கல்முனை வடக்கு செயலகத்தைத் தரமுயர்த்த அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிப்பேன்! – கூட்டமைப்பிடம் ரணில் வாக்குறுதி

“கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்கவுள்ளேன். அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தைச் சமர்ப்பிக்கவுள்ளேன்.”

– இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்தார்.

கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தை முழு அதிகாரமும் கொண்ட பிரதேச செயலகமாக தரமுயர்த்துமாறு கோரி குறித்த உப பிரதேச செயலகத்துக்கு முன்னால் கடந்த திங்கட்கிழமை முதல் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மதகுருமார், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் இந்தப் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இந்தநிலையில், இந்த விவகாரம் தொடர்பில் பிரதமருடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்று நேரில் பேச்சு நடத்தியது.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெற்ற இந்தப் பேச்சில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஞா.சிறிநேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போதே மேற்படி வாக்குறுதியைப் பிரதமர் வழங்கியுள்ளார்.

“எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அல்லது அதற்கடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளேன். எனவே, உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்துமாறு பொது அமைப்பினரிடம் வேண்டிக்கொள்கின்றேன்” என்று பிரதமர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இந்த விடயம் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப் பிரதமர் ரணில் தயாரானபோது, அப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம். எம்.ஹரீஸின் எதிர்ப்புக் காரணமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்திருந்தது. இம்முறை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த எவரும் அமைச்சரவையில் இல்லாத நிலையிலேயே அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கும் தகவலைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *