பாராளுமன்றத்திற்குள் போராட்டம்!

இன்றைய -22- பாராளுமன்ற அமர்வின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று பாராளுமன்றில் எதிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மாத்தளை, எல்கடுவ பிரதேசத்தில் இருந்து மூன்று தோட்ட குடும்பங்கள் வௌியேற்றப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாதைகளை ஏந்தியவாறு இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாத்தளை-எல்கடுவ ரத்வத்தை உள்ள அரச தோட்டமொன்றைச் சேர்ந்த மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 14 பேரை தோட்ட பிரதி முகாமையாளர் விரட்டி விரட்டி பீதியை கிளப்பி அவர்களின் வீடுகளை இடித்த சம்பவம் காரணமாக பாராளுமன்றத்தில் கடும் அமளி செவ்வாய்க்கிழமை (22) ஏற்பட்டது.

ஏறக்குறைய ஒரு மணி நேரம் இந்தப் போராட்டம் நடைபெற்றதால், சபையின் அலுவல்களைக் கட்டுப்படுத்த சபாநாயகர் கடும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

பாராளுமன்ற உறுப்பினர்களான உதயகுமார்,ரோகினி குமாரி விஜேரத்ன, வடிவேல் சுரேஸ், எஸ்.ராதாகிருஷ்ணன், மனோ கணேசன், எஸ்.வேலு குமார், கின்ஸ் நெல்சன், சமிந்த விஜேசிறி, காவிந்த ஜயவர்தன உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரான வடிவேல் சுரேஷ் கறுப்பு உடை அணிந்து பாராளுமன்றத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

மேலும் தோட்ட அதிகாரியின் அடாவடித்தனத்தை வெளிக்காட்டும் காணொளி ஆதாரத்தையும் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்

தொடர்ந்து பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில்

வீடொன்றை நொறுக்கி வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றும் சட்டம் இந்நாட்டில் இருக்கின்றதா?

சமைத்த உணவுகளை வீசி வீட்டில் உள்ள பொருட்களுக்கு சேதத்தை ஏற்படுத்தி மிகவும் கீழ்த்தரமான முறையில் நடந்து கொண்ட தோட்ட அதிகாரி இன்னும் கைது செய்யப்படவில்லை உடனடியாக அவர் கைது செய்யப்பட்டு உச்சகட்ட தண்டனை வழங்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

பெருந்தோட்ட காணிகள் மட்டுமே தோட்ட நிர்வாகக்களுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது தோட்டத் தொழிலாளர்களை அல்ல ரத்வத்தை கீழ்பிரிவு தோட்ட அதிகாரிக்கு வழங்கப்படக் கூடிய தண்டனை ஏனையவருக்கும் ஒரு பாடமாக அமைய வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *