உலகின் அமைதியான நாடுகளின் பட்டியல் வெளியீடு!

ஒவ்வொரு ஆண்டும் உலக அமைதிக் குறியீடு (Global Peace Index) பட்டியல் வெளியிடப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாடும் சர்வதேச நெருக்கடிகள் மற்றும் பிரச்னைகளில் ஈடுபடுவது, இராணுவத்தை பயன்படுத்துவது, இராணுவமயமாக்கல்.

அந்நாட்டில் சமூகங்களுக்கு இடையில் நிலவும் பிரச்னைகள், அமைதி மற்றும் பாதுகாப்பு போன்ற பல விஷயங்களின் அடிப்படையில் இப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

The Institute for Economics and Peace என்கிற அமைப்பு அணு ஆயுதம் மற்றும் கனரக ஆயுதங்கள், சிறையில் அடைக்கும் விகிதம், கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை, அரசியல் நிலையற்றதன்மை வன்முறை போராட்டங்கள் என 23 விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆண்டுக்கான பட்டியலைத் தயாரித்திருக்கிறது.

இந்த 2022 ஆம் ஆண்டு உலக அளவில் சராசரி அமைதி 0.3% குறைந்திருப்பதாக குறிப்பிடுகிறது. இந்தப் பட்டியலின்படி உலகின் டாப் 10 அமைதியான நாடுகள் பட்டியலை பார்க்கலாம்.

1. ஐஸ்லாந்து

தொடர்ந்து உலகிலேயே மிகவும் அமைதியான நாடு என்கிற பெருமையை 2008 ஆம் ஆண்டு முதல் தக்க வைத்துக் கொண்டிருக்கிறது ஐஸ்லாந்து.

இந்த நாடு தனக்கென காலாட் படை, கடற்படை, விமான படையைக் கூட வைத்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஐஸ்லாந்தின் குளோபல் பீஸ் இன்டெக்ஸ் ஸ்கோர் 3.4 சதவீதம் முன்னேற்றம் கண்டிருக்கிறது.

2. நியூசிலாந்து

ஆசிய பசிபிக் பிராந்தியத்திலேயே மிகவும் அமைதியான நாடாகக் கருதப்படும் நியூசிலாந்து, உலக அளவில் இரண்டாவது அமைதியான நாடாக இப்பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டில் இந்த நாடு தன்னுடைய ராணுவ செலவீனங்களை குறைத்திருக்கிறது. அதோடு சிறையில் அடைக்கப்படும் நபர்களின் எண்ணிக்கையைக் குறைந்திருக்கிறது.

தீவிரவாதத்தின் தாக்கத்தையும் குறைந்து இருப்பதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

3. அயர்லாந்து

ஐரோப்பாவிலேயே இரண்டாவது அமைதியான நாடாக உள்ள அயர்லாந்து உலக அளவில் மூன்றாவது அமைதியான நாடாக இடம் பிடித்திருக்கிறது.

பாதுகாப்பு விஷயத்தில் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாக அறிக்கையில் கூறப்படுகிறது. எனவே அமைதி 0.019 சதவீதம் அதிகரித்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.

4. டென்மார்க்

கடந்த ஆண்டு உலகிலேயே மூன்றாவது அமைதியான நாடாக இருந்த டென்மார்க், 2022 ஆம் ஆண்டில் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது.

இருப்பினும் பாதுகாப்பு விஷயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

5. ஆஸ்திரியா

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது ஆஸ்திரியாவில் 0.018 சதவீதம் அமைதி அதிகரித்து இருப்பதாக கூறப்படுகிறது.

உலகிலேயே ஐந்தாவது அமைதியான நாடு என்கிற பெருமையும் பெற்று இருக்கிறது இந்த நாடு.

6. போர்ச்சுகல்

உலகிலேயே ஆறாவது அமைதியான நாடு என்கிற பெருமை பெற்று இருக்கும் போர்ச்சுகல் தொடர்ந்து உலகில் அமைதியான நாடுகள் பட்டியலில் இடம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டில் தொடர்ந்து குற்றங்கள் எண்ணிக்கை குறைவாகவே இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

7. ஸ்லோவேனியா

உலகிலேயே மிகவும் அமைதியான நாடுகள் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்திருக்கும் இந்த நாடு கடந்த ஆண்டை விட இரண்டு இடங்கள் சரிந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாட்டின் ஒட்டு மொத்த ஜி பி ஐ மதிப்பெண் 0.021% குறைந்திருக்கிறது

8. செக் குடியரசு

2022 ஆம் ஆண்டிலேயே உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில் எட்டாவது இடத்தை பிடித்திருக்கும் செக் குடியரசு, ராணுவமயமாக்கல் மற்றும் பாதுகாப்பு விவகாரங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது.

9. சிங்கப்பூர்

உலகிலேயே ஒன்பதாவது அமைதியான நாடாக இருக்கும் சிங்கப்பூர், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, இரண்டாவது அமைதியான நாடாக இடம் பிடித்திருக்கிறது.

உலக அமைதி குறியீட்டுக்கான கணக்கீட்டில், ராணுவமயமாக்கள் அணு ஆயுதம், கனரக ஆயுதங்கள், ஆயுத ஏற்றுமதி போன்ற விவகாரங்களில் தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வருகிறது சிங்கப்பூர்.

10. ஜப்பான்
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்திகளில் ஒன்றாக இருக்கும் ஜப்பான் இப்பட்டியலில் பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்தியா:

உலக அமைதிக் குறியீட்டில், உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமான இந்தியா 2.578 மதிப்பெண்ணுடன் 3 இடங்கள் முன்னேறி 135ஆவது இடத்தில் இருக்கிறது.

இதே உலக அமைதிப் பட்டியலில் இந்தோனேசியா 47ஆவது இடத்திலும், அர்ஜெண்டினா 69ஆவது இடத்திலும், ஜமைக்கா 81ஆவது இடத்திலும், சீனா 89ஆவது இடத்திலும், அமெரிக்கா 129ஆவது இடத்திலும் இருக்கின்றன.

மெக்ஸிகோ 137ஆவது இடத்திலும், மியான்மர் 139ஆவது இடத்திலும், இரான் 141ஆவது இடத்திலும், துருக்கி 145ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 147ஆவது இடத்திலும், ரஷ்யா 160ஆவது இடத்திலும், ஆப்கானிச்தான் கடைசி (163ஆவது) இடத்திலும் இருக்கின்றன.

ஒட்டுமொத்தமாக 163 நாடுகள் கொண்ட பட்டியலில் 90 நாடுகள் உலக அமைதிக் குறியீட்டில் முன்னேற்றம் கண்டிருக்கின்றன.

பிராந்திய ரீதியில் பார்த்தால் மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியங்கள் உலகிலேயே மிகவும் அமைதி குறைவான பிராந்தியக்களாகவும் ஐரோப்பிய பிராந்தியம் மிகவும் அமைதியான பிராந்தியமாகவும் இடம் பிடித்திருக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *