ஆம்புலன்ஸ் வராததால் தாயின் சடலத்தை பைக்கில் கொண்டு சென்ற மகன்கள்!

மத்தியப் பிரதேசத்தில் உயிரிழந்த தாயின் சடலத்தை கொண்டு செல்வதற்கு ஆம்புலன்ஸ் தராததால் மகன்கள் இருசக்கர வாகனத்தில் தூக்கி சென்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் அனுப்பூர் மாவட்டம் குடாரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்மந்திரி யாதவ். இவருக்கு திடீரென கடந்த வியாழக்கிழமை நெஞ்சு வலி ஏற்பட்டது.

அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், மேல் சிகிச்சைக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கோரியுள்ளனர்.

இதனால் தாயினை அழைத்துக் கொண்டு அவரின் மகன்கள் சிகிச்சைக்காக ஷாதோல் மாவட்டத்தில் உள்ள ஷாதோல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர்.

ஆனால் அங்கு சிகிச்சை சரியாக அளிக்கப்படாததால் ஜெய்மந்திரி பரிதாபமாக உயிரிழந்தார்.

தாயின் சடலத்தை எடுத்துச் செல்வதற்கு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் கேட்டதற்கு இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் இரண்டு மகன்களும் தாயின் உடலை இருசக்கர வாகனத்தில் வைத்து 80 கி.மீற்றர் தூரத்தில் இருக்கும் வீட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

அந்த பெண்ணின் மகன் சுந்தர் யாதவ் கூறுகையில் “ எங்களின் தாய்க்கு மருத்துவமனை நிர்வாகம் முறையான சிகிச்சை அளிக்கவில்லை, செவிலியர்கள் கவனக்குறைவுடன் நடந்ததால் தான் உயிரிழந்தார்.

அவர் உடலைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் கேட்டதற்கும் அதையும் வழங்கவில்லை. எங்களால் தனியார் வாகனத்துக்கு செலவு செய்ய ரூ.5ஆயிரம் பணம் இல்லை. இதனால் ரூ.100க்கு இரு மரக்கட்டைகளை வாங்கி எங்கள் தாயின் சடலத்தை வைத்துக் கட்டி கொண்டு சென்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *