சவுதியில் எதிர்வரும் 21 ஆம் திகதி நோன்புப் பெருநாள் வருவதற்கான சாத்தியக்கூறு!

ஏப்ரல் 21ஆம் தியதி வெள்ளிக்கிழமை நோன்புப் பெருநாள் வருவதற்குண்டான சாத்தியக்கூறுகளை முன்னிட்டு, சவுதி அரேபியாவின் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:-

ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு இந்த வருடத்தின் ஈதுல் பித்ர் வெள்ளிக்கிழமை நடைபெறலாம் என்பதையும், ஜூம்ஆ தினத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையை நிறைவேற்றுவதுடன் என்ன தொடர்புடையது என்பதை தெளிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

11-8-1420 அன்று வெளியிடப்பட்ட ஃபத்வா எண் 21162-இன் படி, வெள்ளிக்கிழமை பெருநாள் வரும் சூழ்நிலையில் அங்குள்ள இமாம்கள் கீழ்கண்ட வழிகாட்டுதல்களின் படி செயல்பட வேண்டும் என அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

பெருநாள் தொழுகையும், வெள்ளிக்கிழமை ஜூம்ஆவும் ஒரே நாளில் வரும் சூழ்நிலையில் :-

1. ஈத் தொழுகையில் கலந்து கொள்ளும் எவருக்கும் வெள்ளிக்கிழமை தொழுகையில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இல்லை என்று அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் அவர்கள் நண்பகல் நேரத்தில் லுஹர் தொழுகையை தொழுது கொள்ளலாம். அதே நேரம், அவர் வெள்ளிக்கிழமை ஜூம்ஆ தொழுகையை தொழுதால் அது சிறந்ததாக கருதப்படும்.

2. ஈத் தொழுகைக்கு வராத எவரும் ஜூம்ஆ தொழுகை விலக்கு அனுமதியில்லை. அவர்கள் மீது ஜூம்ஆ தொழுகை கடமையாகும். எனவே அவர் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக மஸ்ஜித்களுக்கு செல்ல வேண்டும்.  மஸ்ஜித்களில் போதுமான எண்ணிக்கையிலான நபர்கள் இல்லாமல் ஜூம்ஆ தொழுகை இல்லை என்றால் அவர் லுஹர் தொழுகையை தொழுது கொள்ளலாம்.

3. வெள்ளிக்கிழமை அன்று மஸ்ஜித் இமாம் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்ற வேண்டும். ஆனால், போதுமான நபர்கள் ஜூம்ஆ தொழுகைக்கு இல்லை என்றால், மஸ்ஜித் இமாம் லுஹர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும்.

4. ஈத் தொழுகையில் கலந்துகொண்டு, வெள்ளிக்கிழமை தொழுகைக்கு வராத எவரும், மதிய நேரம் தொடங்கிய பிறகு லுஹர் தொழுகையைத் தொழ வேண்டும்.

5. அந்த நாளில், ஜூம்ஆ தொழுகை நடைபெறும் பள்ளிகளில் மட்டுமே அதான்(பாங்கு) சொல்லப்பட வேண்டும். மற்ற பள்ளிகளில் நடைபெறும் தொழுகைக்கு அதான் (பாங்கு) சொல்வதற்கு பரிந்துரைக்கப்படவில்லை.

6. பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டவர்களுக்கு அன்றைய தினத்தில் ஜும்ஆத் தொழுகை மற்றும்  லுஹர் தொழுகை ஆகியவற்றில்இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்ற கருத்து தவறானதாகும். ஆதாரம் இல்லாமல் அல்லாஹ்வின் கடமைகளில் இருந்து யாருக்கும் விலக்கு அளிக்கப்படவில்லை எனவும், கண்டிப்பாக லுஹர் தொழுகை அல்லது ஜூம்ஆ தொழுகைகளை தொழ வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *