10 நிமிட சார்ஜ் 400 கிலோமீட்டர் பயணம்; இதுவே உலகின் முதல் அதிவேக பேட்டரி

எலெக்ட்ரிக் ரேஞ்ச் வாகனங்களின் முக்கிய பிரச்சனை பேட்டரி சார்ஜ் செய்யும் நேரம் ஆகும். கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இரண்டையும் முழுமையாக சார்ஜ் செய்ய சில மணிநேரம் எடுத்துக்கொள்ளும். தற்போது இதற்கு தீர்வு கண்டுள்ளது சீன நிறுவனம் ஒன்று.

உலகின் மிகப்பெரிய பேட்டரி உற்பத்தியாளரான கன்டெம்பரரி ஆம்பெரெக்ஸ் டெக்னாலஜி லிமிடெட் (CATL) அதிவேக சார்ஜிங் பேட்டரியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பேட்டரி வெறும் 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 400 கிலோமீட்டர் தூரம் பயணிக்கும். லித்தியம் அயன் பேட்டரிகள் பிரிவில் இது ஒரு புதிய வரலாற்றின் தொடக்கமாக இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

மணிக்கணக்கில் சார்ஜ் செய்யத் தேவையில்லாத கார் உரிமையாளர்களுக்கு இது மிகவும் வசதியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பேட்டரி முழுமையாக சார்ஜ் செய்தால் 700 கிலோமீட்டர் வரை செல்லும் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இப்போது பார்ப்போம்..
பேட்டரி தயாரிப்பு

புதிய சூப்பர் கண்டக்டிங் எலக்ட்ரோலைட் ஃபார்முலாவுடன் இந்த வேகமான சார்ஜிங் அம்சத்தையும் அதிக பேட்டரி திறனையும் உருவாக்கியுள்ளதாக CATL தலைமை விஞ்ஞானி டாக்டர் வு காய் தெரிவித்தார். இந்த சமீபத்திய EV பேட்டரி தொழில்நுட்பம் எதிர்காலத்தை வேகமாகவும் நிலையானதாகவும் இயக்கும் என்று கூறப்படுகிறது. நிதிப் பலன்களையும் தருவதாகக் கூறப்படுகிறது. இந்த மேம்பட்ட அம்சம் பணக்காரர்களுக்கு மட்டுமின்றி அனைத்து பிரிவினருக்கும் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொழில்நுட்பத்தின் பலன்களை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதே தங்கள் எண்ணம் என்றும், அதனால்தான் முழுமையாக பொருளாதார ரீதியில் கொண்டு வருகிறோம் என்றும் அறிவித்தனர்.

இந்த பேட்டரி எந்த பிராண்ட் காரில் வருகிறது?
CATL அதன் போட்டியாளர்களை விட 2022-ல் அதிக லித்தியம் அயன் பேட்டரிகளை உற்பத்தி செய்தது. இப்போது அடுத்த ஆண்டும் பெரிய அளவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இருப்பினும், எந்த நிறுவனம் இந்த வேகமான சார்ஜிங் பேட்டரிகளை முதலில் வழங்குகிறது என்பதை நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் BMW, Daimler, AG, Honda, Tesla, Toyota, Volkswagen, Volvo போன்ற முன்னணி பிராண்டுகள் CATL-ன் வாடிக்கையாளர்களாக உள்ளன.

மின்சார கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது
கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு, உலகளவில் 10 மில்லியன் கார்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. இனி வரும் காலங்களில் இவற்றுக்கு அதிக கிராக்கி ஏற்படும் நிலை உள்ளது. இதுபோன்ற வேகமாக சார்ஜ் செய்யும் பேட்டரிகள் மற்றும் சார்ஜிங் ஸ்டேஷன்கள் கிடைத்தால், இவை அதிகளவில் விற்பனையாகும் வாய்ப்பு உள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *