமான விழாவாக நடைபெற்றது

ஏதோ ஒரு திறமை இருக்கின்றது. அதனால் விளையாடுகின்றேன் என நினைத்துக்கொண்டேன். தேசிய அணிக்கு வருகை தந்ததன் பின்னர் அப்பா என்னிடம் ‘ஏன் தற்போது விளையாடுகின்றீர்கள்?’ என்று கேட்டார்.

பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் அனைவரும் நாட்டிற்காக விளையாடும் சந்தர்ப்பத்தில் நான் தொழிலுக்காக விளையாட்டைத் தேர்வு செய்தேன். நான் தொழிலுக்காகவே கிரிக்கெட் விளையாடினேன்.

எனது தொழிலை சரிவரச் செய்தமையாலேயே, இந்த இடத்திற்கு வர முடிந்தது என நான் நினைக்கின்றேன். நான் இந்த இடத்திற்கு வருகை தர தொழிலை எவ்வாறு செய்தேன் என்பதை இந்த படத்தின் ஊடாக வெளிக்கொணர முடியும் என நான் நினைக்கின்றேன்,” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லசித் மாலிங்க தெரிவித்தார்.

தான் இந்த இடத்திற்கு வர எவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் இந்தத் திரைப்படம் அமையும் எனவும் அவர் கூறினார்.

”நான் எந்த இடத்தில் வீழ்ந்தேன். என்னை எந்த இடத்தில் விழ வைக்க முயன்றார்கள். அதிலிருந்து நான் எவ்வாறு மீண்டெழுந்தேன் என அனைத்தையும் இந்தத் திரைப்படம் வெளிக்கொணரும்,” என லசித் மாலிங்க குறிப்பிட்டார்.

இலங்கையின் காலி மாவட்டத்தின் ரத்கம பகுதியில் 1983ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி லசித் மாலிங்க பிறந்தார்.

சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர், கிரிக்கெட் மீதான ஆர்வம் காரணமாக தனது ஊரிலுள்ள வீதிகளில் தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான சம்பிக்க ராமநாயக்கவினால், லசித் மாலிங்க அடையாளம் காணப்பட்டு, அவர் இலங்கை கிரிக்கெட்டில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்.

வலது கை வேகப் பந்து வீச்சாளரான லசித் மாலிங்க, பந்து வீச்சில் தனது திறமையை உலகறியச் செய்தார்.

இலங்கை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ள லசித் மாலிங்க, தற்போது கழகங்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *