கையைப் பிடிப்பது பேண்ட் சிப்பை திறப்பது பாலியல் குற்றம் இல்லையாம்!

ஆணின் பேண்ட் சிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் அவர் அந்தச் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ சட்டத்தின்படி கருத முடியாது,’ என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை பெண் நீதிபதி மேலும் ஒரு அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளார். ‘ஒரு உடலை மற்றொரு உடலால் தொடுவதுதான் பாலியல் வன்முறை. துணியை கழற்றாமல் பெண்ணின் உடலை தொடுவது பாலியல் வன்முறை ஆகாது,’ என சில நாட்களுக்கு முன் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையின் நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா அமர்வு சமீபத்தில் பரபரப்பு தீர்பபு அளித்தது. இந்த உத்தரவுக்கு நேற்று முன்தினம் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இந்த நிலையில், இந்த தீர்ப்புக்கு முன்னதாக கடந்த 15ம் தேதி மற்றொரு அதிரடி தீர்ப்பை நாக்பூர் உயர் நீதிமன்ற கிளை நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா அமர்வு வழங்கியுள்ளது.

அந்த வழக்கின் விவரம் வருமாறு:
ஐந்து வயது சிறுமியை லிப்னஸ் குஜ்ஜூர் என்ற 50 வயது ஆண் பாலியல் வன்கொடுமை செய்ததாக, அந்தச் சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்திருந்தார். அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை  செஷன்ஸ் நீதிமன்றம் விசாரித்தது.  அப்போது, சிறுமியின் தாய் அளித்த சாட்சியத்தில், ‘ நான் வேலைக்கு சென்று விட்டு வீடு திரும்பியபோது எனது 5 வயது மகளின் கையை லிப்னஸ் பிடித்திருந்தார். அப்போது, அவருடைய பேண்ட் ஜிப் திறந்து வைத்திருந்த நிலையில் இருந்தது. என் மகளிடம் கேட்டபோது, அந்த நபர் படுக்கையில் உறங்க அழைத்ததாக தெரிவித்தாள்,’ என்று கூறினார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், சிறுமியை பாலியல் வன்முறை செய்ததாக நிரூபிக்கப்பட்ட லிப்னசுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர், நாக்பூரில் உள்ள மும்பை உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பா ஜெனிடிவாலா அமர்வு, கடந்த 15ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதில், ‘குற்றவாளியின் பேண்ட் ஜிப் திறந்திருந்ததை வைத்தும், சிறுமியின் கையை அவர் பிடித்திருந்ததை வைத்தும் சிறுமியை அவர் பாலியல் வன்முறை செய்ததாக கருத முடியாது,’ என அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும், ‘இந்த வழக்கில் சிறுமியை லிப்னஸ் பாலியல் வன்முறை செய்ததற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, அவரை போக்சோ சட்டத்தின் 8வது மற்றும் 10 பிரிவின் கீழ் செஷன்ஸ் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்தது ரத்து செய்யப்படுகிறது.  மேலும், வீட்டுக்குள் அத்துமீறுதல், எல்லை மீறுதல் ஆகிய பிரிவுகளின்படி அவருக்கு தண்டனை வழங்கலாம். அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறை தண்டனை 5 மாதங்களாக குறைக்கப்படுகிறது,’ என்றும் புஷ்பா அமர்வு தனது தீர்ப்பில் மேலும் கூறியது. இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *