தேர்தல் களத்தில் ‘சிக்ஸர்’ பறக்கும் பார்த்திருங்கள்! – சஜித் விளாசல்

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கித் துடுப்பாட்டத்தில் ‘சிக்ஸர்’ அடிப்படைப் போன்று அடிக்கப் போகின்றேன்” என்று சிரித்தவாறு கூறினார் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸ.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று விஜயம் செய்த அமைச்சர் சஜித், வலிகாமம் கிழக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்ட வீட்டுத் திட்டத்தை மக்களிடம் கையளித்தார். அங்குள்ள மைதானத்தில் துடுப்பாட்டம், உதைப்பந்தாட்ட விளையாட்டுக்களில் ஈடுபட்டார். அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்தபோது ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

“ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கப் போகின்றேன். அதில் மாற்றுக் கருத்து இல்லை. தேர்தல் அறிவிக்கப்படட்டும். தேர்தலில் களமிறங்கி இங்கு துடுப்பாட்டத்தில் ‘சிக்ஸர்’ அடிப்பதைப் போன்று அடிக்கப் போகின்றேன். அதைப் பார்க்கத்தானே போகிறீன்றீர்கள்” என்று சிரித்தவாறு கூறினார்.

அதேவேளை, நிகழ்வில் மேடையில் உரையாற்றிய அமைச்சர் சஜித், “நான் சொன்னதைச் செய்து காட்டுவேன். வாயால் வத்தாளைக் கிழங்கு நடுபவன் நான் அல்ல” என்றும் குறிப்பிட்டார்.

அண்மையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ தொடர்பாகக் கருத்துத் தெரிவித்திருந்த எதிர்க்கட்சித் தலைவரும் ஸ்ரீங்கா பொதுஜன முன்னணியின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச, “சஜித் தனது வாயால் எது வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், அவர் செயல் வீரர் அல்லர்” என்று கூறியிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *