நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கான மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லையாம்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 2019 ஆம் ஆண்டு நிகழ்ந்த தனது திருமணத்துக்காக செலுத்த வேண்டிய மின்சாரக் கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபைக்குத் தாக்கல் செய்த தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், பல மாதங்களுக்கு முன்பு நாமல் தனது திருமணத்திற்கான மின்கட்டணத்தை இன்னும் செலுத்தவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,

”அப்போது நாமல் தனக்கு எந்த ரசிதும் வரவில்லை என்று என்னிடம் கூறியதனால் அதனை உறுதிப்படுத்துவதற்காக நான் மின்சார சபையிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினைத் தாக்கல் செய்திருந்தேன், இன்று எனக்கு அதற்கு பதில் கிடைத்திருக்கிறது.

2019 செப்டெம்பர் 12 மற்றும் 15 ஆம் திகதிகளிற்கு இடையில் வீரகெட்டிய இல்லத்தில் நடைபெற்ற நாமலின் திருமண விழாவிற்காக பாதுகாப்பு விளக்குகள் மற்றும் மின் பிறப்பாக்கிகளை வழங்கியதற்காக செலுத்த வேண்டிய 26, 82,246.57 ரூபா இன்னும் செலுத்தப்படவில்லை என்று மின்சார சபை பதிலளித்திருந்தது.

82,246.57 மின்சாரக் கட்டணம் மற்றும் மேற்கூறிய வசதிகளை வழங்குதல் மற்றும் கட்டணத்தைச் செலுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அது இன்னும் செலுத்தப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.” என்றார்.

இவ்வகையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் நளின் ஹேவகேவுக்கு கடிதம் ஒன்றை வழங்கியதாக இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் வி.வி. ஜனெத் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, ​​இலங்கை மின்சார சபை இவ்வாறான சட்டமூலத்தை இதுவரை தனது தந்தை மஹிந்த ராஜபக்ஷவுக்கோ அல்லது தமக்கோ அனுப்பவில்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தாம் உத்தியோகபூர்வமாக மின்சார சபைக்கு கடிதம் எழுதவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *