அல்கொய்தாவின் முக்கிய தலைவர் விமானத் தாக்குதலில் உயிரிழப்பு!

அல்கொய்தாவின் முக்கிய தலைவர் அமெரிக்காவின் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறித்த தகவலை நாட்டு மக்களுக்கு நேரலையில் ஜனாதிபதி ஜோ பைடன் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. அல்கொய்தா பயங்கரவாத குழுவின் நிறுவனர்களில் ஒருவரும், 2001 அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலின் மூளையாக செயல்பட்டவருமான 71 வயது அய்மன் அல்-ஜவாஹிரி கொல்லப்பட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது. மரணத்தின் மருத்துவர் என அறியப்படும் அல்-ஜவாஹிரி அமெரிக்காவின் எப்.பி.ஐ அமைப்பின் மிகவும் தேடப்படுபவர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தார்.

மட்டுமின்றி, தான்சானியா மற்றும் கென்யாவில் உள்ள அமெரிக்க தூதரகங்கள் மீது 1998 குண்டுவெடிப்புகளுக்கு இவர் மூளையாக செயல்பட்டதாகவும் நம்பப்படுகிறது.

2011ல் ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் அல்கொய்தா தலைவராக தெரிவு செய்யப்பட்டார். இவரது தலைக்கு அமெரிக்க நிரவாகம் 25 மில்லியன் டொலர் வெகுமதி அறிவித்திருந்தது.

எகிப்தில் பிறந்தவரான அல்-ஜவாஹிரி பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளின் ஒருபகுதியாக முன்னெடுக்கப்பட்ட ட்ரோன் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

குறித்த தாக்குதல் சம்பவம் வெற்றிபெற்றுள்ளதாகவும், பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுத்தாமல் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே இந்த விவகாரம் தொடர்பில், பின்னணி தகவல்களை ஜோ பைடன் நாட்டு மக்களுக்கு அறிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், காபூல் நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ள ட்ரோன் தாக்குதலுக்கு தாலிபான் நிர்வாகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், சர்வதேச கொள்கைகளின் தெளிவான மீறல் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *