சட்டவிரோதமான கட்டிடங்களை அகற்ற மறுக்கும் இரத்தினபுரி மாநகர சபை?


(எம்.எல்.எஸ்.முஹம்மத்)

தனது மூத்த மகள் பரூஸாவின் திருமணத்திற்கு ஆயத்தமாகும் நோக்குடன் வங்கியிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் 10 லட்சம் ரூபாவை பயன்படுத்தி கொள்வனவு செய்திருந்த அறைத் தளபாடங்கள் அனைத்தும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் முற்றாக அழிந்து போயின.இதன் தாக்கத்தை இன்றும் நாம் உணர்கிறோம் என தனக்கு ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புப் பற்றி இரத்தினபுரி பள்ளி வீதியைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியை ஆமினா பேகம் தெரிவிக்கிறார்.
இரத்தினபுரி மற்றும் களுக்தறை மாவட்டங்களை ஊடறுத்துச் செல்லும் களுகங்கையை மையப்படுத்தி உருவாகும் வெள்ளம் இரத்தினபுரி நகரை மாத்திரமின்றி பல தாழ்நிலப் பகுதிககளையும் தாக்கி வருடாவாருடம் ஆயிரக்கணக்கான மக்களை பாதிப்படையச் செய்கிது.

ஒவ்வொரு வருடமும் மே ஜூன் காலப் பகுதியில் ஏற்படும் இவ்வெள்ளம் கடந்த 1980 களின் பின்னர் ஏற்படுத்தி வரும் பாதிப்புக்களும் அனர்த்தங்களும் நகரில் வாழும் 5200 இற்கும் மேற்பட்ட மக்களின் கண்ணீரை இன்னும் நிறுத்த மறுக்கிறது.
ஆசிரியை ஆமினா மாத்திரமின்றி இரத்தினபுரி பள்ளி வீதி,ஆற்றங்கரை வீதி,போதிராஜா வீதி உட்பட ஜோதி மாவத்தை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பலரது வாழ்கையிலும் இரத்தினபுரி வெள்ளம் உருவாக்கி வரும் சோகக் கதைகளின் வரலாறுகளை இன்னும் இம்மக்களின் கண்கள் கதைக்கின்றன.
வெள்ள அனர்த்தம்
உயர்தரம் விஞ்ஞானப் பிரிவில் கல்வியைத் தொடரும் படுகெதரயைச் சேர்ந்த ஸைனப் நவாஸிடம் “உங்கள் வீட்டுக்கு ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் பற்றி ஞாபகமிருக்கிறதா?” எனக் கேட்டபோது அவர் தந்த பதில்கள் பிரச்சினையின் ஆழத்தை மேலும் சுட்டிக்காட்டுகிறது.
“அன்றைய தினத்தை நினைக்கும் போது எனக்கு மரணப் பயம் வருகிறது.திடீரென எங்கள் வீட்டுக்குள் நுழைந்த வெள்ளம் எங்கள் உயிர்களை மட்டுமே மீதமாக தந்தது.அந்த இழப்புக்களை இன்னும் எம்பெற்றோர்களால் சரிப்படுத்த முடியவில்லை.பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்கள் கூட மனித நேயத்துடன் செயற்படத் தவறினர்.தமது இனத்தவர்களை மாத்திரமே படகில் ஏற்றிச் சென்றனர்.எட்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக வீட்டின் கூரையின் மேலிருந்துதான் எமது உயிரை நாம் பாதுகாத்துக் கொண்டோம்” என பலத்த கண்ணீருடன் கதையைத் தொடர்ந்தார் அவர்.

ஆசிரியை ஆமினா பேகம் மேலும் தொடர்கையில் 1980 களுக்கு முன்னர் இரத்தினபுரிக்கு வெள்ளம் ஏற்படுவது மிக அரிது.ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது. கடந்த 10 வருடங்களில் மாத்திரம் 15இற்கும் மேற்பட்ட வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுவிட்டன.
மழை பெய்யும் போதெல்லாம் வெள்ளத்தை எதிர்பார்க்க வேண்டியுள்ளோம்,அன்று 10இற்கும் குறைவான வீடுகளைக் கொண்டிருந்த எமது வீதியில் இன்று நூற்றுக்கணக்கான பெரிய கட்டிடங்கள் உருவாகிவிட்டன.அன்று ஆற்றில் இயல்பாக ஓடிய நீர் இன்று அதற்கு பயணிக்க இடமின்றி எமது வீதிகளையும் வீடுகளையும் நிரப்பி வருகிறது.ஆற்றங்கரைகளை மறித்துகட்டப்படும் கட்டிடங்கள் நிறுத்தப்பட்டிருந்தால் ஓரளவாவது பாதிப்புக்கள் கட்டுப்படுத்தப்பட்டிருக்கும் என அவர் தெரிவிக்கிறார்.
அரச அறிக்கைகள்
இரத்தினபுரி மாநகர சபையின் நில ஒதுக்கீடுகள் தொடர்பான அறிக்கைக்கிணங்க இரத்தினபுரி களுகங்கையின் இரு பகுதிகளிலும் தலா மீட்டர் (66அடிகள்) என்ற அடிப்படையில் ஒதுக்கப்பட்ட நிலப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.அத்துடன் மேற்படி நிலப் பகுதியில் கட்டிடங்களை நிர்மாணிக்க முயற்சிப்பது தண்டனைக்குரிய குற்றமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
இரத்தினபுரி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் அறிக்கைகளின் இரத்தினபுரி களுகங்கையை மையப்படுத்தி உருவாகும் வெள்ளப் பாதிப்பினால் ஒவ்வொரு முறையும் பல மனித உயிர்கள் இழக்கப்படுகின்றன.பலர் காயமடைகின்றனர்.ஆயிரக்கணக்கானவர்கள் இடம் பெயர்கின்றனர். நூற்றுக்கும் அதிகமான வீடுகளும் பெறுமதியான பல சொத்துக்களும் இழக்கப்படுகின்றன.அரசும் அனர்தத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவதற்கென பல மில்லியன் கணக்கான பணமும் செலவிடப்படுகிறது என அவ்வறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
அத்துடன் அனர்தத்தால் பாதிக்கப்படும் ஆயிரக்கணக்கான குடும்பங்களை தங்கவைப்பதற்கென அரசு முக்கிய மத வழிபாட்டுத் தளங்கள் உட்பட 10 இற்கும் மேற்பட்ட அனர்த்த பாதுகாப்பு முகாம்களை இரத்தினபுரி மாவட்டத்தில் அமைத்து வருகிறது எனவும் இரத்தினபுரி அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரத்தினபுரி மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் மஞ்சுள கருத்து தெரிவிக்கையில்
இலங்கையில் இயற்கை அனர்த்தங்கள் மிக நிறைந்த ஆபத்துமிக்க மாவட்டங்கலுள் ஒன்றாக இரத்தினபுரி மாவட்டம் மாறியிருக்கிறது.மண்சரிவு மாத்திரமின்றி வெள்ள அனர்தத்திற்கும் மக்களின் பொறுப்பற்ற செயற்பாடுகளே மிகப் பிரதான காரணமாகும்.ஆற்றங்கரைவரை கட்டிடங்கள் நீட்டப்பட்டு கட்ப்படுவது தவிர்க்கப்படுமானால் இரத்தினபுரி நகரில் ஏற்படும் வெள்ள அனர்தத்தை 50 சதவீதத்தால் குறைக்க முடியும் என அவர் தெரிவிக்கிறார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெள்ள அனர்தத்தைத் தொடர்ந்து இரத்தினபுரி நகர் ஊடாகச் செல்லும் களுகங்கையின் ஆற்றங்கரை ஓரங்களில் கட்டப்பட்டிருக்கும் அனைத்து சட்டவிரோதமான கட்டிடங்களும் அகற்படுமென களுத்தறை மாவட்ட சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்திருந்தது.
இரத்தினபுரி நகரில் ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்தும் நோக்குடன் களுகங்கை ஆற்றங்கரை வீதியில் வாழும் குடும்பங்களுக்கு மாற்று இடமொன்றில் அடுக்குமாடி வீட்டுத் திட்டமொன்றை முன்னெடுப்பதற்கு இரத்தினபுரி மாவட்ட அபிவிருத்தி குழு 2017 இல் தீர்மானம் மேற்கொண்டதாக இரத்திபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் மஞ்சுள மேலும் தெரிவிக்கிறார்.
இலங்கையில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டுவரும் தேர்தல் நடைமுறைகளைத் தொடர்ந்து பொது நிர்வாகத் துறையில் இடம்பெற்று வரும் அரசியல் தலையீடுகளுக்கு உள்ளூராட்ச்சி மன்றங்கள் விதிவிலக்காணவைகள் அல்ல.கிராமிய அரசியல் தலைவர்கள் தமது செல்வாக்குகளை பயன்படுத்தி சட்டாரீதியற்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் பிரதான ஸ்தாபனமாக உள்ளூராட்சி மன்றமும் அதன் நிர்வாக செயற்பாடுகளும் மாற்றம் பெற்றுள்ளன.
தொடரும் அரசியல் தலையீடுகள்
இரத்தினபுரி களுகங்கை ஆற்றங்கரையை அண்மித்த இடங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டிடங்களால் இரத்தினபுரி நகர் பகுதியில் ஏற்படும் வெள்ளப் பாதிப்புக்களை கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது என்ற விடயம் இரத்தினபுரி மாநகர சபைக்கு தெரிந்துள்ள போதிலும் கட்டிடங்களை நிர்மாணிப்பதற்கு வழங்கப்படும் அனுமதியில் பாரிய சந்தேகம் உள்ளதாக சபரகமுவ மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இப்ளார் எம் யஹ்யா தெரிவிக்கிறார்.
கடந்த 5வருடங்களில் மாத்திரம் 50 சதவீதத்திற்கும் அதிகமான புதிய கட்டிடங்கள் இரத்தினபுரி நகர் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக இரத்தினபுரி சமூக செயற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக களுகங்கை ஆற்றங்கரையை அண்மித்த ஒதுக்கப்பட்ட நிலங்களில் கட்டப்பட்டுவரும் இச்சட்டவிரோத நடவடிக்கைகளின் பின்னணியில் முக்கிய அரசியல் பிரமுகர்களின் ஒத்துழைப்பும் காணப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் ஸெனவிரத்ன மின் வலு அமைச்சராக செயற்பட்ட காலத்தில் கொண்டுவரப்பட்ட தேசிய மின்சார திட்டங்களின் கீழ் இரத்திபுரி களுகங்கை ஆற்றங்கரையை அண்மித்து கட்டப்பட்ட பல கட்டிடங்களுக்கு மின்சார இணைப்புக்கள் கிடைக்கப் பெற்றதாக இரத்தினபுரி முஸ்லிம் விவாகப் பதிவாளர் அல்ஹாஜ்.எம்.பாரூக் தெரிவிக்கிறார்.
நீர் மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றாக இருப்பதால் புதிதாக நிர்மாணிக்கப்படும் அனைத்து கட்டிடங்களுக்கும் தற்காலிக நீர் வழங்கள் இணைப்புக்கள் வழங்கப்படுகின்றன.நீரைப் பெறுவதற்கு காணி தொடர்பான உறுதிகள் அவசியமில்லை என இரத்தினபுரி நீர் வழங்கல் அதிகார சபையின் உதவிப் பொறியியலாளர் எம்.இம்திஹான் தெரிவிக்கிறார்.

இரத்தினபுரி களுகங்கை ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டிருக்கும் கட்டங்கள் தொடர்பில் இரத்தினபுரி மாநகர சபையின் உறுப்பினர் மொஹமட் ஷியாமிடம் கேட்ட போது அவர் இவ்வாறு பதில் அளித்தார்.
மேற்படி கட்டிடங்களுக்கு மின்சாரம் நீர் இணைப்புக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதால் மாநகர சபையிடமிருந்து வரிப்பண இலக்கங்களையும் பெற்றுக் கொள்கின்றனர்.தனியார் கட்டிடங்கள் மாத்திரமின்றி அரச பாடசாலைகளின் கட்டிடங்களும் களுகங்கையின் ஆற்றங்கரையை விட்டுவைக்கவில்லை.நாட்டின் பொதுச் சட்டத்தை பேணி அரசியல் தலைவர்களும் செயற்பட்டிருந்தால் இரத்தினபுரி வெள்ளம் ஒரு தொடர் கதையாக மாறியிருக்காது என அவர் தெரிவிக்கிறார்.
தீர்வு ஆலோசனைகள்
ஆற்றங்கரையை அண்மித்து நிர்மாணிக்கப்படும் கட்டங்களை அகற்றுவது மாத்திரம் வெள்ள அனர்தத்தை கட்டுப்படுத்த தீர்வாக அமையுமா? என சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான சமூக ஆய்வாளர் ஹஸித இந்திக வீரவர்தனவிடம் நாம் வினவினோம்.இது தொடர்பில் அவர் பதில் அளிக்கையில்
இலங்கையில் மாத்திரமின்றி உலகின் பல நாடுகளில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுகின்றன.அந்நாடுகளில் ஆற்றங்கரைகளை அண்மித்து வாழும் மக்கள் அக்கிருந்து அகற்றப்படுவதில்லை.மாறாக விஞ்ஞான தொழில்நுட்ப அறிவியல் நுணுக்கங்களை பயன்படுத்தி பொருத்தமான முறையில் அங்கு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.இரத்தினபுரி நகரை நோக்கி மக்கள் வருவதை பிழையென கூற முடியாது.இந்த விடயத்தில் மாற்றுத் திட்டங்கள் பற்றி சிந்திக்கப்பட வேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.
இரத்தினபுரி வெள்ளத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் நாம் பல திட்டங்களை முன்வைத்தோம்.குறிப்பாக களுகங்கை அபிவிருத்தி திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வருமாறு இங்குள்ள அனைத்து தரப்பினரையும் நாம் வேண்டினோம்.குறிப்பிட்ட சில அரசியல் பிரமுகர்களின் சொந்த நலன்களை முன்னிட்டு அம்முயற்சி இடை நடுவில் நின்று விட்டது என இரத்தினபுரி வெள்ளம் தொடர்வதற்கான காரணத்தை இரத்தினபுரி சமூக அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் பாதுகாப்பிற்கான மத்திய நிலைய பணிப்பாளர் ஷமிந்த பியசேகர சுட்டிக் காட்டுகிறார்.
இரத்தினபுரி களுகங்கை திட்டம் விரைவில் அமுலாக்கப்படுமா என இரத்தினபுரி மாவட்ட சர்வமதக் குழுவின் தலைவர் குணவங்ச தேரரிடம் கேட்ட போது அவர்
அரசியல் தலைவர்கள் உட்பட இரத்தினபுரி மாவட்ட அரசியல் தலைவர் அனைவரும் இதனை ஒரு மக்கள் பிரச்சினையாக நோக்க முரன் வர வேண்டும்.தேவையான சட்ட திருத்தங்களை கொண்டு வந்து எமது ஆற்றங்கரைகளை பாதுகாக்க வேண்டும்.சட்டவிரோதமான கட்டிடங்கள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும்.அரசியல் தலையீடுகள் இன்றி இவ்விடயம் முன்னெடுக்கப்படுவதற்கு அரச பணியார்களுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எமது மதத் தலைவர்கள் உட்பட அனைவரின் ஆலோசனைகளுடன் களுகங்கை திட்டத்தை மீளக் கொண்டு வர வேண்டும் என அவர் தெரிவிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *