இலங்கையின் மொத்த கடன் இருப்பு தொடர்பில் துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தகவல்!

ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த கடன் இருப்பு மற்றும் ஒட்டுமொத்த கடன் அமைப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத்தின் சிறப்பு அறிக்கை இதனை வெளிப்படுத்தியுள்ளது.

தேசிய கணக்காய்வு அலுவலகம், இலங்கையில் 2018-2022 நிதி முகாமைத்துவம் மற்றும் பொதுக் கடன் கட்டுப்பாடு தொடர்பான விசேட கணக்காய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

”இலங்கை மத்திய வங்கி (CBSL) மற்றும் பொது திறைசேரி, ஆகியவற்றின் நோக்கம் மற்றும் பொறுப்புகளை வரையறுக்கும் தெளிவாக எழுதப்பட்ட சட்டங்கள் இல்லாத நிலையில், ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த கடன் இருப்பு மற்றும் ஒட்டுமொத்த கடன் அமைப்பு ஆகியவற்றை துல்லியமாக கணக்கிட முடியாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கடன்கள், கடன் பெற்றதற்கான ஆதாரங்கள், கடன் அறிக்கைகள், கடன் சேவைகள், முக்கியமானதாகக் கருதப்பட்ட சாதனைகள் ஆகியவை ஆராயப்பட்டுள்ளன.

இதன்போது, 2017 முதல் 2021 வரையிலான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிதி மூலோபாயங்களை, அரசாங்கம் அடையத் தவறியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அதிகாரசபையின் நிதிநிலை அறிக்கை
இந்த வருடத்தில் பெறப்பட்ட கடன் நிலுவைகள், குறிப்பாக, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் எடுத்த கடன், கணக்கிடப்படாமல் இருந்தமையை இந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த கடன் அரசாங்கத்தின் அல்லது இலங்கை துறைமுக அதிகாரசபையின் நிதிநிலை அறிக்கைகளில் இடம்பெறவில்லை.

எனவே மொத்த கடன் நிலுவையை துல்லியமாக பதிவு செய்வதற்கான வழிமுறையை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை கணக்காய்வாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *