கோட்டாவின் செலவுகளை அரசாங்கம் ஏற்காது?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வெளிநாடுகளில் மேற்கொள்ளும் செலவுகள் எதற்கும் அரசாங்கப் பணத்தை செலவிடப் போவதில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான அனைத்து செலவுகளும் முன்னாள் ஜனாதிபதியின் தனிப்பட்ட பணத்தில் மேற்கொள்ளப்படும் என அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிப்பதற்காக அரசாங்க செய்தி திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

முன்னாள் மற்றும் தற்போதைய ஜனாதிபதிகளுக்கு சட்டத்தின் கீழ் சில சலுகைகள் உண்டு என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டதாகவும், முன்னாள் ஜனாதிபதியின் வெளிநாட்டு செலவுகளுக்கு அரசாங்கம் பணம் செலவிடுவதாக ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதன்படி, தனது வெளிநாட்டு செலவுகள் குறித்து சில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் தவறானவை என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தச் செலவுகள் அனைத்தும் தனது தனிப்பட்ட பணத்தில் இருந்தே செலவிடப்படும் என கோத்தபாய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *