போர்க்குற்றம் புரிந்தோர் ஜனாதிபதியாக முடியாது! – நல்ல பிள்ளைக்கு நடிக்கிறார் கோட்டா; சந்திரிகா கொதிப்பு

“கோட்டாபய ராஜபக்ச தாம் செய்த போர்க்குற்ற மீறல்களையும், மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க முற்படுவது அருவருக்கத்தக்க – வெட்கக்கேடான செயலாகும். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுவதற்கு நாட்டில் உள்ள அமைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களோ ஒருபோதும் இடமளிக்கா.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமரதுங்க.

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் சகோதரரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ச எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராகக் களமிறங்கத் திட்டமிட்டுள்ளார். அதற்குரிய நகர்வுகளை ஆரம்பித்துள்ள கோட்டாபய ராஜபக்ச, தனது அமெரிக்கக் குடியுரிமையை கைவிடுவதற்தற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளார். மஹிந்த அணியினர் கோட்டாபயவே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் என்று வெளிப்படையாகக் கூறி வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பாக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே மீளவும் வேட்பாளராகக் களமிறங்க வேண்டும் என்று அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர். இந்தப் பிணக்கால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து தேர்தலைச் சந்திக்கும் திட்டம் நிறைவேறாது போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது:-

“ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கிடையே மஹிந்த அணியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கொக்கரிக்கத் தொடங்கி விட்டனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவின் மீது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறையில் இருக்க வேண்டிய கோட்டாபய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமை என்ற கவசத்தை அணிந்துகொண்டு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறிச் சுற்றுலா செல்கின்றார். அண்மையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரு பாரதூரமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்குத் திரும்பி வந்துள்ள அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் நல்ல பிள்ளைக்கு நடிக்க முயல்கின்றார்.

இரட்டைக் குடியுரிமையுடன், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கோட்டாபய , ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இதை அவர் கவனத்தில்கொள்ள வேண்டும்” – என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *