90 வயதிலும் 120 நாய்களுக்கு உணவு தயாரித்து வழங்கும் பாட்டி!

மூதாட்டி கனக்கிற்கு உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவர் காலையில் சுமார் 4:30 மணிக்கு எழுந்து 120-க்கும் மேற்பட்ட நாய்களுக்காக உணவு தயார் செய்து வருகிறார்.

மனிதர்களாகிய நாம் நாய், பூனைக் குட்டி என எதோ ஒரு விலங்கு மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்போம். மற்ற உயிர்களைவிட அறிவில் உயர்ந்த இனமாக கருதிக்கொள்ளும் நாம், அவற்றை அரவணைத்து அவற்றின் நல் வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும். இது நம் கடமையும் கூட. இந்த கடமையை நிறைவேற்ற அனைத்து உயிர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் வேண்டும். அந்த குணம் மிகச் சிலருக்கே இருக்கிறது.

விலங்குகள் மீதான அலாதி பிரியம் எந்த அளவிற்குக் கொண்டு சென்றிருக்கிறது என்றால், 90 வயதான கனக் என்ற மூதாட்டி தினமும் 120 -க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு உணவுகளை வழங்கி வருகிறாராம். கேட்பதற்கே ஆச்சரியமாக இருக்கிறதே! யார் இந்த கனக் விரிவாகப் பார்க்கலாம்.

உத்திரபிரதேசம் காசியாபாத்தில் நாய்களுக்கான அரசு சாரா நிறுவனமான பாவ்ஸ் இன் புட்லின் நிறுவனராக இருப்பவர் சனா. இவரின் பாட்டி தான் கனக் (kanak). இவருக்கு முதலில் நாய் என்றாலே பிடிக்காமல் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் தான் அவரது பேத்தி சனா, வீட்டிற்கு நாய்க்குட்டி ஒன்றையும் வாங்கி வந்துள்ளார். ஆரம்பத்தில் அதனை வெறுத்து வந்த கனக், மெல்ல மெல்ல நாய்க்குட்டி செய்யும் குறும்புத்தனத்தால் ஈர்க்கப்பட்டார். பின்னர் அதனுடன் விளையாடுவது உணவு கொடுப்பது என நாய்க்குட்டியை நேசிக்கவும் தொடங்கியுள்ளார்.

இந்த பிரியம் இதோடு நின்றுவிடாமல் நாய்கள் மீது ஒருவித அன்பையும் அந்த மூதாட்டிக்கு உருவாக்கியுள்ளது.

அவரது பேத்தியான சனா, தெரு நாய்களுக்குத் தினந்தோறும் காலையில் உணவு தயார் செய்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

இதனையடுத்து சனாவுடன் இணைந்த கனக் அதிகாலை 4:30 மணிக்கு எழுந்து சுமார் 120 தெருநாய்களுக்கு உணவு தயாரித்துக் கொடுக்கிறார். தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதனை வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.

இது தொடர்பாகப் பேசும் கனக்கின் பேத்தி சனா, தனது பாட்டியான கனக்கிற்கு உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அவர் காலையில் சுமார் 4:30 மணிக்கு எழுந்து 120-க்கும் மேற்பட்ட நாய்களுக்காக உணவு தயார் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார்.

மேலும் கனக் தயார் செய்த உணவினை, தெரு நாய்கள் உண்ணும் வீடியோவை கண்டும் கனக் மகிழ்வதாக சனா குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *