விரைவில் இலங்கை, இந்தியா இடையே பயணிகள் படகுச் சேவை!

இலங்கை மற்றும் இந்தியா இடையே பயணிகள் படகுச் சேவையை விரைவில் தொடங்குமாறு இலங்கை இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் (IOR) இணைச் செயலாளர் புனித் அகர்வால் மற்றும் இலங்கை துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பயணிகள் படகு சேவை திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் ஆதரவை இலங்கை அமைச்சர் கோரினார், 

இது ஏற்கனவே எட்டப்பட்ட பூர்வாங்க பணிகளுக்கான ஒப்பந்தம் என அந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் படகு சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் நாடுகளுக்கிடையிலான பயணம் சாதாரண மக்களுக்கு மலிவு விலையில் அமையும் என்றும், சரக்கு போக்குவரத்து மூலம் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையே இரு நாடுகளும் பயணிகள் படகு சேவையை அடுத்த ஆண்டு ஜனவரி முதல் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு வழங்கப்படும் சலுகைக் கடன் தொகையை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்த அமைச்சர், நிர்மாணத் துறையில் பொருட்களின் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கமே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தார்.

2018 ஆம் ஆண்டில், இலங்கையின் வடபகுதியில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்துவதற்கும், பிராந்திய கடல்சார் மையமாக மாறுவதற்கான நாட்டின் முயற்சிகளை வலுப்படுத்துவதற்கும் 45.27 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவியை இந்தியா வழங்கியது.

இலங்கையில் இருந்து தமிழகத்தின் தனுஸ்கோடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு பயணிகள் படகு சேவையை தொடங்குவது பொருத்தமானது என்று அகர்வால் கூறினார்.

அமைச்சரின் யோசனைக்கு இணங்கிய அவர், பயணிகள் படகு சேவைகளுடன் இலங்கை புகையிரத சேவையையும் இணைக்க முடியும் என வலியுறுத்தினார்.

மேலும் இலங்கையின் மத்தள விமான நிலையம் வரை இந்திய விமான சேவைகளை இயக்க வேண்டும் என்றும் இலங்கை அமைச்சர் கேட்டுக்கொண்டார், 

அதற்கு பதிலளித்த அகர்வால், இரு நாடுகளுக்கும் இடையிலான கடற்படை மற்றும் விமான சேவைகளை விரிவுபடுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் இந்திய அரசாங்கம்  முழு ஆதரவை வழங்கும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *