நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும்வரை நாடாளுமன்றம் முடக்கப்படுமா? – மக்களின் ஐயப்பாடு இது என்கிறார் நஸீர் அஹமட்

“நாடாளுமன்றச் செயற்பாடுகளை தொடர்ந்து முடக்கி எதிர்வரும் டிசம்பர் 7ஆம் திகதி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை காலதாமதத்தை ஏற்படுத்துவதுதான் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திட்டமாக இருக்குமோ என்ற ஜயப்பாடு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது அமைச்சரவைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி மேற்கொண்ட நடைமுறைகளே இத்தகைய எண்ணம் மக்கள் மனதில் எழக்காரணமாக இருக்கின்றது எனவும் எதிர்வுகள் கூறப்படுகின்றன. எனவே, தொடர்ந்தும் காலதாமதங்களை ஏற்படுத்தாது இதற்கான தீர்க்கமான முடிவை ஜனாதிபதியும் முக்கிய அரசியல் தரப்புகளும் உடன் முன்னெடுக்க வேண்டும்.”

– இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உப தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்று மீண்டும் ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்துக் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“நாடாளுமன்றில் அங்கத்துவம் வகிக்கின்ற கட்சிகளில் பெரும்பான்மையானவை ஜனாதிபதியின் நடவடிக்கைகள் தொடர்பில் தமது அதிருப்திகளைத் தெரிவித்து வருகின்றன. எனினும், அவர் அவற்றின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பதாகத் தெரியவில்லை என்பதைத் தகவல்கள் மூலமாக அறியமுடிகின்றது.

‘தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்’ என்பது போல் ஜனா திபதி நடந்து கொள்கின்றார் என்பதே சிறுபான்மை மக்களில் பெரும்பாலானவர்களின் கருத்தாக இருக்கின்றது.

எனவே, தொடர்ந்தும் நாட்களைக் கடத்தாமல் தற்போது ஏற்பட்டுள்ள இந்த அரசியல் அதிகார இழுபறி நிலைக்கு உரிய தீர்வைக்காண தகுந்த நடவடிக்கைகளைத் துரிதமாக எடுக்கவேண்டும்.

இந்த நிலைமை தொடருமானால் பாராதூரமான விளைவுகள் நாடாளுமன்றத்தில் ஏற்படக்கூடும் என அமைச்சர்களே கருத்துகளை முன்வைக்கின்றனர்.

எனவே, எதிர்வரும் 23ஆம் திகதி வெள்ளிக்கிழமையாவது இதற்கான உறுதியான முடிவு எட்டப்பட வழிவகைகள் செய்யப்பட வேண்டும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாகும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *