அதீத கையடக்க தொலைபேசி பயன்பாடு மணமுறிவுக்கு வழிவகுக்கும் என ஆராய்ச்சியில் தகவல்!

அதீத கையடக்க தொலைபேசி பயன்பாடு மணமுறிவுக்கு வழிவகுக்கும் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கையடக்க தொலைபேசிகளின் வருகை மனித சமூகத்தின் வாழ்வியலை பல்வேறு வகையில் மாற்றி இருக்கின்றன.

கையடக்க தொலைபேசிகளால் உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி இருக்கும் நிலையில் அதனால் ஏற்படும் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், பக்கவிளைவுகளும் பாதிப்புகளும் இல்லாமல் இல்லை.

கழிப்பறை முதற்கொண்டு நம் கால் தடம் படும் இடமெல்லாம் உடன் எடுத்து செல்கிறோம். ஏதோ செயற்கை உடலுறுப்பைப் போல. செல்போனால் பல மாணவ, மாணவியர் மற்றும் இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையையே தொலைத்துவிட்டனர்.

அப்படிப்பட்ட செல்போன் குறித்த மேலும் ஒரு ஆய்வு முடிவு வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிக நேரம் செல்போனில் மூழ்கி இருப்பது உறவுகளுக்குள் சிக்கலை ஏற்படுத்துவதோடு, உறவு முறிவுக்கும் வழிவகுக்கும் என்று துருக்கி நாட்டை சேர்ந்த ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

வாழ்க்கை துணைக்காக நீங்கள் செலவிடும் நேரத்தையும், உங்கள் செல்போனில் நீங்கள் செலவிடும் நேரத்தையும் ஒப்பிட்டு பாருங்கள். மற்ற நபர்களுடன் பழகுவதை கண்டு பொறாமை கொள்வதை காட்டிலும் தங்கள் இணை மொபைல் போனுடன் நேரம் செலவிடுவதை கண்டு தான் பலர் கோபம் கொள்கிறார்கள் என்று அந்த ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

அன்பிற்குரியவர்களுடன் இருக்கும் நேரத்தில் அவர்களில் ஒருவர் செல்போனுக்கு முக்கியத்துவம் கொடுப்பது, புறக்கணிக்கப்படுகிறோம் என்ற உணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்தலாம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பலரும் குடும்ப பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்தலாம் என்பதை தம் இணையுடன் விவாதிக்காமல் பணம் ஈட்டுவது எப்படி என்று யூடியுபில் தேடுகிறார்கள்.

குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதை தவிர்த்துவிட்டு குழந்தையை பராமரிப்பது குறித்து இணையத்தில் கற்பவர்களையும் பார்க்க முடிகிறது.

இப்படி நம்மை சுற்றி உள்ளவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், இன்ஸ்டாகிராமை ஸ்க்ரால் செய்வது. ஆன்லைனில் பொருட்களை தேடுவது என அவ்வப்போது நேரம் செலவிடுவது ஒரு கட்டத்தில் அந்த பழக்கத்திற்கு நம்மை அடிமையாக்கலாம்.

அப்படி, அதிக நேரம் மொபைல் பயன்படுத்தும் தம்பதிகள் தங்கள் இல்லற வாழ்வில் திருப்தி இல்லாமல் இருக்கின்றனர் என்றும் கூறுகிறார்கள். தன் இணை தன்னை சுற்றி சுற்றி வர வேண்டும் என்பதே மனிதர்களின் விருப்பமாக இருக்கும் சூழலில், செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்துவதை தவிர்த்து நம்மை சார்ந்தவர்கள் மீது, குறிப்பாக தங்கள் இணையின் மீதும், குழந்தைகள் மீதும் கவனம் செலுத்துவது நல்லது என்கிறார்கள் ஆய்வாளர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *