பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலேயின் உடல் நிலையில் பின்னடைவு!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பிரேசிலின் முன்னாள் கால்பந்து நட்சத்திரம் பீலேயின் உடல் நிலையில் சிறிது பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். ‘கிங் ஆஃப் புட்பால்’ என அழைக்கப்படும் பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலேவுக்கு (82), உலகம் முழுவதும் இன்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 1958, 1962 மற்றும் 1970 என 3 ஆண்டுகள் பிரேசிலுக்கு உலகக்கோப்பையை தனது தனி ஒருவரின் திறமையால் பெற்றுத் தந்தவர். தற்போது புற்று நோயால் பாதிக்கப்பட்டு, சாவ் பாலோ நகரில் உள்ள ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு தொடர்ச்சியாக கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் கூறுகையில், ‘‘அவர் ஜெனரல் வார்டில்தான் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஐசியூவில் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் புற்றுநோய் செல்களின் தீவிரம் காரணமாக அவரது சிறுநீரகம் மற்றும் இதயம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. தவிர நுரையீரல் பாதிப்பும் உள்ளது. ஆனால் வென்டிலேட்டர் பொருத்த வேண்டிய நிலை இல்லை. அவருக்கு மிகவும் கவனமாக, தீவிரமாக சிகிச்சை அளித்துக் கொண்டிருக்கிறோம். 4 டாக்டர்கள் அடங்கிய குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. தேவைப்படும் சிகிச்சைகள் உடனுக்குடன் அளிக்கப்பட்டு வருகின்றன.

அவர் நல்ல நினைவுடன்தான் உள்ளார்’’ என்று தெரிவித்துள்ளனர். பீலேவின் மகள்கள் கெலி நாசிமென்டோ மற்றும் ஃபிளேவியா ஆரன்ட்ஸ் ஆகியோர் மருத்துவமனையில் உடனிருந்து, தந்தையை கவனித்துக் கொள்கின்றனர். அவர்கள் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு எங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் இல்லை. டாக்டர்கள் அறிவுரையின்படி தந்தையை உடனிருந்து கவனித்துக் கொண்டிருக்கிறோம். அவரது ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கின்றனர். அது நிச்சயம் பலனளிக்கும். அவர் குணமடைந்து வீடு திரும்புவார்’’ என்று தெரிவித்துள்ளனர்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *