மீண்டும் அதுபோன்ற மோசமான சூழலுக்குச் செல்லக் கூடாது மனிஷா கொய்ராலா உருக்கம்!



இந்தியத் திரையுலகில் 90’ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா.

இந்தியத் திரையுலகில் 90’ஸ் காலகட்டத்தில் தமிழ், இந்தி எனப் பல மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மனிஷா கொய்ராலா. 1942 லவ் ஸ்டோரி, மணிரத்னத்தின் `பம்பாய்’, சங்கரின் `இந்தியன்’ போன்ற படங்கள் மூலம் இந்தியத் திரையுலகில் பிரபல நட்சத்திரமாக ஜொலித்தவர்.’

ஆனால் 2012-ஆம் ஆண்டு இவருக்கு ஏற்பட்ட கருப்பைப் புற்றுநோய் இவரது வாழ்க்கையைப் புரட்டிப் போட்டது. பின்னர் 2013-ஆம் ஆண்டு முழுமையாகக் குணமடைந்து, மீண்டும் தற்போது திரைப்படங்களில் நடித்துவருகிறார். மேலும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை, ’எப்படி புற்றுநோய் எனக்குப் புது வாழ்க்கையை அளித்தது?’ என்பதை ‘ Healed’ என்ற சுய சரிதைப் புத்தகமாக எழுதி வெளியிட்டார். இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் இயக்குநர் மணிரத்னத்தின் `பம்பாய்’ படத்தில் நடித்தது குறித்துப் பேசிய அவர், பலர் இப்படத்தில் நடிக்கவேண்டாம் என்று அறிவுரை வழங்கியதாகக் கூறியுள்ளார்.

இதுபற்றிக் கூறிய அவர், “இயக்குநர் மணிரத்னத்தின் `பம்பாய்’ படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அப்போது எனக்கு 20 வயது. ஆனால் இப்படத்தில் நான் இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக நடிக்க வேண்டி இருந்தது. எனவே பலர் இப்படத்தில் நடிக்க வேண்டாம், ஒரு முறை தாயாக நடித்தால் அடுத்த பத்து வருடங்களுக்கு அதே போன்ற கதாபாத்திரங்கள்தான் வரும் என்று கூறினார்கள். பின்னர் ’நீ பாட்டியாகத்தான் நடிக்க வேண்டி இருக்கும்’ என்று கூறினார்கள்.

ஆனால் எனது நலம் விரும்பிகள் சிலர் இயக்குநர் மணிரத்னத்தின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது பெரிய விஷயம். இதை நிராகரிப்பது முட்டாள்தனம் என்று கூறினார்கள். அது ’சரி’ என்று மனத்திற்குத் தோன்றியது. இந்த வாய்ப்பைத் தவறவிடக் கூடாது என்று முடிவு செய்தேன்” என்று கூறினார்.

மேலும், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததைப் பற்றிக் கூறிய அவர், “மீண்டும் அதுபோன்ற மோசமான சூழலுக்குச் செல்லக் கூடாது. புற்றுநோய் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன். அது என் வாழ்வில் நிறைய மாற்றங்களைக் கொண்டு வந்தது. மேலும் 20 வயதில் இருந்த வேகம் இப்போது இந்த 40 வயதில் இருக்காது. காலம் மாறும்போது நம்முடைய கண்ணோட்டமும் மாறுகிறது. நாம் வித்தியமான மனிதராக மாறுகிறோம்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *